வெள்ளி, 19 ஏப்ரல், 2013

பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி





நம் எல்லாருக்கும் பல வருடங்களாக வெள்ளை அரிசிதான் தெரியும். அதுதான் சமைக்க சுலபம். வெள்ளை வெளேரென்று மெத்தென்று பார்க்கவே அழகாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும். ஆனால் சத்துக்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிலிருந்து நமக்குக் கிடைப்பது மிக மிகக் கொஞ்சம். தற்போது சிவப்பு அரிசியின் நன்மைகளை அறிந்துக்கொண்டு பல நாடுகளிலும் மக்கள் சிவப்பு அரிசியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

சிவப்பு அரிசியை தீட்டப்படாத அரிசி (unpolished) என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும் சொல்லுகிறார்கள். அதன் நிறம் பிரவுன் அல்லது சிவப்பாக இருக்கும். இதன் கெட்டியான மேல்தோல் (உமி) எனப்படுகிறது. இதற்கு அடுத்த மேல்தோல் மெல்லியதாக பிரவுன் நிறத்தில் இருக்கும் இந்த மேல்தோல் தவிடு எனப்படுகிறது. நாம் சாப்பிடும் வெள்ளை அரிசி மறுபடி மறுபடி தீட்டப்பட்டு அத்தனை சத்துக்களும் இழந்த பின் கிடைப்பது.

 இந்த சிவப்பு அரிசி ஓர் முழு தான்யமாக இருப்பதை தவிர, நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நார்சத்து நிறைந்து இருப்பதுடன், சுலபமாக செரிக்கக்கூடிய மாவுச்சத்தும் இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது.

இந்த நார்சத்து புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பார்த்துக் கொள்ளுவதால், கோலோன் புற்றுநோய் தடுக்கப் படுகிறது.

மேலும் மலக்கட்டு ஏற்படாமல், மலம் சுலபமாக வெளியேறவும் உதவுகிறது.

இதில் இருக்கும் கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

 ஒரு கிண்ணம் சிவப்பு அரிசியில் நமக்கு தினப்படி வேண்டிய 8% மாங்கநீசும் (magnesium) 14% நார்சத்தும் கிடைக்கிறது.

புளிக்க வைக்கப்பட்ட சிவப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக்குழாய் மற்றும் இரத்தப் புற்று நோய்கள் வராமல் காக்கக்கூடிய தன்மைகள் இருக்கின்றன.

சமைக்கும் முறை:

வெள்ளை அரிசியைவிட சமைப்பதற்கு அதிக நேரம் ஆவதால் சாதம் செய்வதற்கு முன் 30-40 நிமிடங்கள் ஊறவைப்பது நல்லது. சாதம் செய்யும் போது ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு நீர் ஊற்றலாம்.

வெள்ளை அரிசியில் செய்வது போலவே இதிலும் பயத்தம்பருப்பு சேர்த்து பொங்கல் செய்யலாம். செய்முறை அதே போலத்தான்.

சிவப்பு அரிசியில் செய்யும் தோசையும் மிக ருசியாக இருக்கும். 2½ கிண்ணம் அரிசிக்கு ½ கிண்ணம் உளுத்தம்பருப்பு என்ற அளவில் சிறிது வெந்தயமும் சேர்த்து அரைத்து இரவு புளிக்க வைத்து மறுநாள் செய்யலாம்.

கடைசியாக ஒரு குறிப்பு:

இந்த அரிசியிலிருந்து எண்ணெய் எடுக்கப் படாததால் சீக்கிரமே கெட்டுப் போய்விடக் கூடிய வாய்ப்புகள் அதிகம். வாங்கும்போது காலாவதியாகும் தேதி பார்த்து வாங்கவும்.




திங்கள், 1 ஏப்ரல், 2013

அட! இது நம்ம தினம்!



இன்று நம்  எல்லோருக்கும் மிகப் பிடித்தமான தினம்; நம்மை நாமே கொண்டாடிக் கொள்ளும் தினம். முட்டாள்கள், முட்டாள்களை முட்டாள்கள் ஆக்கி மகிழும் தினம். இப்போது புரிந்திருக்குமே? ‘All Fools Day’ என்று அழைக்கப்படும் ஏப்ரல் 1 ஆம் தேதியைப் பற்றித்தான் சொல்ல வருகிறேன். 

எல்லோருமே ஜாலியாக சிரித்துக் கொண்டு ஒருவரையொருவர் சீண்டிகொண்டு நாம் முட்டாள்கள் தான் என்பதை ஒப்புக் கொள்ளவே இந்த தினம். இதை யாருமே தவறாக புரிந்து கொள்ளுவதோ  அல்லது அடுத்தவர் நம்மை முட்டாளாக்கியவுடன்  ‘விட்டேனா பார்’ என்று ஆத்திரமடைவதோ கூடாது.

அதேபோல முட்டாள் ஆக்க விரும்புவோர் அடுத்தவரது மனம் புண்படாமல் அதே சமயம் ‘ஓ! இந்தச் சின்ன விஷயத்தில் ஏமாந்து விட்டோமே என்று அவர் வாய்விட்டு சிரிக்கும்படியாக விளையாட வேண்டும். விளையாட்டு மட்டும்தான் குறிக்கோளாக இருக்கவேண்டும். எல்லை மீறாமல் இருந்தால் தொல்லைகள் இல்லை, அல்லவா?

சரி இந்த முட்டாள்கள் தினம் எப்படி வழக்கத்தில் வந்தது?

ஐரோப்பியர்கள் பல நூற்றாண்டுகளாக ஜூலியன் நாட்காட்டியைத்தான் பயன்படுத்தி வந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் நடுவில் கிரிகோரியன் நாட்காட்டி புழக்கத்தில் வந்தது. பழைய நாட்காட்டியின்படி ஏப்ரல் மாதத்தில்தான் புது வருடம்  ஆரம்பம். ஆனால் புதிய நாட்காட்டியில் ஜனவரியிலிருந்து புது வருடம் கணக்கிடப்பட்டது. இந்த மாற்றம் பல குழப்பங்களை உண்டு பண்ணியது. யாரெல்லாம் பழைய பஞ்சாங்கமாக இருந்தார்களோ அவர்கள் ‘முட்டாள்கள்’ என்று முத்திரை குத்தப் பட்டார்கள். காலப்போக்கில் இந்த தினம் மற்றவர்களை விளையாட்டாக, வேடிக்கையாக முட்டாள் ஆக்கும் தினமாக மாறி இன்றுவரை நிலைத்துவிட்டது.

