புதன், 13 மார்ச், 2013

கடவுளுடன் ஒரு உரையாடல்


கடவுள்: ஹலோ! என்னை கூப்பிட்டாயா?

மனிதன்: கூப்பிட்டேனா? உன்னையா? இல்லையே? யார் நீ?

கடவுள்: நான்தான் கடவுள். உன் பிரார்த்தனை காதில் விழுந்தது; பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்.

மனிதன்: நீ சொல்லுவது சரி. நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன். அது என் மனதுக்கு பிடித்திருக்கிறது; இப்போது எனக்கு பேச அவகாசமில்லை; வேலையில் மும்முரமாக இருக்கிறேன்.

கடவுள்: எறும்பு கூடத்தான் வேலையில் மும்முரமாக இருக்கிறது.

மனிதன்: எறும்பு ஈயைப் பற்றி எனக்குத் தெரியாது; எனக்கு இப்போது உன்னுடன் பேச அவகாசம் இல்லை; வாழ்க்கை மிகவும் அவசரமானதாகி விட்டது; எப்போதுமே அவசரம் தான்; எப்போதும் நெருக்கடி தான்.

கடவுள்: உண்மைதான். ஏதாவது செய்து கொண்டே இருந்தால் வாழ்க்கை மும்முரம் தான். செயல்பாடு உன்னை மேலும் மேலும் உழைக்கச் செய்கிறது; உழைப்பினால் கிடைக்கும் பலன் உனக்கு நல்ல முடிவுகளைக் கொடுக்கிறது. உழைக்கும்போது நேரத்திற்கு அடிமையாகும் நீ, பலனை அனுபவிக்கும் போது அந்த அடிமைத்தனத்தில் இருந்து  விடுபடுகிறாய்.

மனிதன்: நீ சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனாலும் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று சரிவர புரிவதில்லை. அது இருக்கட்டும்; இணையதள உடனடி தகவல் chat-ல் நீ என்னைக் கூப்பிடுவாய் என்று எதிர்பார்க்கவில்லை.

கடவுள்: என்ன செய்வது? நீ நேரத்துடன் போராடிக்கொண்டு இருப்பதைப் பார்த்து உதவலாம் என்று வந்தேன். சில விஷயங்களை தெளிவுபடுத்த ஆசைப் பட்டேன். இது இணையதளத்தால் செய்யப்பட உலகம் ஆகிவிட்டது. இணையதளத்தை விட்டுப் பிரியாமல் இருக்கும் உன்னை இணையதளம் மூலமாக சந்திக்க வந்தேன்.

மனிதன்: சரி, என் கேள்விகளுக்கு பதில் சொல்லு. ஏன் வாழ்க்கை சிக்கலாக இருக்கிறது?

கடவுள்: முதலில் வாழ்க்கையை அலசி அலசிப் பார்ப்பதை நிறுத்து. வாழ்க்கையை வாழ கற்றுக் கொள். ரொம்பவும் அலசுவதால் தான் வாழ்க்கை சிக்கலாகிறது.

மனிதன்: நாங்கள் ஏன் எப்போதுமே வருத்தத்தில் இருக்கிறோம்? சந்தோஷம் என்பதே இல்லையா?

கடவுள்: நேற்று நீ கவலைப் பட்ட நாளை என்பது தான் இன்று - இந்த நாள். இந்த நாளை வாழாமல் நாளையைப் பற்றிக் கவலைப் படுவதே உன் வழக்கமாகிவிட்டது. அதனால் வருத்தமே வாழ்க்கை ஆகிவிட்டது.

மனிதன்: ஆனால் வாழ்க்கை என்பதே நிச்சயமில்லாத போது வருத்தப் படாமல் என்ன செய்வது?
கடவுள்: நிச்சயமின்மை என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது. ஆனால் வருத்தப் படுவது நீ தெரிவு செய்வது.

மனிதன்: நிச்சயமின்மையால் வாழ்வில் எத்தனை வலிகள்......

கடவுள்: வலிகள் தவிர்க்கமுடியாதவை; அதனால் ஏற்படும் துன்பம் தவிர்க்கப்பட வேண்டும்.

மனிதன்: துன்பம் தவிர்க்கப் படவேண்டுமானால்  மக்கள் ஏன் துன்ப படுகிறார்கள்?

கடவுள்: வைரத்தை உரசாமல் மின்ன வைக்க முடியாது; தங்கத்தை நெருப்பில் புடம் போடாமல் சுத்தப் படுத்த முடியாது. நல்லவர்கள் வாழ்க்கையில் சோதனைக்கு ஆட்படுவார்கள். ஆனால் துன்ப பட மாட்டார்கள். சோதனைகள் அவர்கள் வாழ்க்கையை  வளமாகும். நலிவடையச் செய்யாது.

