புதன், 6 ஏப்ரல், 2016

பிரபலங்களும் நானும்!



எமக்குத் தொழில் அசைபோடுதல் – 11


பிரபலங்களும் நானும்! 

பள்ளி நாட்களிலேயே எனக்கு பிரபலங்களுடன் தொடர்பு உண்டு. கனகவல்லி பள்ளிக்கூடத்தில் என்னுடன் ஒரு பிரபலம் படித்து வந்தார். அதேபோல புரசைவாக்கம் லேடி முத்தையா செட்டியார் பள்ளியில் படிக்கும்போதும் ஒரு பிரபலம் எனக்கு ஒரு வருடம் சீனியர் ஆக படித்து வந்தார் – எங்கள் பள்ளியில் இல்லை -  எங்கள் பள்ளிக்கு அடுத்தாற்போல இருந்த முத்தையா செட்டியார் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில். அவரைப் பற்றிப் பிறகு பார்க்கலாம். இப்போதைக்கு கனகவல்லி பள்ளியில் படித்த அந்தப் பிரபலம் யார்?

அவர் பெயரில் ஏற்கனவே ஒரு பிரபல நடிகை இருந்ததால் இவரைப் ‘பப்பி’  என்று அழைத்தனர். பெரியவர் ஆனதும் ‘குட்டி......’ என்ற அடைமொழியில் அழைக்கப்பட்டார். திருவேட்டீச்வரன் கோவில் அக்ரஹாரத்திலேயே அவரது வீடு இருந்தது. அவரது அம்மாவும் சில பல திரைப்படங்களில் தலையைக் காண்பித்துக் கொண்டிருந்தார். யார் என்று புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எங்கள் பள்ளியில் படித்து வந்தார் என்று தான் சொன்னேன். பள்ளிக்கூடத்திற்கு வருவார் என்று சொல்லவில்லை. என்ன குழப்பம் என்கிறீர்களா? அந்தச் சிறிய வயதிலேயே பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்ததால் தினமும் பள்ளிக்கு வர மாட்டார். எப்போது அவருக்கு ஷூட்டிங் இல்லையோ, அப்போது பள்ளிக்கு வருவார். அதாவது மழைக்கு ஒதுங்குவார் என்று சொல்லலாம்!

அவர் வந்தால் பள்ளியே களை கட்டும். மிக அழகாக உடை (குட்டையாக ஒரு ‘ஃப்ராக்’ – குடை போல விரிந்திருக்கும்) உடுத்திக் கொண்டு, தலையை நவநாகரீகமாக ‘கட்’ செய்துகொண்டு அம்மாவுடன் காரில் வந்திறங்குவார். அவரது அம்மாவிற்கு தனது மகளை யாராவது பார்த்து, திருஷ்டி பட்டுவிட்டால் என்ன செய்வது என்று கவலை இருக்கும் என்று தோன்றும். ஏனெனில் உள்ளே வரும்போதே, ‘பாப்பாவிற்கு ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஷூட்டிங்....ரொம்ப அலுப்பா இருக்கா....’ என்று சொல்லிக்கொண்டே வருவார். அவர் இருக்கும்வரை அந்தப் பாப்பாவை யாரும் நெருங்க முடியாது. அவர் அந்தப்பக்கம் கிளம்பிப் போனவுடன் ஆசிரியைகள், மாணவ மாணவிகள் எல்லோரும் அவரைச் சுற்றி சுற்றி வருவார்கள். ‘பப்பிம்மா! இப்போ எந்த படத்துல நடிக்கிற? யாரு ஹீரோ, யாரு ஹீரோயின்? உன்னோட அவங்க நல்லா பேசுவாங்களா? ஷூட்டிங் எங்க நடக்குது? மெட்ராஸ்லயா? வெளியூரா?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொள்வார்கள். ‘உங்கூட ஷூட்டிங் பார்க்க நாங்க வரலாமா? எங்களை எல்லாம் நீ ஒரு தடவ  கூட்டிக்கிட்டுப் போறியா?’ இந்தக் கேள்விக்கு மட்டுமல்ல; எந்தக் கேள்விக்கும் அந்தக் குழந்தை நட்சத்திரத்திடமிருந்து பதில் வராது. பொம்மை போல நின்று கொண்டிருக்கும் அந்தக் குழந்தை. ஒருவேளை தனது பிரபலத்தின் விலை புரிந்திருக்கவில்லையோ, என்னவோ. இல்லை அதிகமாக புரிந்து கொண்டு விட்டதோ?

