புதன், 9 ஏப்ரல், 2014

திருவாளர் பொதுஜனம் என்ன நினைக்கிறார்?


தேர்தல் முடிவுகள் – 2014

ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்’ என்று ஒரு சொலவடை உண்டு. இந்தமுறை நம்மூரு மூன்று பட்டிருக்கிறதே! கூத்தாடியின் கொண்டாட்டத்திற்குக் கேட்கவா வேண்டும்? ஆங்கிலச் செய்தி தொலைக்காட்சிகளுக்கு கொண்டாட்டமோ, கொண்டாட்டம். சத்தம் தாங்கமுடியவில்லை, சாமி! எப்போது தேர்தல் முடிந்து வீடு எப்போது அமைதிக்குத் திரும்பும் என்று இருக்கிறது. அவர்கள் இருபத்துநான்கு மணிநேரம் ஒலிபரப்பினால், அதையே திருப்பித் திருப்பி 48 மணிநேரமும் வேறு வேறு சானல்களில் கேட்டால் வீட்டில் இருப்பவர்கள் எங்கு போவது? எங்கள் காதுகளைக் காப்பாற்று இறைவா!

இப்படி நொந்துகொண்டாலும், சில நகைச்சுவைகளும் இருக்கத்தான் செய்கிறது. Headlines today சானலில் வரும் So Sorry..! ஒவ்வொரு அரசியல் கட்சிகளையும் அவைகளின் தலைவர்களையும் சித்தரிக்கும்விதம் சுவாரஸ்யம், பலசமயம் வாய்விட்டு சிரிக்கவும் வைக்கிறது. வடஇந்தியாவில் இருக்கும் தேர்தல் தீவிரம் இங்கு நம் பக்கத்தில் இல்லையோ என்று தோன்றுகிறது. அந்த சானல்களில் வரும் ஆர்னாப் கோஸ்வாமி, பர்கா தத், ராகுல் கன்வல் போல ஏன் இங்கு எவரும் காணவில்லை? இங்கு நடக்கும் விவாதங்களும் ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் இருக்கின்றன. என்ன காரணம்?

தேர்தல்கள் ஆரம்பித்துவிட்டன. முடிவுகள் எப்படி இருக்கும் என்று சில சானல்களும், எப்படி இருக்க வேண்டும் என்று கட்சிகளும் தங்களுக்குத் தோன்றியதை சொல்லிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், இன்று எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல் இந்தத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று சொல்லுகிறது. சென்னையை சேர்ந்த ஜோசியர், நியுமராலாஜிஸ்ட் திரு கே.வி. கோபால்கிருஷ்ணன் ஒவ்வொரு முறை சொல்லும் கணிப்புகளும் நூறு சதவிகிதம் பலிக்கின்றனவாம். இந்த முறை அவர் சொல்லும் கணிப்புகள் இவை:

·                  அடுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி.
·                  பாஜக/என்டிஏ கூட்டணிக்கு 286 இடங்கள் காங்கிரஸ்/யுபிஏ கூட்டணிக்கு   100 இடங்கள்.
·                இந்திய வரலாற்றிலேயே மிகவும் மோசமானதொரு தோல்வியை        காங்கிரஸ் சந்திக்கும்.
·                 காங்கிரஸ் 63 இடங்களைப் பிடிக்கும்.
·               இரண்டு பெருந்தலைகள் தோல்வியை சந்திப்பார்கள். (யார் யாரென்று    ஏன் சொல்லமுடியவில்லை, திரு கோபால்கிருஷ்ணன்?)
·              தீதி, அம்மா மற்றும் நவீன் பட்நாயக் மூவரும் மோடியை ஆதரிப்பார்கள்.
·         பங்குச்சந்தை, சென்செக்ஸ் இரண்டும் மோடியின் பாதிப்பால்  ஜூன் 13 க்குப் பிறகு 25000 யை எட்டும்.
·         சரக்குகளின் விலை சரிந்து உணவுப்பண்டங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் விலைகள் இறங்கும்.
·         தங்கம், வெள்ளி, இரும்பு இவைகளின் விலைகளும் இறங்கும்.
·         கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்படும்.