இன்னொரு கதையும் வழக்கில் இருக்கிறது. ரோமானிய அரசன் கான்ஸ்டன்டைன் என்பவனது ஆட்சி பலத்த சர்ச்சைக்கு உள்ளானபோது, அவன் தனது அரசவை கோமாளி கூகல் என்பவனையும், தனது பழங்குடியினரையும் ஒரு நாள் நாட்டை ஆளச் சொன்னானாம். கோமாளிகள் உண்மையில் மிகுந்த புத்திசாலிகள்; வாக்கு சாமர்த்தியத்துடன் கூடிய வேடிக்கை பேச்சுக்கள் பேசுவதில் சமர்த்தர்கள். ஆனாலும் அவர்களை அந்தக் காலத்தில் முட்டாள்கள் என்று அழைப்பது வழக்கமாக இருந்தது. கோமாளிகள் ஆட்சி செய்த அந்த ஒருநாள் தான் All Fools Day. அப்போதிலிருந்து இந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி ‘முட்டாள்கள்’ தினமாக உலகெங்கிலும் மிகப் பெரிய உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.



இந்த  ‘முட்டாள்கள்’ தினத்தில் நாம் முட்டாள்கள் ஆனாலும் சரி, பிறரை முட்டாள்கள் ஆக்கினாலும் சரி, மனம் புண்படாமல் பண்பாக விளையாடுவோம்.

முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!




published in ooooor.com 31.3.12

ஞாயிறு, 17 மார்ச், 2013

ஆலிவ் ஆயில்





அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். உள்ளத்தில் நல்ல எண்ணம் இருந்தால் அது நம் முகத்தை பொலிவுறச் செய்யும் என்பது பொருள். நமது உள்ளழகு, வெளியழகு இரண்டுக்கும் ஆலிவ் ஆயில் மிகச் சிறந்தது. ஆலிவ் ஆயிலை சமையலுக்குப் பயன்படுத்துவதால் நமது உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்; அழகு சாதனமாக பயன் படுத்துவதால் வெளி உறுப்புக்களும் பொலிவடையும். ஆக, அகத்தின் அழகு, முகத்தின் அழகு இரண்டுக்கும் ஆலிவ் ஆயில் ஏற்றது என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், மருந்து தயாரிப்பிலும், சோப் செய்யவும் இந்த ஆயில் பயன்படுத்தப்படுகிறது. பழங் காலங்களில் விளக்கு ஏற்றவும் இந்த எண்ணையை உபயோகித்தனர்.

ஆலிவ் ஆயிலின் பூர்விகம்:

உலகம் முழுவதும் இந்த ஆயில் பயன்படுத்தப்பட்டாலும், மத்திய தரைக் கடல் நாடுகளிலேயே அதிகம் உபயோகப்படுத்தப் படுகிறது.  அங்கு  அதிகமாகக் காணப்படும் ஆலிவ் மரத்திலிருந்து ஆலிவ் ஆயில் தயாரிக்கப்படுகிறது. கிரேக்க கவி ஹோமர் இந்த எண்ணையை “திரவத் தங்கம்” என்று குறிப்பிடுகிறார். வெறும் சமையல் பொருளாக மட்டுமில்லாமல், இந்த எண்ணெய் மருத்துவ குணமுடையதாகவும் மாய மந்திர சக்தி உடையதாகவும் நம்பப் படுகிறது. விளையாட்டு வீரர்கள் தங்கள் உடம்பில் இந்த எண்ணையை தடவிக் கொள்ளுகிறார்கள்; இந்த எண்ணெய் சக்தியையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் உற்சாக ஊற்றாக கருதப்படுகிறது.

ஆலிவ் மரம்:

பல நூறு ஆண்டுகள் வாழும் இம்மரங்களின் வேர்கள் ஆழமாகவும் பரந்து விரிந்து இருப்பதால் தண்ணீர் குறைந்த இடங்களிலும், கடற் பகுதிகளிலும் (நிலத்தடி நீர் மிகுந்த உப்பு நிறைந்ததாக இருந்தபோதிலும்) செழித்து வளருகின்றன. குளிர் காலத்தில் இலைகளை கத்தரித்து விடுகிறார்கள். இதைத் தவிர வேறு எந்த பராமரிப்பும் இந்த ஆலிவ் மரங்களுக்கு தேவை இல்லை. இலையுதிர் காலத்தில் ஆலிவ் பழங்கள் அறுவடைக்குத் தயாராகின்றன. பழங்களை சேகரிப்பதும், அவற்றிலிருந்து எண்ணெய் எடுப்பதும் மிக எளிய முறையில் செய்யப்படுகிறது.
உலகத்தின் 75 சதவிகித ஆலிவ் ஆயில் தயாரிப்பில் முதல் இடத்தை ஸ்பெயின் நாடும், இரண்டாவது இடத்தை இத்தாலி நாடும், மூன்றாவது இடத்தை கிரீஸ் நாடும் பிடித்திருக்கின்றன. இப்போது ஆஸ்திரேலியாவும் கணிசமான அளவு இந்த ஆயிலை தயாரித்து வருகிறது.

ஆலிவ் ஆயில்:

அதிகக் கொழுப்பு, அதிக கலோரி  இருந்தாலும், இந்த எண்ணெய் உடல் ஆரோக்யத்திற்கு மிக நல்லது. இதை பாதுகாப்பதும் எளிது. நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கக் கூடியது.
ஆலிவ் ஆயிலின் MUFA (mono unsaturated fatty acid) கெட்ட கொழுப்புகளையும், டிரைகிளிசரைட்ஸ் (triglycerides) ஆகிய வகைகளையும் குறைக்கவல்லது . உயர் இரத்த அழுத்தம், இதய நோய் முதலியவற்றைக் கட்டுப்படுத்த இந்த ஆயில் உதவுகிறது.

1. ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கும், கேசத்திற்கும்  போஷாக்குஅளிக்கிறது.
2. ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த அளவில் போலிக் ஆசிட் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப்  புற்றுநோய்
இருப்பவர்களுக்கு மருந்தாகவும்  உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
3. ஆலிவ் ஆயிலில் இருக்கும் திறன் வாய்ந்த  வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டேன் மேலும் சில ஆன்டி ஆக்சிடேன்ஸ் கேன்சர் வரமல் தடுக்க உதவுகிறது.
4. சர்க்கரை நோயைக் கட்டுப்பத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும் கட்டுப்பத்துகிறது.

ஆலிவ் ஆயிலின் வகைகள்:

எக்ஸ்ட்ரா விர்ஜின்: (extra virgin): அதிகப் பக்குவப்படுத்தப் படாத, (சூடாக்காமல், அமிலங்கள் கலக்காமல்) முதல் தடவை பிழிந்தவுடன் கிடைக்கும்  எண்ணெய். சுத்தமான, இயற்கையான ஆலிவ் வாசனையுடன் இருக்கும் எண்ணெய்.

விர்ஜின்: இரண்டாம் முறை பிழியும்போது கிடைக்கும் எண்ணெய்.

ப்யூர்:  வடிகட்டுதல் மற்றும் சில சுத்திகரிப்புக்கு உட்பட்டது.

எக்ஸ்ட்ரா லைட்: மறுபடி மறுபடி சுத்திகரிக்கப்பட்டும், சிறிது விர்ஜின் ஆயில் சேர்க்கப்பட்டதும் ஆன எண்ணெய் இது. மிக சிறிதளவே ஆலிவ்வின் வாசனை இதில் இருக்கும்.

ஆலிவ் ஆயிலை பாதுகாக்கும் முறைகள்:

அதிக உஷ்ணம், அதிக வெளிச்சம் இரண்டும் இந்த எண்ணைக்கு எதிரிகள். மிக அழகான புட்டிகளில் கிடைப்பதால் மிக கவனத்துடன் பாதுகாப்பது அவசியம். புட்டிகளை அழுத்தி மூடி, அதிக உஷ்ணம், அதிக வெளிச்சம் படாத இடத்தில் வைக்கவும். மற்ற எண்ணெய்களைப் போலவே அதிக சூடு, காற்று இவற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆலிவ் ஆயிலும் இந்திய சமையல் முறைகளும்:

ஆலிவ் ஆயில் நம் சமையலுக்கு ஏற்றதா? இல்லை என்று சொல்லுபவர்கள் கூறும் காரணங்கள்:
ஆலிவ் ஆயிலின் வாசனை நமக்குப் பிடிக்காத ஒன்று.
நாம் சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் முதலில் அதை சூடாக்கிவிட்டுத்தான் பயன்படுத்துவோம். சில சமயங்களில் பச்சை எண்ணையை (இட்லிக்கு மிளகாய் பொடியும், நல்லெண்ணையும்) உபயோகிக்கிறோம். எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை பச்சையாக பயன்படுத்துவது சிறிது கஷ்டம்.

இந்த எண்ணையில் சமைத்த பொருட்களை சாப்பிட்டவுடன் வயிறு பாரமாக இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

இத்தகைய எண்ணங்கள் காரணமாக போமஸ் (pomace) என்ற வகை ஆலிவ் ஆயிலை இந்தியச் சந்தையில் விற்கிறார்கள். இது சுத்தமான ஆலிவ் ஆயில் அல்ல. எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயிலை எடுத்தபின் இருக்கும் கழிவுகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணையை சுத்தம் செய்து சாப்பிடும் தரத்தில் தயாரித்து போமஸ் என்று விற்கிறார்கள். இந்த எண்ணையை நாம் இப்போது பயன்படுத்தும் மற்ற எண்ணெய்களைப் போலவே உபயோகிக்கலாம். 

ஆலிவ் ஆயிலை காய் கறிக் கலவை (vegetable salad) மற்றும் உணவு சமைத்தபின் அதை பரிமாறுவதற்கு முன் அதன் மேல் dressing செய்வதற்கும் பயன்படுத்தலாம். ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதால் இந்திய சமையல் முறையே மிக ஆரோக்கியமானதாகிவிட்டது என்றும் சொல்லலாம்.

‘Eat locally, think globally’ என்ற கொள்கை உடையவர்கள் நம்மூர் சூரிய காந்தி எண்ணையையே உபயோகிக்க விரும்புகிறார்கள்.



புதன், 13 மார்ச், 2013

கடவுளுடன் ஒரு உரையாடல்


கடவுள்: ஹலோ! என்னை கூப்பிட்டாயா?

மனிதன்: கூப்பிட்டேனா? உன்னையா? இல்லையே? யார் நீ?

கடவுள்: நான்தான் கடவுள். உன் பிரார்த்தனை காதில் விழுந்தது; பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.

மனிதன்: நீ சொல்லுவது சரி. நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன். அது என் மனதுக்கு பிடித்திருக்கிறது; இப்போது எனக்கு பேச அவகாசமில்லை; வேலையில் மும்முரமாக இருக்கிறேன்.

கடவுள்: எறும்பு கூடத்தான் வேலையில் மும்முரமாக இருக்கிறது.

மனிதன்: எறும்பு ஈயைப் பற்றி எனக்குத் தெரியாது; எனக்கு இப்போது உன்னுடன் பேச அவகாசம் இல்லை; வாழ்க்கை மிகவும் அவசரமானதாகி விட்டது; எப்போதுமே அவசரம் தான்; எப்போதும் நெருக்கடி தான்.