சில தடவைகளில் தான் நடித்த காட்சிகளிலிருந்து சில நடனங்களை ஆடிக் காட்டும் அந்தப் பாப்பா. வாயைத் திறந்து பாடாது. சும்மா அபிநயம் மட்டும் பிடிக்கும். வசனம் ஏதாவது சொல்லும்மா என்றால் பேசாமல் நிற்கும். எப்போதோ ஒரு தடவை வருவதால் அந்தக் குழந்தை பள்ளிக்கு வரும் நாள் விழா நாள் போல இருக்கும். அடுத்த நாள் வருமா என்பது தெரியாததால் வந்த அன்றைக்கே அத்தனை கேள்விகளும் கேட்கப்படும்; எல்லா விவரங்களும் அறியப்படும். எல்லோரிடமும் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுவிடவேண்டும் என்கிற  ஆர்வமும் அதிகமாக இருக்கும்.

திரைப்படம் என்கிற ஊடகத்தின் சக்தியை, வீச்சை அப்போதே என்னால் அறிய முடிந்தது என்று சொல்லலாம். ஒருமுறை கூட அந்தக் குழந்தை நட்சத்திரம் தொடர்ந்தாற்போல பள்ளிக்கு வந்தது கிடையாது. ஆனாலும் கூட என்ன வரவேற்பு, என்ன உபசாரம்!. நான் உட்பட பல மாணவிகளும் அந்தக் குழந்தையைப் பார்த்து  ஒருவகையான பொறாமை கொண்டோம் என்றால் மிகையாகாது.

ஒரு மாயவலையில் எல்லோரும் வீழ்ந்தது போல ஒரு தோற்றம் ஆசிரியர்களும், மாணவ மாணவிகளும் இந்த வலையின் வீச்சில் விழுந்துவிட்டவர்கள் என்பது சற்று வருத்தமான உண்மை. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை இந்த நிலை மாறவில்லை. அதிகம் ஆகியிருக்கிறது என்று சொல்ல வேண்டும். திரைப்படம் என்று ஒரே ஒரு ஊடகம் செய்து வந்த வேலையை இப்போது தொலைகாட்சி நமது வீட்டின் கூடத்திற்கே கொண்டு வந்துவிட்டது. குடும்பத்தினர் ஒருவருடன் ஒருவர் பேசுவதற்குக் கூட முடியாமல் யாரிடம் ரிமோட் கண்ட்ரோல் இருக்கிறதோ அவரே பெரியவர் என்கிற ஒரு கர்வம்! கூடவே இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைபேசி.

பக்கத்தில் இருப்பவர்களிடம் பேச நேரம் இருப்பதில்லை. அவர்களின் முகத்தைப் பார்க்காமல் எங்கோ இருப்பவரிடம் பேச்சு. குழந்தைகள் வெளியில் போய் விளையாடுவதை மறந்துவிட்டன. உட்கார்ந்த இடத்திலேயே மணிக்கணக்கில் விளையாடுகிறார்கள். சிறுவயது உடற்பருமன் குழந்தைகளிடம் அதிகம் காணப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. கைக்குழந்தைகள் கூட அம்மாவின் கைபேசியில் தான் விளையாடுகின்றன. அம்மாக்களும் குழந்தை அழாமல், தங்களைப் படுத்தாமல் இருந்தால் போதும் என கைபேசியைக் கொடுத்து விடுகிறார்கள். இவற்றின் பலனை அடுத்த தலைமுறையினர் உடல்நலக்குறைவு என்ற பெயரில் அனுபவிக்கப் போகிறார்கள். ஆனால் அதைப் பற்றி இப்போது என்ன கவலை? அப்போது ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டால் போகிறது.

நாம் தொடர்ந்து அசை போடலாம்!

அதீதம் இணையஇதழில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடர்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

திருப்பாவையும், சர்மா சாரும்!





திருப்பாவையும், சர்மா சாரும்!

எனது பள்ளிநாட்களில் இருந்தே திருப்பாவை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அந்த நினைவுகளை இந்த பகுதியில் அசைபோடுகிறேன்.
இது மார்கழி மாதம்.

திருவாடிப் பூரத்து செகத்துதித்த, திருப்பாவை முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்றெடுத்த, பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான, ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்த, உயரரங்கற்கு கண்ணி உகந்தளித்த, மருவாறும் திருமல்லி வளநாடி, வண்புதுவை நகர்கோதை அருளிச் செய்த திருப்பாவையால் சிறந்து விளங்கும் மாதம்.

தினமுமே திருப்பாவையை சேவித்த போதும் மார்கழியில் சேவிப்பது மன நிறைவைத் தரும். திருப்பாவையை நினைவு தெரிந்த நாளாக சேவித்து வருகிறேன்.

திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த போது விடியற்காலையில் மார்கழி மாதம் தினமும் பஜனை கோஷ்டி ஒன்று எங்கள் வீதி (நாகப்பா ஐயர் தெரு) வழியே போகும். அதுதான் எங்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி!
‘ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப.....’
என்று அவர்கள் பாடிக்கொண்டே போவார்கள். இன்னும் இந்தப் பாட்டு அதே மெட்டில் என் நினைவில் இருக்கிறது.