திரு மோடி எப்போது பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் திரு. கோபால்கிருஷ்ணன். மே 25 ஆம் தேதி காலை 11.41 மணிக்கு அல்லது 27 ஆம் தேதி காலை 10.34 மணிக்கு திரு மோடி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டால் அவர் அடுத்த பத்து வருடங்களுக்கு இந்தியாவை ஆளக்கூடும். இந்த பத்து வருடங்களும் நமது நாட்டின் பொற்காலமாக இருக்கும்.


ஆனால் இந்தக் கணிப்புகளை நிஜமாக்குவதும் பொய்யாக்குவதும் திருவாளர் பொதுஜனம் கையில் அல்லவா இருக்கிறது? திருவாளர் பொதுஜனம் என்ன நினைக்கிறாரோ? அவருக்கும் கடவுளுக்குமே வெளிச்சம்!




செவ்வாய், 8 ஏப்ரல், 2014

பானகம், வடைபருப்பு, நீர் மோர் + இன்னிசைக் கச்சேரிகள்!





இன்றைக்கு ஸ்ரீராம நவமி. ஸ்ரீராமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஸ்ரீராமனுக்கு என்ன வயது? இந்தக் கேள்விக்கு திரு செல்லப்பா அவர்களின் தளத்தில் ஸ்ரீராமனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. எப்படி அத்தனை துல்லியமாக ஸ்ரீராமாயணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை தேதி, வருஷம் குறிப்பிட்டு சொல்ல முடியும் என்பது வியப்பான செய்தி. பின்னூட்டத்தில் இன்னுமொரு வியப்பான தகவல். திரு காஷ்யபன் எழுதியிருக்கிறார். அதையும் படியுங்கள். வியப்பின் உச்சிக்கே போய்விடுவீர்கள்.

பானகம் என்று தலைப்பு கொடுத்துவிட்டு எதையோ பற்றிப் பேசுகிறேனே என்று நினைக்க வேண்டாம். இதோ அதைப்பற்றி சொல்லுகிறேன். நாங்கள் பெங்களூரு வந்த புதிதில் எதிர் வீட்டில் தீடீரென ஒருநாள் காலை வாசலில் பந்தல். இன்று என்ன விசேஷம் பந்தல் போட்டிருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டே இருக்கையில் அவர்கள் வீட்டுப் பெண் கையில் மூன்று பாத்திரங்களுடன் (பெரிய பாத்திரங்கள் தான்!) எங்கள் வீட்டிற்கு வந்தாள். நான் என்ன எது என்று கேட்கும் முன்பே எதிர் வீட்டிலிருந்து ஒரு குரல்: ‘இன்னிக்கு ஸ்ரீராம நவமிம்மா! பான்கா (பானகம்), கோசம்பரி, நீரு மஜ்ஜிகே (நீர் மோர்) அனுப்பியிருக்கேன். சாயங்கலாம் புதுசா பண்ணி ஸாருக்கு அனுப்பறேன். இதை நீங்களும் குழந்தைகளும் சாப்பிடுங்க!’ அங்கு இருந்தவரை இந்த விருந்து வருடாவருடம் ஸ்ரீராம நவமியன்று எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது.

பானகமும், கோசம்பரியும், நீர் மோரும் என்ன ருசி என்கிறீர்கள்! எப்படி இவ்வளவு ருசி ருசியாகப் பண்ணமுடியும் என்று நினைத்துக் கொண்டே நாங்கள் மூவரும் சாப்பிட்டு, குடித்து முடித்தோம். கொஞ்ச நேரத்தில் எதிர்வீட்டு வாசலில் நிறைய மனிதர்கள். என்னவென்று பார்த்தோம். (வயிறு நிரம்பிவிட்டது. இனி, பொழுது போகவேண்டுமே!) எதிர் வீட்டில் அந்தப் பக்கம் வருவோரையெல்லாம் அழைத்து ஒரு காகித டம்ப்ளரில் பான்கா, ஒரு டம்ப்ளரில் நீரு மஜ்ஜிகே, ஒரு தொன்னையில் கோசம்பரி என்று கொடுத்துக் கொண்டிருந்தனர். ரொம்பவும் வியப்பாக இருந்தது. நிறைய பேர்கள் வந்து வாங்கி சாப்பிட்டு, குடித்துவிட்டு சென்றுகொண்டிருந்தனர்.