கடவுள்: உண்மைதான். ஏதாவது செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கை மும்முரம் தான். செயல்பாடு உன்னை மேலும் மேலும் உழைக்கச் செய்கிறது; உழைப்பினால் கிடைக்கும் பலன் உனக்கு நல்ல முடிவுகளைக் கொடுக்கிறது. உழைக்கும்போது நேரத்திற்கு அடிமையாகும் நீ, பலனை அனுபவிக்கும் போது அந்த அடிமைத்தனத்தில் இருந்து  விடுபடுகிறாய்.

மனிதன்: நீ சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனாலும் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று சரிவர புரிவதில்லை. அது இருக்கட்டும்; இணையதள உடனடி தகவல் chat-ல் நீ என்னைக் கூப்பிடுவாய் என்று எதிர்பார்க்கவில்லை.

கடவுள்: என்ன செய்வது? நீ நேரத்துடன் போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து உதவலாம் என்று வந்தேன். சில விஷயங்களை தெளிவுபடுத்த ஆசைப் பட்டேன். இது இணையதளத்தால் செய்யப்பட உலகம் ஆகிவிட்டது. இணையதளத்தை விட்டுப் பிரியாமல் இருக்கும் உன்னை இணையதளம் மூலமாக சந்திக்க வந்தேன்.

மனிதன்: சரி, என் கேள்விகளுக்கு பதில் சொல்லு. ஏன் வாழ்க்கை சிக்கலாக இருக்கிறது?

கடவுள்: முதலில் வாழ்க்கையை அலசி அலசிப் பார்ப்பதை நிறுத்து. வாழ்க்கையை வாழ கற்றுக் கொள். ரொம்பவும் அலசுவதால் தான் வாழ்க்கை சிக்கலாகிறது.

மனிதன்: நாங்கள் ஏன் எப்போதுமே வருத்தத்தில் இருக்கிறோம்? சந்தோஷம் என்பதே இல்லையா?

கடவுள்: நேற்று நீ கவலைப் பட்ட நாளை என்பது தான் இன்று - இந்த நாள். இந்த நாளை வாழாமல் நாளையைப் பற்றிக் கவலைப் படுவதே உன் வழக்கமாகிவிட்டது. அதனால் வருத்தமே வாழ்க்கை ஆகிவிட்டது.

மனிதன்: ஆனால் வாழ்க்கை என்பதே நிச்சயமில்லாத போது வருத்தப் படாமல் என்ன செய்வது?
கடவுள்: நிச்சயமின்மை என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் வருத்தப் படுவது நீ தெரிவு செய்வது.

மனிதன்: நிச்சயமின்மையால் வாழ்வில் எத்தனை வலிகள்......

கடவுள்: வலிகள் தவிர்க்கமுடியாதவை; அதனால் ஏற்படும் துன்பம் தவிர்க்கப்பட வேண்டும்.

மனிதன்: துன்பம் தவிர்க்கப் படவேண்டுமானால்  மக்கள் ஏன் துன்ப படுகிறார்கள்?

கடவுள்: வைரத்தை உரசாமல் மின்ன வைக்க முடியாது; தங்கத்தை நெருப்பில் புடம் போடாமல் சுத்தப் படுத்த முடியாது. நல்லவர்கள் வாழ்க்கையில் சோதனைக்கு ஆட்படுவார்கள். ஆனால் துன்ப பட மாட்டார்கள். சோதனைகள் அவர்கள் வாழ்க்கையை  வளமாகும். நலிவடையச் செய்யாது.

மனிதன்: இந்த வருத்தப் பட வைக்கும் அனுபவங்கள் எங்களுக்குத் தேவையா?

கடவுள்: ஆமாம். அனுபவம் ஒரு தேர்ந்த ஆசிரியை. முதலில் பரீட்சை வைப்பாள். பிறகு பாடம் கற்றுத் தருவாள்.

மனிதன்: ஆனால் நாங்கள் ஏன் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு ஆளாக  வேண்டும். கவலைகளில் இருந்து விடுதலை அடைய முடியாதா?

கடவுள்: வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் உனக்கு பயன் தரக் கூடியவை. பாடம் புகட்டக் கூடியவை. அவை உன்னைப் புடம் போட்டு உன்னை எல்லா வகையிலும் மேம்படச் செய்கின்றன. மனவலிமை படைத்தவனாக ஆக்குகின்றன. மன வலிமை போராட்டங்களிலிருந்தும், சகிப்புத் தன்மையிலிருந்தும் வருகிறது. உனக்கு பிரச்சினைகள் இல்லாத போது இவை உனக்குக் கிடைப்பதில்லை.

மனிதன்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவில் நாங்கள் எங்கே போகிறோம் என்பதே புரியவில்லை.

கடவுள்: நீ உனக்கு வெளியில் பார்த்தால், நீ எங்கே போகிறாய் என்று தெரியாது. உனக்கு உள்ளே பார். வெளியில் பார்ப்பது கனவு காண்பது போல. உள்ளே பார்ப்பது உனக்குள் ஒரு விழிப்பை ஏற்படுத்தும். கண்கள் பார்வையைக் கொடுக்கும். மனம் விழிப்புணர்வை உண்டாக்கும்.

மனிதன்: சில சமயங்களில் சரியான பாதையில் போகிறோமா என்பதை விட, சீக்கிரம் வெற்றி பெறவில்லையே என்பது மிகவும் வலிக்கிறது.

கடவுள்: வெற்றி என்பது பிறர் உன்னைப் பற்றி அறிய உதவும்  ஒரு அளவுகோல். திருப்தி என்பது உன்னால் தீர்மானிக்கப் படுகிறது. நீ போகும் பாதையைத் தெரிந்து கொள்ளுவது உனக்கு அதிகத் திருப்தியைக் கொடுக்கும். நீ திசை காட்டியை வைத்துக் கொண்டு வேலை செய். மற்றவர்கள் கடியாரத்தை வைத்துக் கொண்டு வேலை செய்யட்டும்.

மனிதன்: கடினமான நேரத்திலும் நான் எப்படி உற்சாகம் குறையாமல்  இருப்பது?