பள்ளியிலும் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுப்பார்கள். என் அம்மா இன்றைக்கும் வியப்புடன் சொல்லிக்கொண்டிருப்பது கனகவல்லி பள்ளியில் திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில் வரும் திருவல்லிக்கேணி பாசுரங்களான ‘விற்பெருவிழவும் கஞ்சனும் மல்லும்....’ என்ற பாட்டை எங்களுக்கு சொல்லிக் கொடுத்ததுதான்.


என் அக்கா, திருமதி எம்.எல்.வி. பாடிய ராகத்திலேயே எல்லாப் பாடல்களையும் அழகாகப் பாடுவாள். வாசலில் பெரிய கோலம் போடுவாள். நான்? ரசிப்பேன் அவ்வளவுதான்! நம்மால் முடிந்ததைத்தானே நாம் செய்ய முடியும்?

பிறகு புரசைவாக்கம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பில் லேடி எம்.சி.டி. முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.

திருப்பாவை என்றால் எனக்கு நினைவுக்கு வரும் – ஆண்டாளைத் தவிர – ஒருவர் திரு கேதாரேஸ்வர ஸர்மா. எங்கள் தமிழ் வாத்தியார், ஸர்மா ஸார்.

மார்கழி மாதம் முப்பது நாளும் பள்ளி முடிந்த பின் திருப்பாவை அன்றைய நாள் பாட்டை சொல்லிக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவரது மாணவிகளுள் ஒருவர் வீட்டிலிருந்து பிரசாதம் வரும்.

வெள்ளைவெளேரென்ற பஞ்சகச்சம். வெள்ளை நிற அங்கி அதன் மேலே வண்ண ஷால். கட்டு குடுமி. நெற்றியில் பளீரென்ற திருநீறு.
ஆண்டாளைப் பற்றி சொல்லுகையில் கண்களில் நீர் ததும்பும்!

தமிழ் வாத்தியார் என்றால் மனதில் தோன்றும் பிம்பத்துக்கு ஏற்றார்போல் எங்கள் ஸர்மா ஸாருக்கும் நிறைய பெண்கள் + ஏழ்மை.

திருப்பாவை உபன்யாசத்துக்கு நடுவே தன் ஏழ்மையையும், ஆண்டாளும் அவள் சாதித்த திருப்பாவையுமே தன் பெண்களை கரையேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்ணீருடன்  ஆண்டாளின் முன் வைப்பார்.
நாங்களும் கண்களில் கண்ணீருடன் அவருக்காக ஆண்டாளிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்து கொள்ளுவோம். 

அவரது மாணவிகளைத் தவிர, சில தாய்மார்களும் அவரது உபன்யாசத்தைக் கேட்க வருவார்கள். பல தாய்மார்கள் நேரில் வராவிட்டாலும் பிரசாதம் செய்து அனுப்பி விடுவார்கள்.

கடைசி நாளன்று – வங்கக் கடல் கடைந்த  பாசுரத்தன்று ஆண்டாள் கல்யாணம் நடத்துவார். ரொம்பவும் அமர்க்களமாகப் பண்ணுவார். பூக்களும் நகைகளுமாக ஆண்டாளும் ரங்கமன்னாரும் மின்னுவார்கள். ஆண்டாள் பெருமாளுடன் கலந்து விட்டதை அவரால் சொல்லவே முடியாது. நா தழுதழுக்கும். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டும். உணர்ச்சிப் பெருக்கில் எல்லோரும் ஊமைகளாக உட்கார்ந்திருப்போம். அன்றைக்கு நிறைய மாணவிகள், பெற்றோர்களுடன் வருவார்கள்.

நடுவில் ஒரு நாள் திருப்பாவைப் போட்டி நடக்கும்.

வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டாள் படம் பரிசு. வருடம் தவறாமல் கலந்து கொண்டு பரிசும் வாங்கி விடுவேன் நான்.

ஆண்டாள் சாதித்த திருப்பாவை முப்பதையும் தப்பாமல் சொன்னால் நல்ல வாழ்க்கை அமையும்  என்ற  விதையை ஒவ்வொரு மாணவியின் உள்ளத்திலும் விதைத்தவர் அவர்தான்.

அவரது பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. அவர் நம்பிய ஆண்டாள் அவரைக் கைவிடவில்லை.

நானும் அவர் சொல்லியதை அப்படியே நம்பினேன். என் பெண்ணின் உள்ளத்திலும் திருப்பாவை என்கிற வித்தை விதைத்தேன்.

எனக்கு ஒரு நாராயணனும், அவளுக்கு ஒரு கேஷவ மூர்த்தியும்  கிடைத்து எங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து இருக்கிறது.

'சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்....

என்பதற்கு  இதைவிட சாட்சி வேண்டுமா?






அதீதம் இணையஇதழில் வெளிவந்துகொண்டிருக்கும் தொடர்.