ஸ்ரீராம நவமி அன்று ஒவ்வொரு வீதியிலும் இதுபோல பல தண்ணீர்பந்தல்கள் அமைக்கப்பட்டு பானகம், நீர்மோர், கோசம்பரி எல்லாம் விநியோகம் செய்கிறார்கள். பெரிய பெரிய அண்டாக்களில் இவையெல்லாம் தயார் செய்யப்படும். கிட்டத்தட்ட சாயங்காலம் வரை இந்த விநியோகம் நடக்கிறது. இதையெல்லாம் பிறகு தெரிந்துகொண்டோம். பெரிய பெரிய கடைகளில் கூட இதைபோல செய்து வைத்து வருவோருக்கெல்லாம் கொடுப்பார்கள். ஒருமுறை ‘விவேக்’ கில் சாப்பிட்டோம். (சும்மா கொடுத்தா விடுவார்களா?)




இந்தப் பானகம் இவர்கள் செய்யும் முறையும் வித்தியாசமானதுதான். நம்மூரில் கிர்ணி பழம் என்று சொல்லுகிறோமே, (அதை இவர்கள் தர்பூசணி என்பார்கள்) அந்தப் பழம், விளாம்பழம் இவற்றை இந்தப் பானகத்தில் சேர்க்கிறார்கள். முதலில் கிர்ணிப் பழங்களை தோல் சீவி, அதை விளாம்பழங்களுடன் சேர்த்து கையால் நன்கு பிசைந்து வேண்டும் அளவு நீர் சேர்த்து, பிறகு வெல்லம் அல்லது நாட்டி சர்க்கரை (நம்ம ஊரு நாட்டு சர்க்கரை) சேர்த்து, அதில் சுக்கு, உப்பு (கொஞ்சமே கொஞ்சம்) சேர்த்து பானகம் செய்கிறார்கள். ஏலக்காய் சேர்க்கிறார்கள். பானகத்தைக் குடிக்கும்போது இந்தப் பழங்கள் வாயில் சின்னச்சின்ன துண்டுகளாக அகப்படுவது பானகத்தின் ருசியை கூட்டுகிறது.

நாம் வடைபருப்பு என்று சொல்வதை இவர்கள் கோசம்பரி என்கிறார்கள். இதற்கு பயத்தம்பருப்பு, கடலைபருப்பு இரண்டையும் ஊற வைத்து, நீரை வடிகட்டி அதனுடன், வெள்ளரிக்காய், காரட், கொத்தமல்லி, தேங்காய் சேர்க்கிறார்கள். கடுகு, பச்சைமிளகாய், பெருங்காயம் தாளித்துக் கொட்டுகிறார்கள்.

நீர் மோர் எல்லோருக்கும் தெரிந்ததுதான். திரு பால ஹனுமான் பதிவில் இருக்கும் இந்தப் பதிவைப் பாருங்கள். கல்யாண மோர் எப்படி செய்கிறார்கள் என்று எழுதியிருக்கிறார்.

சரி, வயிற்றுக்கு போட்டாயிற்று. இனி காதுக்கு இனிய இசை கேட்போமா? இன்றிலிருந்து ஆரம்பித்து சுமார் ஒரு மாதத்திற்கு எங்கள் ஊர் ஃபோர்ட் ஹை ஸ்கூலில் (Fort High School, Chamrajpet) ஸ்ரீராம நவமி கச்சேரிகள் ஆரம்பம். முதல் நாள் எல்லா வருடமும் கத்ரி கோபால்நாத் கச்சேரிதான். நம்மூரு பெரிய பெரிய பாடகர்கள் - சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, உன்னி கிருஷ்ணன், ஜேசுதாஸ், நெய்வேலி சந்தான கோபாலன் - என்று எல்லோரும் வருவார்கள். சீசன் டிக்கட் உண்டு. சீசன் டிக்கட் வாங்கிக் கொண்டு தவறாமல் கச்சேரி கேட்பேன் நான். சுமார் 76 வருடங்களாக தொடர்ந்து வருடாவருடம் நடைபெறுகின்றன இந்தக் கச்சேரிகள். எம்.எஸ். சுப்புலட்சுமி கூட வந்து பாடியிருக்கிறாராம் இங்கு.

நேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி படித்தேன். ‘இந்த முறை இந்தக் கச்சேரிகள் பணப்பற்றாக்குறை காரணமாக 5 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று. மனதிற்கு மிக மிக வருத்தமாகிப் போய்விட்டது. இங்கு வந்து பாடி பிரபலமாக ஆகியிருக்கும் பாடகர், பாடகிகள் ஆளுக்கு கொஞ்சம் (கொஞ்சம் என்ன, நிறையவே போடலாம்) பணம் போட்டு ஒரு நிதிய மூலதனத்தை உருவாக்கி, இந்தக் கச்சேரிகள் தொடர்ந்து நடக்கும்படி செய்யலாம். அதைத்தவிர எல்லோரும் பணம் வாங்கிக் கொள்ளாமல் இங்கு வந்து பாடலாம். தங்களது வியாபார மனதை சற்று கழற்றி வைத்துவிட்டு இந்த ஒரு சரித்திர நிகழ்வு நின்று விடாமல் தொடர்ந்து நடக்க, ஏதாவது செய்வார்களா?

ஸ்ரீராமன் தான் இந்தக் கேள்விக்கு விடை அளிக்க வேண்டும்.


சீதா பிராட்டியுடன் கூடிய ஸ்ரீராமன் எல்லோருக்கும் எல்லா மங்களங்களையும் அளிக்கட்டும். 

திங்கள், 31 மார்ச், 2014

யுகாதி தின வாழ்த்துகள்!




யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள். 
இப்பொழுது நடப்பது கலியுகம். அப்படியானால்  இது கலியுகம் ஆரம்பித்த தினத்தின் வருட ஆரம்பத்தைக் குறிக்கிறதா? கலியுகம் கிருஷ்ண அவதாரம் முடிந்ததிலிருந்து துவங்கியதாகக் கருதப்படுகிறது.  

இது, ஆங்கில வருடம் (சரியாகச் சொன்னால்  ரோம வருடங்கள்) கி.மு.3102-ல் க்ரெகேரிய நாட்காட்டியில் ஜனவரி 23-ம் தேதியிலும், ஜூலியன் நாட்காட்டியில் (தற்போது நடைமுறையில் உள்ளது)  ஃபெப்ரவரி 18-ம் தேதியிலும் - துவங்கியதாகக் கூறுவர். யுக ஆரம்பத்தில் அனைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் ஆரம்பம் ஆவதாகக் கொண்டு கணக்கிடுவர். 

இதை கருத்தில் கொண்டு ஆர்யபட்டர் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கணக்கிட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த தேதியைக் கூறுவர். 

பின்னர், பல்வேறு வானியல் நிபுணர்கள் கெப்லரின் முறையைக் கையாண்டும் தற்போதைய கருவிகளைக் கொண்டும் ஆர்யபட்டரின்  இந்தக் கணக்கை உறுதிப் படு்த்தியுள்ளனர். அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 20.02.2012 அன்று கலி பிறந்த 5113-ஆண்டு  தினம் வந்து சென்று விட்டது.

பின் இப்பொழுது இன்று யுகாதி என்று ஏன் கொண்டாடுகிறார்கள்?
வட மொழியில் யுக்மம் என்றால் இரண்டு; இந்த வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தது தான் யோகம் என்ற சொல். 

யோகம் என்றால் இணைப்பு அல்லது இணைவது; யோக சாஸ்த்ரம் என்பது உடலும் உள்ளமும் இணைந்து கட்டுப்படுவது.  அதே வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது தான் யுகம்.  இதற்கும் சதுர் யுகம் என்பதற்கும் யுகம்என்ற வார்த்தையைத் தவிர வேறு சம்பந்தம் இல்லை. 
 அதனால் இந்த யுகாதியை சதுர்யுகங்களின் ஆதி (ஆரம்பம்) என்று கொள்ளக் கூடாது.

சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் 0 டிகிரி புள்ளியில் இணைவதைத் தான் இங்கு யுகம்என்று குறிக்கின்றனர்.  ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் அதே ஆரம்ப இடத்தில் இணையும். 

ஆனால் சூரிய, சந்திர சுழற்சி நாட்காட்டியை பயன்படுத்துபவர்கள்  முறையே சூரியன், சந்திரன் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் அந்த 0 டிகிரியைத் தொடும் தினங்களை அவரவர் வருடப் பிறப்பாகக் கொண்டாடுவர்.

பொதுவாக நாட்காட்டிகள் மூன்று வகைப்படும். 

அவை,

1.  சௌர (அ) சூரிய நாட்காட்டிகள் (Solar calendars);

2.  சந்திர நாட்காட்டிகள் (Lunar calendars) ;

3.  சந்த்ர-சௌர நாட்காட்டிகள் (luni-solar calendars)

சூரிய ஆண்டு என்பது பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக் கொள்ளும் ஆண்டு. 

இதில் சந்திரன் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. 

உதாரணம்: 

க்ரெகாரிய ஜூலியன் நாட்காட்டிகள்; இந்தியாவில் தமிழக கேரள நாட்காட்டிகள் இவை, சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்வதை (வடமொழியில் சங்கராந்தி என்பர்) மாதமாகக் கொள்வர்.  

இந்தியாவில் இந்த சௌர மாதத்தில் நான்கு வெவ்வேறு வகைகள் உள்ளன. (அவற்றைப் பற்றி வெறு ஒரு சமயத்தில் பார்க்கலாம்).

சந்திர ஆண்டு என்பது புதுச் சந்திரன் வளர்ந்து பின் தேய்ந்து மறைந்து பின் புதுச் சந்திரனாக ஆரம்பிக்கும் காலத்தை (அல்லது) பௌர்ணமி சந்திரன் தேய்ந்து பின் வளர்ந்து பின் பௌர்ணமியாக மாறும் காலமான, சுமார் 30 நாட்களை (மாதாமாதம் இது 29.45 முதல் 31.45 நாட்கள் வரை வேறுபடும்) ஒரு மாதமாகக் கணக்கிட்டு 12 மாதங்களை ஒரு ஆண்டாக (30 X 12 = சுமார் 360 நாட்கள்) கணக்கிடப்படும் நாட்காட்டி. 

இதில் சூரியனை பூமி சுற்றுவது கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. 

12 மாதங்கள் முடிந்தவுடன் அடுத்த ஆண்டு துவங்கிவிடும். 

உதாரணம் : 

இஸ்லாமிய நாட்காட்டி; இதில் அமாவாசை முடிந்து அடுத்து பிறைத் தெரியும் நாளிலிருந்து மாதம் ஆரம்பிக்கும். 

இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது சந்திர மாதம் சராசரியாக 30 நாட்களைக் கொண்டது (சராசரி என்பதை கவனிக்கவும் அதாவது சில மாதங்கள் 30 தினத்திற்குக் குறைவாகவும் சில மாதங்களில் 30 தினத்திற்கு அதிகமாகவும் இருக்கலாம்).

மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட சந்தர-சௌர நாட்காட்டி என்பது, சந்திர ஆண்டுபடி மாதங்களைக் கொண்டிருந்தாலும் சூரியனைச் சுற்ற பூமி எடுத்துக் கொள்ளும் 365.2564 நாட்களின் மீதமுள்ள சுமார் 5/6 நாட்களைச் சேர்த்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகமாதமாக கொள்வது ஆகும். 

இந்த  முறை இந்தியாவில் ஆரம்பி்க்கப்பட்டது (தற்போது நேபால், பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற பிற நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது). 

சீன நாட்காட்டியும் சந்திர-சௌர நாட்காட்டியே.

இந்த சந்தர-சௌர நாட்காட்டிக் கணக்கிடுவதில் பலவித வழிமுறைகளும் பலவித நாட்காட்டிகளும் வழக்கத்தில் உள்ளன. 