கடவுள்: எப்போதும் நீ எத்தனை தூரம் பயணித்து இருக்கிறாய் என்று பார். இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்று யோசிக்காதே. உனக்குக் கிடைத்த நல்லவற்றை எண்ணிப் பார். எதையெல்லாம் இழந்தாய் என்று எண்ணாதே.

மனிதன்: நான் எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேனோ அதையே சொல்லுகிறாய். மனிதனின் எந்த குணம் உனக்கு வியப்பூட்டுகிறது?

கடவுள்: கஷ்டங்கள் வரும்போது எனக்கு ஏன் என்று சொல்லுபவர்கள் சுகப் படும் போது எனக்கு ஏன் என்று கேட்பதே இல்லை. ஒவ்வொருவரும் தன் பக்கத்தில் உண்மை இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களே தவிர உண்மையின் பக்கத்தில் அவர்கள் இருக்க ஆசைப் படுவதில்லை.

மனிதன்: வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை எப்படி அடைவது?

கடவுள்: நடந்து போனவைகளைப் பற்றி வருந்தாதே. இன்றைய நாளை தைரியமாக எதிர் கொள்; இன்றைய நாள் நல்ல நாள் என்ற நம்பிக்கை இருக்கட்டும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல் வரப் போகும் வாழ்க்கைக்கு உன்னை தயார் செய்து கொள்.

மனிதன்: கடைசியாக ஒரு கேள்வி: சிலசமயங்களில் ஏன் பிரார்த்தனைகளுக்குப் பதில் கிடைப்பது இல்லையே, ஏன்?

கடவுள்: பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை. சில சமயங்களில் பதில் ‘இல்லை’ என்றும் இருக்கலாம்;

மனிதன்: உனக்கு பல கோடி வந்தனங்கள். உன்னுடன் பேசிக் கொண்டே ஒரு புது நாளைத் தொடங்குகிறேன். ஒரு புதிய உற்சாகம் பிறந்திருக்கிறது.

கடவுள்: நல்லது. நம்பிக்கையை வளர்த்துக் கொள். பயத்தை விட்டுவிடு. உன்னுடைய சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கைகளை சந்தேகப் படாதே.வாழ்க்கை என்பது புதிர் அல்ல; விடுவிப்பதற்கு. பிரச்சினையும் அல்ல, விடை  கண்டுபிடிக்க. என்னை நம்பு. வாழ்க்கை என்பது மிக அழகானது அதை வாழத் தெரிந்தவர்களுக்கு!


oorooo.com பதிவு 

ஞாயிறு, 10 மார்ச், 2013

பெண்களுக்கு இதய நோய்


பல ஆண்டுகளாக பெண்களுக்கு இதய நோய் வர வாய்ப்பில்லை என்றே நம்பிக்கொண்டிருந்தோம். இதில் சிறிதளவு உண்மையும் இருக்கிறது. பெண்களுக்கு இயற்கையாகவே சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன், மெனோபாஸ் என்கிற இறுதி மாதவிடாய் வரும் வரை பெண்களை இதய நோயிலிருந்து காப்பாற்றுகிறது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களும் இறுதி மாதவிடாயை நெருங்கி கொண்டிருக்கும் பெண்களும் இந்த ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இதய நோய்க்கு ஆளாவது தற்சமயம் தெரியவந்துள்ளது. இந்த இதய நோயின் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்று நோய் ஆகியவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதாக பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
அறிகுறிகள்:
இந்த நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரணமானவையாய் இருப்பதால் பலர் அவற்றை புறக்கணிக்கிறார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறு வேறு விதமான அறிகுறிகள் தோன்றுகின்றன. பல சமயங்களில் பெண்களுக்கு மார்பு வலி ஏற்படுவதில்லை. ஆனால் அதீத களைப்பு, தடைப்பட்ட தூக்கம், சாதரணமாக நிற்கும் போதோ, நடக்கும் போதோஏற்படும் மூச்சு திணறல்,அஜீரண கோளாறு, மனச்சோர்வு, நெஞ்செரிச்சல், கழுத்து, மேல் முதுகு, மற்றும் தோள்பட்டை பகுதியில்  ஏற்படும் ஒருவித அசௌகரியம், அதீத வியர்வை, மயக்கம், குமட்டல், வாந்தி  ஆகியவை கூட இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றுடாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
இது பரம்பரை நோய் என்றாலும், உயர் இரத்தஅழுத்தம், அதிக கொழுப்பு, சர்க்கரை நோய், புகை பிடித்தல்  ஆகியவையும் இந்த நோய் ஏற்பட காரணங்களாக கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு (cholesterol)  உள்ளவர்கள் மாதம் ஒருமுறை மருத்துவரிடம் சென்று பரிசோதனை  செய்து கொள்ளுவது மிகவும் முக்கியம்.சர்க்கரை, இரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளுவது மிக மிக முக்கியம்.
மாரடைப்பு நோய் என்பது என்ன?
இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் குழாயில் ஏற்படும் அடைப்பால் இதயத்திற்கு வரும் இரத்தம் குறைந்து அதனால் இதய தசைகள் பலவீனப்பட்டு விடுகின்றன. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. அல்லது இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, திடீரென்று தோன்றும் இரத்தக்கட்டி இவற்றாலும் மாரடைப்பு உண்டாகிறது.
இதய நோய் என்பது  நாம் நடத்தும் வாழ்க்கை முறையை ஒட்டி வரக்கூடிய   நோய் (lifestyle disease) என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தற்சமயம் ஆண்களும், பெண்களும் உடல் உழைப்பு என்பதே இல்லாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்தநிலையில் வேலை செய்வது சகஜமாகிவிட்டது. சரியான உடற்பயிற்சி, சரியான நேரத்தில் சாப்பாடு, சரியான தூக்கம் என்பது பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. இவையெல்லாம் கூட இதய நோய் சிறிய வயதிலேயே வர காரணங்கள்.
இதைத் தவிர மனஅழுத்தம் நமது ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கிறது. யோகா அல்லது ப்ராணாயாமம் எனப்படும் சுவாசப் பயிற்சி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. சரியான பயிற்சியாளரிடம் முறையான பயிற்சி பெற்று இவற்றை வீட்டில் அமைதியான சூழ்நிலையில் தொடர்ந்து செய்துவருவது அவசியம்.
உங்கள் வீட்டில்உங்கள் அப்பாவிற்கோ, அம்மாவிற்கோ இதய நோய் இருந்து, நீங்களும் 30 வயதுக்கு மேற்பட்டவரானால்  உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். உடற் பயிற்சி தினமும் அவசியம்.உங்களது வாழ்க்கை முறையை சின்ன சின்ன அளவில் மாற்றிக் கொள்ளுங்கள். என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுவது மிக அவசியம். சிறிய மாற்றங்கள் கூட இதய நோயை தவிர்க்க உதவும்.
தினமும் காலையில்நடை பயிற்சி செய்யுங்கள். இளைய தலைமுறை ஆண்களும் பெண்களும் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு என்று நேரம் ஒதுக்குவது மிக அவசியம்.
புகைபிடிப்பவர்கள் அதை நிறுத்த முயற்சி செய்யலாம். புகை பிடிப்பதை நிறுத்துவதனால் காசும் மிச்சம்; உடல் ஆரோக்கியமும் காப்பாற்றப்படும்.
துரித உணவு வகைகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு போஷாக்கு நிறைந்த உணவுவகைகளை உட்கொள்ளுதல் நலம். பச்சை காய்கறிகளும் பழங்களும் நிறைந்த உணவு மிகுந்த நன்மையை உண்டாக்கும்.
அலுவலக வேலையை, அலுவலக கவலைகளை  வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தை இனிமையாக கழிப்பது மனதிற்கு சாந்தியைக் கொடுக்கும். வாரக் கடைசி நாட்களை குடும்பத்துடன் வெளியில் சென்றோ அல்லது நிம்மதியாக ஓய்வு எடுத்தோ செலவிடுங்கள்.
நமது வாழ்வில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இதய நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளமுடியும். பல நவீன மருந்துகள், மருத்துவ முறைகள் நம் வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன. இதய நோய் பற்றியஅறிவு, விழிப்புணர்வு இரண்டும் மிக முக்கியம்.
வருமுன் காப்பது என்பது எப்போதுமே நல்லது. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். அதைப் போல வாழ்க்கை ஆனந்தமாக இருக்க நல்ல ஆரோக்கியம் என்பது அத்யாவச்யமான ஒன்று. உடல் நலம் பேணுவது நம் எல்லோருடைய முதற் கண் கடமை ஆகும்.
பெண்கள் ஒரு குடும்பத்தின் அச்சாணி போன்றவர்கள். குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களின் ஆரோக்கியத்தை பேணும் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுவது அவசியம்.

