வியாழன், 5 நவம்பர், 2015

தேடித்தேடி இளைத்தோம்.......!

எமக்குத் தொழில் அசைபோடுதல் – 3


எங்க வீட்டு மாடிப்படியை ஏன் என்னால் மறக்க முடியாது என்று சொன்னேன். அதேபோல எங்கள் பள்ளி மாடிப்படிக்கும் ஒரு கதை உண்டு. எங்க பள்ளி மாடிப்படிகளை நான் கவனிக்க ஆரம்பிச்சது மூணாம் வகுப்புக்குப் போனப்புறம்தான். முதல் ரெண்டு வகுப்புகள் கீழே இருக்கும். மூணு, நாலாம் வகுப்புகள் மாடில. எங்கள் தலைமையாசிரியர் திருமதி சுசீலா எடுக்கும் ஐந்தாம் வகுப்பும் கீழேயே பள்ளியில் நுழைந்தவுடன் வலது பக்கம் இருக்கும். நான்காம் வகுப்பிற்கு நான் போனபோது என் தம்பி அதே பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் வந்து சேர்ந்தான். அவனை பத்திரமாக அழைத்துக் கொண்டு போய் திரும்பக் கூட்டி வருவது என் பொறுப்பு.

எங்க வீடும் எங்க பள்ளியும் ஒரே தெருவுல இருந்தன. எங்க வீடு இந்தக் கோடி. அடுத்த கோடியில எங்க பள்ளி இருந்தது. தினமும் பள்ளிக்குப் போகும்போது நான் என் தம்பியின் கையைப் பிடிச்சுண்டு போகணும். அம்மாவின் கட்டளை. அம்மா எங்க வீட்டு மாடிலேருந்து ஜன்னள் வழியா  பார்த்துண்டிருப்பா – நாங்க பள்ளிக்குப் போய் சேரும் வரை. கொஞ்ச தூரம் தான் என் கையைப் பிடிச்சுண்டு வருவான் என் தம்பி. பிறகு கையை விலக்கிண்டுடுவான். ‘அம்மா கோச்சுப்பா’ ன்னு நான் சொன்னா, ‘இனிமே அம்மாவுக்கு நாம் போறது ஜன்னலேருந்து தெரியாது’ என்பான்!  என்னைவிட விவரமானவன் அவன்! நேர் தெருன்னாலும் கொஞ்ச தூரம் போனவுடன் அந்த தெரு வளைந்து போகும். அதனால அந்த இடத்துலேருந்து நாங்க போறது அம்மாவுக்குத் தெரியாது. இதெல்லாம் அந்தச் சின்ன வயசுல அவனுக்கு எப்படித் தெரியும்னு எனக்கு ஆச்சர்யமா இருக்கும்.

இங்க இன்னொரு விஷயமும் ஞாபகத்துக்கு வரது: எங்க அம்மா எங்களை பயமுறுத்த ‘நானே உங்க ஸ்கூல்ல டீச்சரா வருவேன்’ என்று அடிக்கடி சொல்லுவாள். இதுக்கு ஒரு பின்னணிக் கதை இருக்கு. எங்களோட மூணாம் வகுப்பு கோவிந்தம்மா டீச்சரும், எங்க மாமியும் (அம்மாவின் சகோதரர் மனைவி) ஒரே பள்ளியில படிச்சவா. வகுப்புத் தோழிகள். அதனால் மாமி அடிக்கடி, ‘நானும் கோவிந்தம்மா  மாதிரி டீச்சர்  ஆகியிருக்க வேண்டியவ’ என்று சொல்லி கொள்வார். அதனால்  ‘மாமி(யே!) டீச்சரா போயிருக்கலாம்ன்னா, எனக்குக் கிடைக்காதான்ன ஒரு டீச்சர் உத்தியோகம்?’ அப்படின்னு எங்க அம்மா சொல்வா. எனக்குக் கொஞ்சம் பயம்தான். ‘அம்மா டீச்சரா வந்துட்டா என்ன பண்றது?’ என்று ஒருநாள் கவலையுடன் என் தம்பியிடம் கேட்டேன். ‘அதெல்லாம் வரமுடியாது!’ என்றான் தீர்மானமாக. ‘ஏன்?’ 9 கஜம் புடவை கட்டிண்ட யாரும் டீச்சரா வரமுடியாது’ ‘அப்போ நம்ம கல்யாணி மாமி?’ ‘அதான் சொன்னேனே, 9 கஜம் புடவை கட்டிண்டவா யாருமே டீச்சரா வரமுடியாது!’ என்று அழுத்தம் திருத்தமா சொல்லி, இதுக்கு மேலே இதுல பேசறதுக்கு விஷயம் இல்லை என்கிற மாதிரி வாயை மூடிண்டுட்டான்.

