ஞாயிறு, 10 மார்ச், 2013

பெண்களுக்கு இதய நோய்


பல ஆண்டுகளாக பெண்களுக்கு இதய நோய் வர வாய்ப்பில்லை என்றே நம்பிக்கொண்டிருந்தோம். இதில் சிறிதளவு உண்மையும் இருக்கிறது. பெண்களுக்கு இயற்கையாகவே சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் என்கிற ஹார்மோன், மெனோபாஸ் என்கிற இறுதி மாதவிடாய் வரும் வரை பெண்களை இதய நோயிலிருந்து காப்பாற்றுகிறது. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களும் இறுதி மாதவிடாயை நெருங்கி கொண்டிருக்கும் பெண்களும் இந்த ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இதய நோய்க்கு ஆளாவது தற்சமயம் தெரியவந்துள்ளது. இந்த இதய நோயின் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை, மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்று நோய் ஆகியவற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருப்பதாக பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
அறிகுறிகள்:
இந்த நோயின் அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரணமானவையாய் இருப்பதால் பலர் அவற்றை புறக்கணிக்கிறார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறு வேறு விதமான அறிகுறிகள் தோன்றுகின்றன. பல சமயங்களில் பெண்களுக்கு மார்பு வலி ஏற்படுவதில்லை. ஆனால் அதீத களைப்பு, தடைப்பட்ட தூக்கம், சாதரணமாக நிற்கும் போதோ, நடக்கும் போதோஏற்படும் மூச்சு திணறல்,அஜீரண கோளாறு, மனச்சோர்வு, நெஞ்செரிச்சல், கழுத்து, மேல் முதுகு, மற்றும் தோள்பட்டை பகுதியில்  ஏற்படும் ஒருவித அசௌகரியம், அதீத வியர்வை, மயக்கம், குமட்டல், வாந்தி  ஆகியவை கூட இதய நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்றுடாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
இது பரம்பரை நோய் என்றாலும், உயர் இரத்தஅழுத்தம், அதிக கொழுப்பு, சர்க்கரை நோய், புகை பிடித்தல்  ஆகியவையும் இந்த நோய் ஏற்பட காரணங்களாக கருதப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு (cholesterol)  உள்ளவர்கள் மாதம் ஒருமுறை மருத்துவரிடம் சென்று பரிசோதனை  செய்து கொள்ளுவது மிகவும் முக்கியம்.சர்க்கரை, இரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளுவது மிக மிக முக்கியம்.
மாரடைப்பு நோய் என்பது என்ன?
இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் குழாயில் ஏற்படும் அடைப்பால் இதயத்திற்கு வரும் இரத்தம் குறைந்து அதனால் இதய தசைகள் பலவீனப்பட்டு விடுகின்றன. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. அல்லது இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, திடீரென்று தோன்றும் இரத்தக்கட்டி இவற்றாலும் மாரடைப்பு உண்டாகிறது.
இதய நோய் என்பது  நாம் நடத்தும் வாழ்க்கை முறையை ஒட்டி வரக்கூடிய   நோய் (lifestyle disease) என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தற்சமயம் ஆண்களும், பெண்களும் உடல் உழைப்பு என்பதே இல்லாமல் ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்தநிலையில் வேலை செய்வது சகஜமாகிவிட்டது. சரியான உடற்பயிற்சி, சரியான நேரத்தில் சாப்பாடு, சரியான தூக்கம் என்பது பலருக்கும் இல்லாமல் போய்விட்டது. இவையெல்லாம் கூட இதய நோய் சிறிய வயதிலேயே வர காரணங்கள்.
இதைத் தவிர மனஅழுத்தம் நமது ஆரோக்கியத்தை பெருமளவில் பாதிக்கிறது. யோகா அல்லது ப்ராணாயாமம் எனப்படும் சுவாசப் பயிற்சி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. சரியான பயிற்சியாளரிடம் முறையான பயிற்சி பெற்று இவற்றை வீட்டில் அமைதியான சூழ்நிலையில் தொடர்ந்து செய்துவருவது அவசியம்.
உங்கள் வீட்டில்உங்கள் அப்பாவிற்கோ, அம்மாவிற்கோ இதய நோய் இருந்து, நீங்களும் 30 வயதுக்கு மேற்பட்டவரானால்  உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை கேளுங்கள். உடற் பயிற்சி தினமும் அவசியம்.உங்களது வாழ்க்கை முறையை சின்ன சின்ன அளவில் மாற்றிக் கொள்ளுங்கள். என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளுவது மிக அவசியம். சிறிய மாற்றங்கள் கூட இதய நோயை தவிர்க்க உதவும்.
தினமும் காலையில்நடை பயிற்சி செய்யுங்கள். இளைய தலைமுறை ஆண்களும் பெண்களும் தங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு என்று நேரம் ஒதுக்குவது மிக அவசியம்.
புகைபிடிப்பவர்கள் அதை நிறுத்த முயற்சி செய்யலாம். புகை பிடிப்பதை நிறுத்துவதனால் காசும் மிச்சம்; உடல் ஆரோக்கியமும் காப்பாற்றப்படும்.
துரித உணவு வகைகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு போஷாக்கு நிறைந்த உணவுவகைகளை உட்கொள்ளுதல் நலம். பச்சை காய்கறிகளும் பழங்களும் நிறைந்த உணவு மிகுந்த நன்மையை உண்டாக்கும்.
அலுவலக வேலையை, அலுவலக கவலைகளை  வீட்டிற்கு கொண்டு வராதீர்கள். வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தை இனிமையாக கழிப்பது மனதிற்கு சாந்தியைக் கொடுக்கும். வாரக் கடைசி நாட்களை குடும்பத்துடன் வெளியில் சென்றோ அல்லது நிம்மதியாக ஓய்வு எடுத்தோ செலவிடுங்கள்.
நமது வாழ்வில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இதய நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளமுடியும். பல நவீன மருந்துகள், மருத்துவ முறைகள் நம் வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன. இதய நோய் பற்றியஅறிவு, விழிப்புணர்வு இரண்டும் மிக முக்கியம்.
வருமுன் காப்பது என்பது எப்போதுமே நல்லது. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். அதைப் போல வாழ்க்கை ஆனந்தமாக இருக்க நல்ல ஆரோக்கியம் என்பது அத்யாவச்யமான ஒன்று. உடல் நலம் பேணுவது நம் எல்லோருடைய முதற் கண் கடமை ஆகும்.
பெண்கள் ஒரு குடும்பத்தின் அச்சாணி போன்றவர்கள். குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களின் ஆரோக்கியத்தை பேணும் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுவது அவசியம்.