வெள்ளி, 1 மார்ச், 2013

உப்பில்லாத பண்டம் குப்பையிலே



சிறு வயதில் படித்த பழமொழி. தற்சமயம் எல்லோருடைய வீட்டிலும் அதிக இரத்த அழுத்தம் நோய்  யாரேனும் ஒருவருக்காவது இருக்கிறது. அதனால் உப்பைக் குறைத்துகொள்ளும்படி மருத்துவர் கூறுகிறார். அதிக இரத்த அழுத்தத்தால் ஒருவர் படும் அவதி, அந்த வீட்டில் இருக்கும் எல்லோரையுமே பாதி உப்பு சாப்பிடும்படி செய்துவிடுகிறது. யாருக்கு என்ன ஆனாலும் சரி "என்னால் உப்பைக் குறைக்க முடியாதப்பா" என்று சொல்லுபவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக் குறைக்கவேண்டும் என்றால், சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை உப்பு தேவை?

உப்பில் அதிகப்படி இருப்பது சோடியம் குளோரைடு. உணவிற்கு ருசி கூட்டுவதுடன் நம் உடலுக்குத் தேவையான சோடியத்தையும் கொடுக்கிறது. உப்பு அதிகம் எடுத்துக் கொள்ளுவதால் அதிக இரத்த அழுத்தம், பக்க வாதம், உடம்பில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், சுண்ணாம்பு சத்துக் குறைவு முதலிய உபத்திரவங்கள் உண்டாகும்.

பல சமயம் உப்பு மற்றும் சோடியம் இரண்டும் மாறி மாறி ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. இது தவறு. உப்பு என்பது வேறு; சோடியம் என்பது வேறு.  உப்பில் 40% சோடியம் 60% குளோரைடும் இருக்கிறது. உடம்பில் உள்ள நீரின் அளவு சமமாக இருக்கவும், தசைகள் சுருங்கி விரியவும் சோடியம் தேவை.

நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஆறு கிராம் உப்பு போதுமானது. அதாவது ஒரு டீஸ்பூன். இதற்கு குறைவாக உபயோகித்தாலும் நல்லதுதான். இதற்கு அதிகமான உப்பு எடுத்துக் கொள்ளுவது நாட்பட்ட நோய்களை உண்டாக்கும்.