பொதுவாக வழக்கத்தில் உள்ள முக்கிய இரண்டு வகைகளைப் பார்க்கலாம். அவை,

1.          அமந்த நாட்காட்டி (அ) முக்ய மன முறை;

2.          பூர்ணிமந்த நாட்காட்டி (அ) கௌன மன முறை

அமந்த நாட்காட்டி என்பது, அமாவாசைக்கு அடுத்து புது நிலவு வளரத் துவங்கி வளர்ந்து பின் முழுவதுமாகத் தேய்வதை ஒரு மாதமாகக் கொள்வது. 

யுகாதி என்று இன்று கொண்டாடப்படும் வருடமும் இந்த அமந்த நாட்காட்டியின் அடிப்படையில் அமைந்த ஆண்டின் துவக்கமே. 

இந்த வகை நாட்காட்டியில்  மாதங்களின் பெயர்கள் நடுவில் வரும் சூரியமாதங்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கும். 

உதாரணத்திற்கு 23.3.2014-ல் துவங்கும் இந்த மாதம் அடுத்த அமாவாசை அதாவது 21.04.2014 வரை இருக்கும். 

இதன் நடுவில் 14.04.2014 அன்று துவங்கும் சூரியமாதம்  (தமிழ் புத்தாண்டு) சித்திரை மாதம். எனவே, இந்த அமந்த மாதமும் சித்திரை  என்றே அழைக்கப்படும். 

ஆனால், சில வேளைகளில் இது மாறவும் செய்யும். உதாரணத்திற்கு, இந்த வருட தமிழ் மாதமான புரட்டாசியில் இரண்டு அமாவாசைகள் (1, 30 தேதிகளில்) வருகின்றன. 

1-ம் தேதி முடியும் மாதம் பாத்ரபாதம் (இதன் தமிழ் மரூஉ தான் புரட்டாசி) என்றும் 30-தேதி முடியும் மாதம் ஆச்வினம் (அஸ்வினி அல்லது ஐப்பசி) என்றும் குறிப்பிடப்படுகின்றன. 

சில சந்திர மாதங்களி்ன் நடு்வில் சங்கராந்தி எதுவும் வராமல் இருந்துவிடும். 

அச்சமயங்களில்  முதலில் வரும் மாதம் பின் வரும்  மாதத்தின் அதிகமாதமாகக் கொள்ளப்படும்; 

பின்னால் வரும் மாதம் அந்த மாதத்தின் நிஜமாதம் என்று அழைக்கப்படும். 

பண்டிகைகள் நிஜமாதங்களை அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படும்.

இதைத் தவிர க்ஷய’ (அதாவது குறை) மாதம் என்று ஒன்று உண்டு. இதில், ஒரு சந்திர மாதத்தில் இரண்டு சங்கராந்தி வரும். 

க்ஷய ஆண்டுகள் 19, 46, 65, 76, 122, 141 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு விதங்களில் வரும்.

 குறைமாதமும் அதிகமாதமும் அடுத்தடுது வருவது  மிகமிக அபூர்வம். இது கடைசியாக 1315-ல் அக்டோபர் 18 – நவம்பர் 15 வரை அதிககார்த்திகை மாதமாகவும்  நவம்பர் 16 – டிசம்பர் 15 வரை (விருச்சிக-தனுர் சங்கராந்திகள் நிகழ்ந்ததால்) கார்த்திகை-மார்கசீர்ஷ குறைமாதமாகவும் இருந்தன. டிசம்பர் 16 இலிருந்து (அடுத்த ஜனவரி 15க்குள் மகர சங்கராந்தி வந்துவிடுவதால்) புஷ்ய மாதம் ஆரம்பித்தது.

மற்ற நாட்காட்டிகளைப் பற்றி வேறு ஒரு சமயத்தில் பார்ப்போம்...

இந்த அமந்த நாட்காட்டிகளை ஆந்திரம், கர்நாடகம், மராட்டிய மாநில மக்கள் பின்பற்றுகின்றனர். 

அதை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இன்று இந்த நாளை யுகாதியாக அதாவது வருடப் பிறப்பாக்க் கொண்டாடுகின்றனர்.

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்.

தகவல், நன்றி: திரு அனந்தநாராயணன்