17 கருத்துகள்:

  1. // நமது வாழ்வில் சிறு சிறு மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் இதய நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளமுடியும். பல நவீன மருந்துகள், மருத்துவ முறைகள் நம் வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன. இதய நோய் பற்றியஅறிவு, விழிப்புணர்வு இரண்டும் மிக முக்கியம். //
    பெண்கள் ஆண்கள் அனைவருக்கும் பயன்படும் நல்ல ஆலோசனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இளங்கோ!
      ஆரோக்கியம் என்று வரும்போது பெண்கள் கடை நிலையில் தான் இருக்கிறார்கள்.
      சிலர் மருத்துவரிடம் போகவே மாட்டார்கள். கேட்டால் 'டாக்டர் ஏதாவது இருக்குன்னு சொல்லிடுவாங்க!' என்பார்கள். ரொம்பவும் வியப்பாக இருக்கும். டாக்டர்களுக்கு வேறு வேலை இல்லாதது போலப் பேசுகிறார்கள். இவர்களை என்ன செய்ய?

      நீக்கு
  2. வருமுன் காப்பது என்பது எப்போதுமே நல்லது. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். அதைப் போல வாழ்க்கை ஆனந்தமாக இருக்க நல்ல ஆரோக்கியம் என்பது அத்யாவச்யமான ஒன்று. உடல் நலம் பேணுவது நம் எல்லோருடைய முதற் கண் கடமை ஆகும்.
    பெண்கள் ஒரு குடும்பத்தின் அச்சாணி போன்றவர்கள். குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களின் ஆரோக்கியத்தை பேணும் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுவது அவசியம்.//

    அருமையான அவசியமான பதிவு. காலத்திற்கு ஏற்ற பதிவு.