நம்மூரில் சராசரியாக ஒருவர் 10 முதல் 12 கிராம் உப்பு ஒரு நாளைக்கு பயன்படுத்துகிறார். இது மிக மிக அதிகம் ஆகும். மெது மெதுவே உப்பைக் குறைப்பது நல்லது. ரொம்பக் கொஞ்சமாக உப்பு சாப்பிடுவதும் தவறு. உப்பு குறைந்தால் தசைப் பிடிப்பு ஏற்படும். மற்றும் electrolytes எனப்படும் மின் அயனிகளின் ஏற்றத் தாழ்வுக்கும் குறைவான உப்பு காரணமாகும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது மிகுந்த கவனம் தேவை. இவற்றில் பொட்டாஷியம் குறைவாகவும் சோடியம் அதிகமாகவும் இருக்கும். இதனால் இந்த உணவுப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டால் அதிக இரத்த அழுத்த நோய் வர வாய்ப்பு இருக்கிறது. ஊறுகாய், உப்பு பிஸ்கட், வறுத்த உப்பு சேர்த்த முந்திரி, வெண்ணை, சீஸ், சாஸ், உருளைக் கிழங்கு சிப்ஸ் முதலியவற்றை மிதமாக உண்ணுங்கள். முடிந்தால் அறவே தவிர்த்து விடுவது நல்லது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மேல் உள்ள அட்டவணையில், எந்த அளவு உப்பு இருக்கிறது என்று பார்த்து பிறகு இவைகளை வாங்குங்கள்.  உணவிற்கு ருசி கூட்ட வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றை அதிகம் பயன்படுத்தி உப்பைக் குறைக்க முயற்சிக்கலாம். திடீரென்று உப்பைக் குறைப்பது கடினம்தான். ஆனால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று வரும்போது, முயற்சி செய்வதில் தவறில்லையே?

உப்பு எப்படி நம் எடையை பாதிக்கிறது என்று பார்க்கலாமா?
உப்பு ஒரு கலோரி இல்லாத ஒரு பண்டம். "நாங்கள் சொல்லும் உணவை சாப்பிட்டால் ஒரே மாதத்தில் கொடி இடையைப் பெறலாம்" என்று விளம்பரம் செய்கிறார்களே, இவர்கள் உப்பு குறைவான அல்லாத உப்பே இல்லாத உணவையே சாப்பிடச்சொல்லுகிறார்கள். உப்பு குறைத்துச் சாப்பிடுவதால் உடம்பில் இருக்கும் நீர் குறைகிறது எடையும் குறைகிறது. மறுபடியும் நீங்கள் உப்பு சேர்த்த உணவை சாப்பிடும்போது எடையும் கூடுகிறது. இது போன்ற 'diet' வேண்டவே வேண்டாம்.

நாமே தினசரி உப்பைக் குறைப்பது எப்படி என்று பார்க்கலாம்:
  • ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவில் அதிகப்படி உப்பு சேர்க்க வேண்டாம்.
  • சிலர் தயிர் சாதத்திற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுவார்கள். சில வீடுகளில் சாதம் சமைக்கும்போது அதில் உப்பு சேர்க்கும் பழக்கம் இருக்கிறது. இவற்றைத்  தவிர்க்கலாம்.
  • தினமும் சப்பாத்தி சாப்பிடுபவரா நீங்கள்? சப்பாத்தி மாவில் உப்பு சேர்க்க வேண்டாம். அதற்கு தொட்டுக் கொள்ள செய்யப்படும் பொரியல், கூட்டு இவற்றில் இருக்கும் உப்பு போதுமானது.
  • உப்பை குறைக்க மருத்துவர்கள் சொல்லும் வழி: சமைக்கும்போது சாம்பார், பொரியல் இவற்றில் உப்பு சேர்க்க வேண்டாம். ஒரு டீஸ்பூன் தலை தட்டி உப்பு எடுத்து வைத்துக் கொண்டு நீங்களாகவே சாம்பார், பொரியல் இவற்றை உங்கள் தட்டில் போட்டுக் கொண்டு அவற்றிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த அளவு உப்புதான் ஒரு நாள் முழுவதற்கும் என்பதை நினைவு வைத்துக் கொள்ளவும்!
கடைசியாக ஒன்று:
மாதத்திற்கு ஒரு நாள் உப்பில்லாமல் சாப்பிடலாம். கும்பகோணம் அருகில் ஒப்பிலியப்பன் என்கிற பெருமாள் கோவில் இருக்கிறது. அந்த சந்நிதியில் பெருமாளுக்கு தினமுமே உப்பு இல்லாமல் தான் தளிகை செய்கிறார்கள். பிரசாதம் எதிலும் உப்பு கிடையாது. நாச்சியாரை பெருமாள் திருக்கல்யாணம் செய்துகொண்ட போது நாச்சியார் மிகச் சிறிய வயதுடைய பெண்ணாக இருந்ததால் அவளது தந்தையார் "என் பெண்ணுக்கு உப்புப் போட்டு தளிகை செய்யத்தெரியாது" என்று பெருமாளிடம் சொல்ல, நாச்சியாருக்காக பெருமாள் "உப்பில்லாமல் சாப்பிடுகிறேன்" என்று சொன்னதாக வேடிக்கையாக ஒரு கதை வழக்கில் இருக்கிறது. அதனால் பெருமாளுக்கு "உப்பிலியப்பன்" என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது. பெருமாளே தினமும் உப்பு இல்லாமல் சாப்பிடும் போது நாம் அவரை நினைத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று உப்பில்லாமல் சாப்பிடலாம்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

எடைக் குறைப்பும் தூக்கமும்:



"மத்தியானத் தூக்கம் உடல் எடையை அதிகரிக்கும்."

"தூங்கித் தூங்கியே குண்டாகி விட்டாள் அல்லது விட்டான்."

"அதிகத் தூக்கம் நல்லதல்ல"

பலமுறை இப்படி பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தூக்கத்திற்கும் நம்முடைய உடல் எடைக்கும் கட்டாயம் சம்பந்தம் இருக்கிறது.

தூக்கம் சரியானபடி இருந்தால் உடல் இளைக்கலாம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

பத்திரிக்கைகளிலும், இணைய தளத்திலும் ஒரே வாரத்தில் 5 கிலோ குறைப்பது எப்படி என்பதில் இருந்து பல பல டிப்ஸ். பல பல வகையான டயட் குறிப்புக்கள். உடம்பு இளைக்கவேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்கிறார்கள் சிலர். சில மாதங்களுக்கு ஜிம், சில மாதங்களுக்கு யோகா என்று மாற்றி மாற்றி உடம்பை வருத்திக் கொண்டாலும் உடம்பு என்ன வோ இளைப்பதில்லை.   