மனிதன்: இந்த வருத்தப் பட வைக்கும் அனுபவங்கள் எங்களுக்குத் தேவையா?

கடவுள்: ஆமாம். அனுபவம் ஒரு தேர்ந்த ஆசிரியை. முதலில் பரீட்சை வைப்பாள். பிறகு பாடம் கற்றுத் தருவாள்.

மனிதன்: ஆனால் நாங்கள் ஏன் இப்படிப்பட்ட சோதனைகளுக்கு ஆளாக  வேண்டும். கவலைகளில் இருந்து விடுதலை அடைய முடியாதா?

கடவுள்: வாழ்க்கையில் நீ சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் உனக்கு பயன் தரக் கூடியவை. பாடம் புகட்டக் கூடியவை. அவை உன்னைப் புடம் போட்டு உன்னை எல்லா வகையிலும் மேம்படச் செய்கின்றன. மனவலிமை படைத்தவனாக ஆக்குகின்றன. மன வலிமை போராட்டங்களிலிருந்தும், சகிப்புத் தன்மையிலிருந்தும் வருகிறது. உனக்கு பிரச்சினைகள் இல்லாத போது இவை உனக்குக் கிடைப்பதில்லை.

மனிதன்: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவில் நாங்கள் எங்கே போகிறோம் என்பதே புரியவில்லை.

கடவுள்: நீ உனக்கு வெளியில் பார்த்தால், நீ எங்கே போகிறாய் என்று தெரியாது. உனக்கு உள்ளே பார். வெளியில் பார்ப்பது கனவு காண்பது போல. உள்ளே பார்ப்பது உனக்குள் ஒரு விழிப்பை ஏற்படுத்தும். கண்கள் பார்வையைக் கொடுக்கும். மனம் விழிப்புணர்வை உண்டாக்கும்.

மனிதன்: சில சமயங்களில் சரியான பாதையில் போகிறோமா என்பதை விட, சீக்கிரம் வெற்றி பெறவில்லையே என்பது மிகவும் வலிக்கிறது.

கடவுள்: வெற்றி என்பது பிறர் உன்னைப் பற்றி அறிய உதவும்  ஒரு அளவுகோல். திருப்தி என்பது உன்னால் தீர்மானிக்கப் படுகிறது. நீ போகும் பாதையைத் தெரிந்து கொள்ளுவது உனக்கு அதிகத் திருப்தியைக் கொடுக்கும். நீ திசை காட்டியை வைத்துக் கொண்டு வேலை செய். மற்றவர்கள் கடியாரத்தை வைத்துக் கொண்டு வேலை செய்யட்டும்.

மனிதன்: கடினமான நேரத்திலும் நான் எப்படி உற்சாகம் குறையாமல்  இருப்பது?

கடவுள்: எப்போதும் நீ எத்தனை தூரம் பயணித்து இருக்கிறாய் என்று பார். இன்னும் எத்தனை தூரம் செல்ல வேண்டும் என்று யோசிக்காதே. உனக்குக் கிடைத்த நல்லவற்றை எண்ணிப் பார். எதையெல்லாம் இழந்தாய் என்று எண்ணாதே.

மனிதன்: நான் எதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறேனோ அதையே சொல்லுகிறாய். மனிதனின் எந்த குணம் உனக்கு வியப்பூட்டுகிறது?

கடவுள்: கஷ்டங்கள் வரும்போது எனக்கு ஏன் என்று சொல்லுபவர்கள் சுகப் படும் போது எனக்கு ஏன் என்று கேட்பதே இல்லை. ஒவ்வொருவரும் தன் பக்கத்தில் உண்மை இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களே தவிர உண்மையின் பக்கத்தில் அவர்கள் இருக்க ஆசைப் படுவதில்லை.

மனிதன்: வாழ்க்கையில் மிகச் சிறந்தவைகளை எப்படி அடைவது?

கடவுள்: நடந்து போனவைகளைப் பற்றி வருந்தாதே. இன்றைய நாளை தைரியமாக எதிர் கொள்; இன்றைய நாள் நல்ல நாள் என்ற நம்பிக்கை இருக்கட்டும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் இல்லாமல் வரப் போகும் வாழ்க்கைக்கு உன்னை தயார் செய்து கொள்.

மனிதன்: கடைசியாக ஒரு கேள்வி: சிலசமயங்களில் ஏன் பிரார்த்தனைகளுக்குப் பதில் கிடைப்பது இல்லையே, ஏன்?

கடவுள்: பதில் கிடைக்காத பிரார்த்தனை என்று எதுவுமே இல்லை. சில சமயங்களில் பதில் ‘இல்லை’ என்றும் இருக்கலாம்;

மனிதன்: உனக்கு பல கோடி வந்தனங்கள். உன்னுடன் பேசிக் கொண்டே ஒரு புது நாளைத் தொடங்குகிறேன். ஒரு புதிய உற்சாகம் பிறந்திருக்கிறது.