    இந்தக் காலக்கட்டத்தில் ஆண், பெண் இருபாலர்களும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.
    குழந்தைகளின் எதிர்க்காலத்திற்கு ஓடி, ஓடி சம்பாதிக்கிறார்கள். ஆனால் அதில் கொஞ்சம் தங்கள் உடல் நலத்திற்கும் நேரம் ஒதுக்கினால் பரவாயில்லை


    நீங்கள் சொல்வது போல் ஆரோக்கியம் பெண்களுக்கு அவசியம், அதுவும் வீடு, அலுவலகம் என்று இரட்டை பாரம் சுமப்பவர்கள் கண்டிப்பாய் தங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்வது மிக மிக அவசியம்.

    .// சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும்//
    நீங்கள் சொல்வது சரி. பெண்கள் எல்லோரும் கடைபிடித்தால் நல்லது.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குடும்பத்தினர் அனைவரின் நலனையும் கருத்தாகக் கவனிக்கும் பெண்கள் ஆரோக்கியம் என்று வரும்போது மட்டும் சுனங்குவது ஏன் என்றே தெரிவதில்லை.
      இந்தக் கட்டுரை மூலம் ஒரு சின்ன விழிப்புணர்வு ஏற்பட்டால் சந்தோஷமாக இருக்கும்.
      நன்றி கோமதி!

      நீக்கு
  3. தேவையான நல்ல அலசல் அம்மா...

    அனைவருக்கும் பயன்படும் கருத்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. சில வருடங்களுக்கு முன்னால் (1996) எனக்குத் தெரிந்த பெரியவர் ஒருவர் மார்பு கனமாக இருப்பதாகச் சொன்னதை அடுத்து அவரை அரசு மருத்துவமனையில் காட்டியபோது வெறும் ரேனிட்டிடின் ஊசி மட்டும் போட்டு விட்டு அனுப்ப, அவர் உடல் முழுவதும் 'ஜில்'லிட்டிருந்ததைக் காட்டியும் 'பரவாயில்லை, இது போதும்' என்றார்கள். அப்புறம் எங்கள் வற்புறுத்தலுக்கிணங்க அட்மிஷனுக்கு எழுத, அந்த நடைமுறை நடந்துகொண்டேயிருக்கும்போதே அவர் மரணமடைந்தது நான் சந்தித்த அதிர்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்!

      ஆரோக்கியம் என்பது நமக்கு இரண்டாம் பட்சமாகப் போவது வருத்தத்திற்குரிய விஷயம்.
      மருத்துவ மனைகளிலும் சரியான கவனிப்பு மறுக்கப்படுவது வேதனைதான்.

      40 வயதுக்கு மேல் கட்டாய மருத்துவ கண்காணிப்பு எல்லோருக்கும் தேவை.

      நீக்கு
  5. வருமுன் காப்பது என்பது எப்போதுமே நல்லது. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். அதைப் போல வாழ்க்கை ஆனந்தமாக இருக்க நல்ல ஆரோக்கியம் என்பது அத்யாவச்யமான ஒன்று. உடல் நலம் பேணுவது நம் எல்லோருடைய முதற் கண் கடமை ஆகும்.
    பெண்கள் ஒரு குடும்பத்தின் அச்சாணி போன்றவர்கள். குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களின் ஆரோக்கியத்தை பேணும் பெண்கள் தங்களது ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுவது அவசியம்.

    விழிப்புணர்வுப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  6. ரஞ்சனி, உங்கள் இந்தபதிவு வலைச்சரத்தில் இடம்பெற்று இருக்கிறது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்...

    அருமையான இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி அம்மா...

    பதிலளிநீக்கு
  8. நல்ல பகிர்வு.பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. நன்றி கோமதி!
    நன்றி தனபாலன்!
    நன்றி ஆசியா!

    பதிலளிநீக்கு
  10. எளிதில் செய்யக் கூடிய அதே நேரம் பயனுள்ள குறிப்புகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ரிஷபன்!
      அனைத்துப் பெண்களும் கட்டாயம் படித்து தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டும்.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  11. மிகவும் பயனுள்ள பதிவு . பலரும் படிக்க வேண்டும். நன்றி.பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அனந்த கிருஷ்ணன்!
      வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

      நீக்கு