குண்டாக(fat )  இருந்தாலோ, அதிக எடை (over weight)  யுடன் இருந்தாலோ அல்லது அதிக பருமனாக (obese) இருந்தாலோ அது ஆரோக்கியக் கேடு இல்லை, அதுவே பல வியாதிகளுக்கு காரணம் ஆகலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் எல்லோருமே இளைக்கத்தான் விரும்புகிறார்கள். அட் லீஸ்ட் இளைக்க முயற்சிக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வின்படி தூக்கமின்மை ஒருவரது வளர் சிதை மாற்றத்தை (metabolism ) மெத்தனப் படுத்தி அதன் காரணமாக உடல் இளைப்பை தடைப் படுத்தும் என்று தெரிய வந்திருக்கிறது. 

இது எப்படி என்று பார்க்கலாம்.

அறிவியலாளர்களின் கூற்றுப் படி இரண்டு வளரூக்கிகள் (hormones) - ஒன்று க்ரேலின் (ghrelin) இன்னொன்று லெப்டின் (leptin) - நமது தூக்கமின்மையால் பாதிக்கப் படுகின்றன. க்ரேலின் நமது பசிக்கும், லெப்டின் சாப்பிட்டு முடித்தவுடன் வயிறு நிரம்பிய உணர்வுக்கும் காரணங்கள்.  

போதுமான தூக்கம் இல்லாமையால் க்ரேலின் அளவு அதிகரிக்கிறது. லெப்டின் அளவு குறைகிறது. இதனால் இரண்டு வகைத் துன்பங்கள்: ஒரு பக்கம் பசியோ பசி; எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தீராத அவா; இன்னொரு பக்கமோ,
எத்தனை சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்ச்சியே இருப்பதில்லை.

இந்தப் போராட்டத்தில் மூன்றாவது நபர் கார்டிசால் (cortisol) என்கிற வளரூக்கி. மன அழுத்தம், தூக்கமின்மை இவற்றால் கார்டிசால் அதிகமாக சுரக்கிறது. இதனால் பசியும், எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்  என்கிற  (cravings) நிலையும் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல; நமது உடலில் இருக்கும் கொழுப்புடன் இந்த கார்டிசாலுக்குத் தொடர்பு இருப்பதால், உடலில் வேண்டாத கொழுப்பு தொப்பையாக உரு மாறுகிறது.

ஆக, ஒருவருக்கு ஒரு நாளைக்கு எத்தனை தூக்கம் தேவை? எத்தனை தூக்கம் போதுமானது?
நமது வளரூக்கிகளை (hormones) சரியான நிலையில் சுரக்க - அதாவது அதிகமாகவோ, குறைச்சலாகவோ இல்லாமல்-  சுரக்க 7 லிருந்து 9 மணி நேரத் தூக்கம் ஒவ்வொரு இரவும்  தேவை.

நீங்கள் சரியாகத் தூங்குகிறீர்களா என்பதைக் கண்டு பிடிக்க கீழ் கண்ட கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
  1. தூங்க ஆரம்பிப்பதற்கே கஷ்டப் படுகிறீர்களா?
  2. தூக்கத்தில் அடிக்கடி விழித்துக்    கொள்ளுகிறீர்களா?
  3. காலையில் சீக்கிரம் தூக்கம் கலைந்து போய், மறுபடி தூங்க முடியவில்லையா?
  4. தூங்கி எழுந்திருக்கும் போது களைப்பாக இருக்கிறதா?
மேற் கண்ட கேள்விகளில் ஒரு கேள்விக்கேனும் உங்கள் பதில் ஆமாம் என்றால், உங்களுக்கு, உங்களது தூக்கம் பற்றிய விழிப்புணர்வு உடனடியாகத் தேவை. சரியான தூக்கம் இல்லாததே உங்கள் எடை கூடுவதற்கும் காரணம்.

நன்றாகத் தூங்குவதற்கு என்ன செய்யலாம்?
  • தூங்கப் போவதற்கு முன்பு காபி, தேநீர் முதலிய ௧ஃபைன் (caffeine-rich) அதிகம் உள்ள பானங்களை அருந்த வேண்டாம். பதப்படுத்தப் பட்ட, கார்பநேடேட் குளிர் பானங்கள் அனைத்திலும் இந்தக் ௧ஃபைன் உள்ளது. மிதமான சூட்டில் ஒரு கோப்பை பால் அருந்துவது தூக்கத்தை வரவழைக்கும்.
  • ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்திற்கு படுக்கச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருங்கள். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும் இதைக் கடைப்பிடியுங்கள்.
  • படுத்த பத்து நிமிடத்தில் தூங்கி, அலாரம் இல்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
  • நம்மில் பலர் தூங்குவதற்கு முன்பு டீ.வி. பார்க்கிறோம். சொல்லப் போனால் இது நல்லதல்ல. பலர் நினைப்பது போல தொலைக் காட்சி நம் களைப்பைப் போக்குவது இல்லை; மாறாக மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. உடல் அசதி போக, உடலை தளரச் செய்ய தூங்குவதற்கு முன் குட்டி குளியல் போடுவது சாலச் சிறந்தது.
  • படுக்கை அறையில் கைபேசி, இரவிலும் மணி காட்டும் கடியாரங்கள் தேவை இல்லை. இவை உங்கள் தூக்கத்திற்கு எதிரி. படுக்கை அறை முற்றிலும் இருட்டாக இருக்கட்டும். இருட்டு நம் உடலுக்கு நன்மை தரக் கூடிய மெலடோனின் என்கிற வளரூக்கியை நன்றாக சுரக்க செய்கிறது.
  • கோபத்துடன் தூங்கப் போகாதீர்கள். மனதில் சமாதானத்துடனும் அமைதியுடனும் தூங்க செல்வது, உங்கள் உடலையும் மனத்தையும் முழுமையாக தளரச் செய்து நல்ல தூக்கத்தை உங்களுக்குக் கொடுக்கும்.
ஆகவே நண்பர்களே, நன்றாகத் தூங்கி  நம் உடலை இளைக்கச் செய்வோமா?


published in a2ztamilnadunews.com மீள்பதிவு