யுகாதி என்றால்
யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள்.
இப்பொழுது நடப்பது கலியுகம். அப்படியானால் இது
கலியுகம் ஆரம்பித்த தினத்தின் வருட ஆரம்பத்தைக் குறிக்கிறதா? கலியுகம் கிருஷ்ண அவதாரம் முடிந்ததிலிருந்து துவங்கியதாகக்
கருதப்படுகிறது.
இது, ஆங்கில வருடம் (சரியாகச் சொன்னால் ரோம
வருடங்கள்) கி.மு.3102-ல் – க்ரெகேரிய
நாட்காட்டியில் ஜனவரி 23-ம் தேதியிலும், ஜூலியன் நாட்காட்டியில் (தற்போது நடைமுறையில் உள்ளது) ஃபெப்ரவரி 18-ம் தேதியிலும் - துவங்கியதாகக்
கூறுவர். யுக ஆரம்பத்தில் அனைத்து கிரகங்களும் ஒரே இடத்தில் ஆரம்பம் ஆவதாகக்
கொண்டு கணக்கிடுவர்.
இதை கருத்தில் கொண்டு ஆர்யபட்டர் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கணக்கிட்டதை அடிப்படையாகக் கொண்டு இந்த தேதியைக்
கூறுவர்.
பின்னர், பல்வேறு வானியல் நிபுணர்கள் கெப்லரின்
முறையைக் கையாண்டும் தற்போதைய கருவிகளைக் கொண்டும் ஆர்யபட்டரின் இந்தக்
கணக்கை உறுதிப் படு்த்தியுள்ளனர். அதன்
அடிப்படையில் இந்த ஆண்டு 20.02.2012 அன்று கலி பிறந்த 5113-ஆண்டு தினம் வந்து சென்று விட்டது.
பின் இப்பொழுது இன்று யுகாதி என்று
ஏன் கொண்டாடுகிறார்கள்?
வட மொழியில் யுக்மம் என்றால் இரண்டு; இந்த வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தது தான் யோகம் என்ற சொல்.
யோகம் என்றால் இணைப்பு அல்லது இணைவது; யோக சாஸ்த்ரம் என்பது உடலும் உள்ளமும் இணைந்து கட்டுப்படுவது. அதே
வேர்ச் சொல்லில் இருந்து பிறந்தது தான் யுகம். இதற்கும்
சதுர் யுகம் என்பதற்கும் ‘யுகம்’ என்ற
வார்த்தையைத் தவிர வேறு சம்பந்தம் இல்லை.
அதனால் இந்த யுகாதியை
சதுர்யுகங்களின் ஆதி (ஆரம்பம்) என்று கொள்ளக் கூடாது.
சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் 0 டிகிரி புள்ளியில் இணைவதைத் தான் இங்கு ‘யுகம்’
என்று குறிக்கின்றனர். ஐந்து
ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் அதே ஆரம்ப இடத்தில்
இணையும்.
ஆனால் சூரிய, சந்திர சுழற்சி நாட்காட்டியை
பயன்படுத்துபவர்கள் முறையே சூரியன், சந்திரன் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் அந்த 0
டிகிரியைத் தொடும் தினங்களை அவரவர் வருடப் பிறப்பாகக் கொண்டாடுவர்.
பொதுவாக நாட்காட்டிகள் மூன்று வகைப்படும்.
அவை,
1. சௌர
(அ) சூரிய நாட்காட்டிகள் (Solar calendars);
2. சந்திர
நாட்காட்டிகள் (Lunar
calendars) ;
3. சந்த்ர-சௌர
நாட்காட்டிகள் (luni-solar
calendars)
சூரிய ஆண்டு என்பது பூமி சூரியனைச் சுற்ற எடுத்துக்
கொள்ளும் ஆண்டு.
இதில் சந்திரன் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது.
உதாரணம்:
க்ரெகாரிய ஜூலியன் நாட்காட்டிகள்; இந்தியாவில் தமிழக கேரள நாட்காட்டிகள் – இவை,
சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு செல்வதை (வடமொழியில்
சங்கராந்தி என்பர்) மாதமாகக் கொள்வர்.
இந்தியாவில் இந்த சௌர மாதத்தில் நான்கு வெவ்வேறு வகைகள்
உள்ளன. (அவற்றைப் பற்றி வெறு ஒரு சமயத்தில் பார்க்கலாம்).
சந்திர ஆண்டு என்பது புதுச் சந்திரன் வளர்ந்து பின்
தேய்ந்து மறைந்து பின் புதுச் சந்திரனாக ஆரம்பிக்கும் காலத்தை (அல்லது) பௌர்ணமி
சந்திரன் தேய்ந்து பின் வளர்ந்து பின் பௌர்ணமியாக மாறும் காலமான, சுமார் 30 நாட்களை (மாதாமாதம் இது 29.45 முதல் 31.45 நாட்கள் வரை வேறுபடும்) ஒரு மாதமாகக்
கணக்கிட்டு 12 மாதங்களை ஒரு ஆண்டாக (30 X 12 = சுமார் 360 நாட்கள்) கணக்கிடப்படும் நாட்காட்டி.
இதில் சூரியனை பூமி சுற்றுவது கணக்கில் கொள்ளப்பட
மாட்டாது.
12 மாதங்கள் முடிந்தவுடன் அடுத்த ஆண்டு
துவங்கிவிடும்.
உதாரணம் :
இஸ்லாமிய நாட்காட்டி; இதில் அமாவாசை
முடிந்து அடுத்து பிறைத் தெரியும் நாளிலிருந்து மாதம் ஆரம்பிக்கும்.
இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது சந்திர மாதம்
சராசரியாக 30 நாட்களைக் கொண்டது (சராசரி என்பதை கவனிக்கவும் – அதாவது
சில மாதங்கள் 30 தினத்திற்குக் குறைவாகவும் சில மாதங்களில் 30
தினத்திற்கு அதிகமாகவும் இருக்கலாம்).
மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்ட சந்தர-சௌர நாட்காட்டி
என்பது, சந்திர ஆண்டுபடி மாதங்களைக் கொண்டிருந்தாலும் சூரியனைச் சுற்ற பூமி
எடுத்துக் கொள்ளும் 365.2564 நாட்களின் மீதமுள்ள சுமார் 5/6
நாட்களைச் சேர்த்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ”அதிக” மாதமாக கொள்வது ஆகும்.
இந்த முறை இந்தியாவில் ஆரம்பி்க்கப்பட்டது (தற்போது நேபால், பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற பிற நாடுகளிலும்
பின்பற்றப்படுகிறது).
சீன நாட்காட்டியும் சந்திர-சௌர நாட்காட்டியே.
இந்த சந்தர-சௌர நாட்காட்டிக் கணக்கிடுவதில் பலவித
வழிமுறைகளும் பலவித நாட்காட்டிகளும் வழக்கத்தில் உள்ளன.
பொதுவாக வழக்கத்தில் உள்ள முக்கிய இரண்டு வகைகளைப் பார்க்கலாம்.
அவை,
1. அமந்த
நாட்காட்டி (அ) முக்ய மன முறை;
2. பூர்ணிமந்த
நாட்காட்டி (அ) கௌன மன முறை
அமந்த நாட்காட்டி என்பது, அமாவாசைக்கு
அடுத்து புது நிலவு வளரத் துவங்கி வளர்ந்து பின் முழுவதுமாகத் தேய்வதை ஒரு
மாதமாகக் கொள்வது.
யுகாதி என்று
இன்று கொண்டாடப்படும் வருடமும் இந்த அமந்த நாட்காட்டியின் அடிப்படையில் அமைந்த
ஆண்டின் துவக்கமே.
இந்த வகை நாட்காட்டியில் மாதங்களின்
பெயர்கள் நடுவில் வரும் சூரியமாதங்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கும்.
உதாரணத்திற்கு 23.3.2014-ல் துவங்கும் இந்த மாதம்
அடுத்த அமாவாசை அதாவது 21.04.2014 வரை இருக்கும்.
இதன் நடுவில் 14.04.2014 அன்று துவங்கும் சூரியமாதம் (தமிழ்
புத்தாண்டு) சித்திரை மாதம். எனவே, இந்த அமந்த மாதமும் சித்திரை என்றே
அழைக்கப்படும்.
ஆனால், சில வேளைகளில் இது மாறவும் செய்யும்.
உதாரணத்திற்கு, இந்த வருட தமிழ் மாதமான புரட்டாசியில் இரண்டு
அமாவாசைகள் (1, 30 தேதிகளில்) வருகின்றன.
1-ம் தேதி முடியும் மாதம் பாத்ரபாதம்
(இதன் தமிழ் மரூஉ தான் புரட்டாசி) என்றும் 30-தேதி முடியும்
மாதம் ஆச்வினம் (அஸ்வினி அல்லது ஐப்பசி) என்றும் குறிப்பிடப்படுகின்றன.
சில சந்திர மாதங்களி்ன் நடு்வில் சங்கராந்தி எதுவும்
வராமல் இருந்துவிடும்.
அச்சமயங்களில் முதலில்
வரும் மாதம் பின் வரும் மாதத்தின் ‘அதிக’ மாதமாகக்
கொள்ளப்படும்;
பின்னால் வரும் மாதம் அந்த மாதத்தின் ‘நிஜ’ மாதம் என்று அழைக்கப்படும்.
பண்டிகைகள் ‘நிஜ’ மாதங்களை
அடிப்படையாகக் கொண்டே கொண்டாடப்படும்.
இதைத் தவிர ‘க்ஷய’ (அதாவது
குறை) மாதம் என்று ஒன்று உண்டு. இதில், ஒரு சந்திர மாதத்தில்
இரண்டு சங்கராந்தி வரும்.
க்ஷய ஆண்டுகள் 19, 46, 65, 76, 122, 141 ஆண்டுகளுக்கு ஒருமுறை
வெவ்வேறு விதங்களில் வரும்.
‘குறை’ மாதமும் ‘அதிக’ மாதமும் அடுத்தடுது வருவது மிகமிக
அபூர்வம். இது கடைசியாக 1315-ல் அக்டோபர் 18 – நவம்பர் 15 வரை ‘அதிக’ கார்த்திகை மாதமாகவும் நவம்பர்
16 – டிசம்பர் 15 வரை (விருச்சிக-தனுர் சங்கராந்திகள்
நிகழ்ந்ததால்) கார்த்திகை-மார்கசீர்ஷ ‘குறை’ மாதமாகவும் இருந்தன. டிசம்பர் 16 இலிருந்து (அடுத்த
ஜனவரி 15க்குள் மகர சங்கராந்தி வந்துவிடுவதால்) புஷ்ய மாதம்
ஆரம்பித்தது.
மற்ற நாட்காட்டிகளைப் பற்றி வேறு ஒரு சமயத்தில்
பார்ப்போம்...
இந்த அமந்த நாட்காட்டிகளை ஆந்திரம், கர்நாடகம், மராட்டிய மாநில மக்கள்
பின்பற்றுகின்றனர்.
அதை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இன்று இந்த நாளை ‘யுகாதி’யாக அதாவது வருடப் பிறப்பாக்க்
கொண்டாடுகின்றனர்.
அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்.
தகவல், நன்றி: திரு அனந்தநாராயணன்
இன்றைய தின நாளிதழ்களில் கூட இவ்வளவு விளக்கம் இல்லை... திரு. அனந்தநாராயணன் அவர்களுக்கும், பகிர்ந்து கொண்ட தங்களுக்கும் நன்றி அம்மா...
பதிலளிநீக்குயுகாதி தின நல்வாழ்த்துக்கள்...
யுகாதி வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
உகாதி நல்வாழ்த்துகள் ரஞ்சனி. நால் விளக்கப் பதிவு.
பதிலளிநீக்கு