கடவுள்: நல்லது. நம்பிக்கையை வளர்த்துக் கொள். பயத்தை விட்டுவிடு. உன்னுடைய சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கைகளை சந்தேகப் படாதே.வாழ்க்கை என்பது புதிர் அல்ல; விடுவிப்பதற்கு. பிரச்சினையும் அல்ல, விடை  கண்டுபிடிக்க. என்னை நம்பு. வாழ்க்கை என்பது மிக அழகானது அதை வாழத் தெரிந்தவர்களுக்கு!


oorooo.com பதிவு 

13 கருத்துகள்:

  1. சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கைகளை சந்தேகப் படாதே.வாழ்க்கை என்பது புதிர் அல்ல; விடுவிப்பதற்கு. பிரச்சினையும் அல்ல, விடை கண்டுபிடிக்க. என்னை நம்பு. வாழ்க்கை என்பது மிக அழகானது அதை வாழத் தெரிந்தவர்களுக்கு!

    மிக அழகான வரிகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
      வருகைக்கும், படித்துப் பாராட்டியதற்கும் உளமார்ந்த நன்றி!

      நீக்கு
  2. . நம்பிக்கையை வளர்த்துக் கொள். பயத்தை விட்டுவிடு. உன்னுடைய சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கைகளை சந்தேகப் படாதே.வாழ்க்கை என்பது புதிர் அல்ல; விடுவிப்பதற்கு. பிரச்சினையும் அல்ல, விடை கண்டுபிடிக்க. என்னை நம்பு. வாழ்க்கை என்பது மிக அழகானது அதை வாழத் தெரிந்தவர்களுக்கு!//

    அருமையான கலந்துரையாடல். தன் மேல் நம்பிக்கை. இறை நம்பிக்கை இவற்றை அழகாய் சொன்னீர்கள் ரஞ்சனி.
    வாழதெரிந்தவர்களுக்கு வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் கோமதி!
      படித்து ரசித்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

      நீக்கு
  3. ஹா... ஹா...

    கருத்துள்ள நல்ல கற்பனை !

    தொடர வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சேக்கனா!
      கருத்துள்ள காமெடி பதிவாகிவிட்டதோ?
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  4. /// கஷ்டங்கள் வரும்போது எனக்கு ஏன் என்று சொல்லுபவர்கள் சுகப் படும் போது எனக்கு ஏன் என்று கேட்பதே இல்லை. ஒவ்வொருவரும் தன் பக்கத்தில் உண்மை இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்களே தவிர உண்மையின் பக்கத்தில் அவர்கள் இருக்க ஆசைப் படுவதில்லை. ///

    100% உண்மை...

    உரையாடல் மிகவும் அருமை அம்மா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் தனபாலன்!
      வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி!

      நீக்கு
  5. அப்படியே என்னோட பிரச்சனைகளை இங்கே போட்டிருக்கீங்க. உங்க ஆலோசனைகள் சிலதை நான் எடுத்துக்கலாம்னு இருக்கேன், முக்கியமா "இன்றைக்கு வாழ், எதிர்காலத்தைப் பத்தி கவலைப் படாதே".

    துன்பங்கள் நம்மை பட்டை தீட்டும் என்றாலும், நம் நாட்டில் பட்டினியால் சாகும் மக்களை அவ்வாறு நினைக்க முடியவில்லை. செத்த பின்னர் எந்த பட்டையை தீட்ட முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஜெயதேவ்!

      ரொம்பவும் யோசிக்க வைத்துவிட்டது உங்கள் கருத்துரை.

      நீக்கு
  6. இணையத்தின் மூலம் சந்திப்பது புதுமையாக உள்ள‌து.நல்ல கற்பனை.

    பரவாயில்லையே,நேரமில்லை என்று சொல்லிவிட்டு இவ்வளாவு நேரம் கலந்துரையாடி இருக்கிறார்கள்.ஆனாலும் அநியாயத்துக்கு நேரம் கடகவென ஓடிவிடுகிறது.

    பதிலளிநீக்கு
  7. வெற்றியும் திருப்தியும் -அருமை.

    கட்டுரை போல எழுதுவதை விட இந்த உரையாடல் டைப் படிக்க சுவாரஸ்யமாய் இருந்தது.

    பதிலளிநீக்கு
  8. முடிவு வரிகள் மிக அருமை வாழ்க்கையை வாழத்தெரியவேண்டும் அது என்ன கணக்குப் பாடமா விடை கண்டுபிடிக்க கடவுளின் இ மெயில் ஐ டி யை எனக்கும் அனுப்பிவைத்தால் நானும் சற்று நேரம் அவருடன் சாட் செய்யலாம் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு