இன்றைக்கு ஸ்ரீராம நவமி. ஸ்ரீராமனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். ஸ்ரீராமனுக்கு
என்ன வயது? இந்தக் கேள்விக்கு திரு செல்லப்பா
அவர்களின் தளத்தில் ஸ்ரீராமனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. எப்படி
அத்தனை துல்லியமாக ஸ்ரீராமாயணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை தேதி, வருஷம்
குறிப்பிட்டு சொல்ல முடியும் என்பது வியப்பான செய்தி. பின்னூட்டத்தில் இன்னுமொரு
வியப்பான தகவல். திரு காஷ்யபன் எழுதியிருக்கிறார். அதையும் படியுங்கள். வியப்பின்
உச்சிக்கே போய்விடுவீர்கள்.
பானகம் என்று தலைப்பு கொடுத்துவிட்டு
எதையோ பற்றிப் பேசுகிறேனே என்று நினைக்க வேண்டாம். இதோ அதைப்பற்றி சொல்லுகிறேன்.
நாங்கள் பெங்களூரு வந்த புதிதில் எதிர் வீட்டில் தீடீரென ஒருநாள் காலை வாசலில்
பந்தல். இன்று என்ன விசேஷம் பந்தல் போட்டிருக்கிறார்களே என்று நினைத்துக் கொண்டே
இருக்கையில் அவர்கள் வீட்டுப் பெண் கையில் மூன்று பாத்திரங்களுடன் (பெரிய
பாத்திரங்கள் தான்!) எங்கள் வீட்டிற்கு வந்தாள். நான் என்ன எது என்று கேட்கும்
முன்பே எதிர் வீட்டிலிருந்து ஒரு குரல்: ‘இன்னிக்கு ஸ்ரீராம நவமிம்மா! பான்கா
(பானகம்), கோசம்பரி, நீரு மஜ்ஜிகே (நீர் மோர்) அனுப்பியிருக்கேன். சாயங்கலாம்
புதுசா பண்ணி ஸாருக்கு அனுப்பறேன். இதை நீங்களும் குழந்தைகளும் சாப்பிடுங்க!’ அங்கு
இருந்தவரை இந்த விருந்து வருடாவருடம் ஸ்ரீராம நவமியன்று எங்களுக்குக் கிடைத்துக்
கொண்டிருந்தது.
பானகமும், கோசம்பரியும், நீர் மோரும்
என்ன ருசி என்கிறீர்கள்! எப்படி இவ்வளவு ருசி ருசியாகப் பண்ணமுடியும் என்று
நினைத்துக் கொண்டே நாங்கள் மூவரும் சாப்பிட்டு, குடித்து முடித்தோம். கொஞ்ச
நேரத்தில் எதிர்வீட்டு வாசலில் நிறைய மனிதர்கள். என்னவென்று பார்த்தோம். (வயிறு
நிரம்பிவிட்டது. இனி, பொழுது போகவேண்டுமே!) எதிர் வீட்டில் அந்தப் பக்கம் வருவோரையெல்லாம்
அழைத்து ஒரு காகித டம்ப்ளரில் பான்கா, ஒரு டம்ப்ளரில் நீரு மஜ்ஜிகே, ஒரு
தொன்னையில் கோசம்பரி என்று கொடுத்துக் கொண்டிருந்தனர். ரொம்பவும் வியப்பாக
இருந்தது. நிறைய பேர்கள் வந்து வாங்கி சாப்பிட்டு, குடித்துவிட்டு
சென்றுகொண்டிருந்தனர்.
ஸ்ரீராம நவமி அன்று ஒவ்வொரு வீதியிலும்
இதுபோல பல தண்ணீர்பந்தல்கள் அமைக்கப்பட்டு பானகம், நீர்மோர், கோசம்பரி எல்லாம்
விநியோகம் செய்கிறார்கள். பெரிய பெரிய அண்டாக்களில் இவையெல்லாம் தயார்
செய்யப்படும். கிட்டத்தட்ட சாயங்காலம் வரை இந்த விநியோகம் நடக்கிறது. இதையெல்லாம்
பிறகு தெரிந்துகொண்டோம். பெரிய பெரிய கடைகளில் கூட இதைபோல செய்து வைத்து
வருவோருக்கெல்லாம் கொடுப்பார்கள். ஒருமுறை ‘விவேக்’ கில் சாப்பிட்டோம். (சும்மா
கொடுத்தா விடுவார்களா?)
இந்தப் பானகம் இவர்கள் செய்யும்
முறையும் வித்தியாசமானதுதான். நம்மூரில் கிர்ணி பழம் என்று சொல்லுகிறோமே, (அதை
இவர்கள் தர்பூசணி என்பார்கள்) அந்தப் பழம், விளாம்பழம் இவற்றை இந்தப் பானகத்தில்
சேர்க்கிறார்கள். முதலில் கிர்ணிப் பழங்களை தோல் சீவி, அதை விளாம்பழங்களுடன்
சேர்த்து கையால் நன்கு பிசைந்து வேண்டும் அளவு நீர் சேர்த்து, பிறகு வெல்லம்
அல்லது நாட்டி சர்க்கரை (நம்ம ஊரு நாட்டு சர்க்கரை) சேர்த்து, அதில் சுக்கு, உப்பு
(கொஞ்சமே கொஞ்சம்) சேர்த்து பானகம் செய்கிறார்கள். ஏலக்காய் சேர்க்கிறார்கள். பானகத்தைக்
குடிக்கும்போது இந்தப் பழங்கள் வாயில் சின்னச்சின்ன துண்டுகளாக அகப்படுவது
பானகத்தின் ருசியை கூட்டுகிறது.
நாம் வடைபருப்பு என்று சொல்வதை இவர்கள்
கோசம்பரி என்கிறார்கள். இதற்கு பயத்தம்பருப்பு, கடலைபருப்பு இரண்டையும் ஊற வைத்து,
நீரை வடிகட்டி அதனுடன், வெள்ளரிக்காய், காரட், கொத்தமல்லி, தேங்காய்
சேர்க்கிறார்கள். கடுகு, பச்சைமிளகாய், பெருங்காயம் தாளித்துக் கொட்டுகிறார்கள்.
நீர் மோர் எல்லோருக்கும்
தெரிந்ததுதான். திரு பால ஹனுமான் பதிவில் இருக்கும் இந்தப் பதிவைப் பாருங்கள். கல்யாண மோர் எப்படி செய்கிறார்கள் என்று
எழுதியிருக்கிறார்.
சரி, வயிற்றுக்கு போட்டாயிற்று. இனி
காதுக்கு இனிய இசை கேட்போமா? இன்றிலிருந்து ஆரம்பித்து சுமார் ஒரு மாதத்திற்கு
எங்கள் ஊர் ஃபோர்ட் ஹை ஸ்கூலில் (Fort High School, Chamrajpet) ஸ்ரீராம நவமி
கச்சேரிகள் ஆரம்பம். முதல் நாள் எல்லா வருடமும் கத்ரி கோபால்நாத் கச்சேரிதான்.
நம்மூரு பெரிய பெரிய பாடகர்கள் - சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, உன்னி
கிருஷ்ணன், ஜேசுதாஸ், நெய்வேலி சந்தான கோபாலன் - என்று எல்லோரும் வருவார்கள். சீசன்
டிக்கட் உண்டு. சீசன் டிக்கட் வாங்கிக் கொண்டு தவறாமல் கச்சேரி கேட்பேன் நான். சுமார்
76 வருடங்களாக தொடர்ந்து வருடாவருடம் நடைபெறுகின்றன இந்தக் கச்சேரிகள். எம்.எஸ்.
சுப்புலட்சுமி கூட வந்து பாடியிருக்கிறாராம் இங்கு.
நேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி
படித்தேன். ‘இந்த முறை இந்தக் கச்சேரிகள் பணப்பற்றாக்குறை காரணமாக 5 நாட்கள்
மட்டுமே நடைபெறும் என்று. மனதிற்கு மிக மிக வருத்தமாகிப் போய்விட்டது. இங்கு வந்து
பாடி பிரபலமாக ஆகியிருக்கும் பாடகர், பாடகிகள் ஆளுக்கு கொஞ்சம் (கொஞ்சம் என்ன,
நிறையவே போடலாம்) பணம் போட்டு ஒரு நிதிய மூலதனத்தை உருவாக்கி, இந்தக் கச்சேரிகள்
தொடர்ந்து நடக்கும்படி செய்யலாம். அதைத்தவிர எல்லோரும் பணம் வாங்கிக் கொள்ளாமல் இங்கு
வந்து பாடலாம். தங்களது வியாபார மனதை சற்று கழற்றி வைத்துவிட்டு இந்த ஒரு சரித்திர
நிகழ்வு நின்று விடாமல் தொடர்ந்து நடக்க, ஏதாவது செய்வார்களா?
ஸ்ரீராமன் தான் இந்தக் கேள்விக்கு விடை
அளிக்க வேண்டும்.
சீதா பிராட்டியுடன் கூடிய ஸ்ரீராமன்
எல்லோருக்கும் எல்லா மங்களங்களையும் அளிக்கட்டும்.