எனக்கு இந்தப் பள்ளியில் என்னுடன் படித்த சினேகிதி ஒருத்தியை மட்டுமே இன்னும் நினைவில் இருக்கிறது. அவள் பெயர் சந்திரப்பிரபா. அவளை மறக்க முடியாதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஒன்றல்ல; இரண்டு காரணங்கள். முதல் காரணம் அவள் தம்பி. அவனும் எங்கள் பள்ளியிலேயே படித்துக் கொண்டிருந்தான். ஒருநாள் சாயங்காலம் பள்ளி முடிஞ்சு மணி அடிச்சதும் நானும் அவளுமாக  கீழே போய் அவளது தம்பியைக் கூப்பிடப் போனால் அவன் அங்கு இல்லை. எங்கே போயிருப்பான் என்று பள்ளி முழுவதும் (சின்னப் பள்ளிக்கூடம்!) தேடறோம், காணவில்லை. அழுதுகொண்டே ஆசிரியையிடம் சொன்னால்,  ‘எங்கடி போயிடுவான்? இங்கத்தான் எங்கயாவது ஒளிஞ்சிகிட்டிருப்பான், தேடிப்பாருங்க’ என்றார் எங்கள் வகுப்பு ஆசிரியை திருமதி கோவிந்தம்மாள். உன்னைக் கண் தேடுதே என்று தேடி தேடி இளைத்தோம்! அழுது கொண்டே வாசலுக்கு வந்தால் அங்கே சந்திரப்பிரபாவின்  தம்பி அவளது அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு அலட்டிக்காம நிற்கிறான். சந்திரப்பிரபாவின் அம்மாவுக்கோ முகம் முழுக்க கோவம். வெளியில் வந்த எங்கள் ஆசிரியையை ‘பிலுபிலுன்னு’ பிடிச்சுண்டுட்டா. ‘குழந்தை தன்னந்தனியாக வீட்டுக்கு வந்திருக்கான். உங்களுக்கு எப்படித் தெரியாம போகும்? இண்டர்வெல் முடிஞ்சவுடனே வகுப்புல எல்லாக் குழந்தைகளும் இருக்காளான்னு பார்க்க வேணாமா? எங்க வீடு கிட்டக்க இருந்தது. அதனால வந்துட்டான். வேறு எங்கயாவது போயிருந்தால்...?’ எங்கள் ஆசிரியை அந்த அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அடுத்தநாள் காலை பள்ளிக்குப் போகும்போது சந்திரப்பிரபாவின் அம்மாவும் வந்தா. ‘இனிமே சந்திரப்பிரபாவை கொஞ்சம் ஜன்னல் ஓரமா உட்கார வையுங்கோ. இவன ஒருகண் பார்த்துக்கட்டும்’ சரின்னு ஆசிரியையும் ஒப்புக்கொண்டார். அந்த அறையில் ஜன்னல் எல்லாம் கிடையாது. ஒரு சிறிய இடைவெளி இருக்கும். அங்கிருத்து ஒன்றாம் வகுப்பு தெரியும். அங்கு அவளது இருப்பிடம் மாற்றப்பட்டது. அப்போதெல்லாம் வகுப்பில் ஒரே இடத்தில் உட்கார வேண்டும் என்ற வழக்கம் கிடையாது. ச.பிரபாவின் தம்பி ஒரொரு நாள் ஒரொரு இடத்தில் உட்காருவான். சிலசமயம் வகுப்பிலிருந்து அவனைப் பார்க்க முடியாவிட்டால், ச. பிரபா மனசு பதைபதைக்க மாடிப்படி கிட்ட வந்து பார்ப்பாள். அவள் அவனைப் பார்க்க வருவது தெரிஞ்சு ஒளிஞ்சுக்கறானோன்னு கூட ஒரொரு சமயம் தோணும். பாவம் அவள். சிலசமயம் நான் வந்து மாடிப்படிகிட்ட வந்து அவன் இருக்கிறானா என்று பார்த்துவிட்டு வந்து அவளிடம் சொல்லுவேன். பெரிய ஹிம்சை! அந்த ஒரு தடவை தான் அதற்கு அப்புறமா சீதாவின் தம்பி வீட்டுக்குப் போகலை. அவனும் பெரியவனாகிக் கொண்டிருந்தான், இல்லையா? கொஞ்சம் பொறுப்பு வந்திருக்கும்!

இன்னொரு வகையிலும் எனக்கு நாங்க இருந்த மாடிவீடு மறக்க முடியாதது. கீழே இருந்தவர்கள் வீட்டில் ஒரு கிராமபோன் இருந்தது. அந்த காலத்திய அனார்கலி, (நான் பிறந்த வருடம் வெளிவந்த திரைப்படம் இது) மொகலே-ஆஜம் பாடல்கள் எப்போதும் பாடினபடி இருக்கும் அந்த கிராமபோன். அனார்கலி முழு திரைப்படமே இசைத்தட்டு வடிவில் அவர்களிடம் இருந்தது. அந்த கிராமபோனை பாட வைப்பது ரொம்பவும் சுவாரஸ்யமான விஷயம்.  அவர்கள் அந்த கிராமபோன் பெட்டியை அவர்கள் வீட்டுக் கூடத்தில் கொண்டு வைத்து முதலில் கைப்பிடி போட்டு சுத்து சுத்தென்று சுத்துவார்கள். பிறகு இசைத் தட்டை அதில் வைத்து வளைந்து இருக்கும் அதன் கை போன்ற பகுதியில் ஒரு ஊசியை சொருகி இசைத்தட்டின் நுனியில் வைப்பார்கள். அது பாட ஆரம்பிக்கும். ரொம்பவும் ஆசையாக நான் இதையெல்லாம் பார்த்துண்டு உட்கார்ந்திருப்பேன் ‘கீ’ குறைந்துவிட்டால் பாட்டின் வேகம் குறைந்து கட்டைக் குரலில் நிதானமாக பேசுவது போலப் பாடும். கீ கொடுக்கக் கொடுக்க அது பழையபடி பாட ஆரம்பிக்கும். எங்களுக்கு அது ரொம்பவும் குஷியாக இருக்கும். எம்எல்வி பாடிய திருப்பாவை முப்பது பாடல்களும் அவங்க வீட்டுல இருந்துதுன்னு சமீபத்துல எங்க அக்காவ பாத்தபோது ஒரு புதுத் தகவல் சொன்னா. அம்பதுகளிலேயே எம்எல்வி இந்தப் பாடல்களை பாடியிருக்கிறார். கிரேட் பாடகி!

கீழ் வீட்டில சக்குன்னு ஒரு அக்கா இருந்தா. இன்னும் இரண்டோ மூன்றோ அண்ணாக்களும் இருந்தனர். எனக்கு அவர்கள் பெயர்கள் இப்போ நினைவில இல்லை. ஆனால் இந்த அக்கா எங்களுடன் மிகவும் ஆசையாகப் பேசிக் கொண்டிருப்பாள். அவளுக்கு அப்போது குழந்தை பிறக்க இருந்தது. பாவம் நடக்க முடியாமல் அந்த அக்கா மெல்ல மெல்ல மூச்சிரைக்க மூச்சிரைக்க தன் பெரிய வயிற்றை தடவியே படியே நடந்து வருவாள். அவ்வப்போது அக்காவிற்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும். ஒருநாள் மாலையில் நாங்கள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தபோது வீடெல்லாம் அலம்பி விட்டிருந்தா. கீழ் வீட்டில் அழுகை சத்தம் வந்துகொண்டிருந்தது. அம்மாட்ட   கேட்டப்போ சக்கு அக்கா உம்மாச்சியிடம் போய்விட்டதாக அம்மாவும் அழுதுண்டே சொன்னா. காலையிலேயே அக்காவ ஆஸ்பத்திரில சேர்த்துருக்கா. என்னிக்குமில்லாம அன்னிக்கு மதியம் அம்மாவே எங்களுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுத்தது ஏன்னு அப்பத்தான் புரிஞ்சுது. எவ்வளவு தூரம் இந்த இறப்பு என்னை அன்று பாதித்தது என்று தெரியவில்லை. இன்று நினைத்துப் பார்க்கும்போது அந்தப் பெற்றோர்களின், கணவரின் இழப்பு புரிகிறது. மனதை வருத்துகிறது. அன்றிலிருந்து கிராமபோன் இசையும் நின்றுவிட்டது.


தொடர்ந்து அசைபோடலாம்!


அதீதம் இணைய இதழில் வெளிவரும் தொடர் 

புதன், 4 நவம்பர், 2015

‘உன்னைக் கண் தேடுதே.....ஹிக்!



நன்றி: கூகுள்



‘உன்னைக் கண் தேடுதே.....ஹிக்!
உ...............ன் எழில் காணவே.......வே........ஏ......ஏ.......ஹிக்! உளம் நாடுதே.... ஹிக்!’
உறங்காமலே என் .....ன்  ........  ன்   மனம் வாடுதே...ஏ...ஏ....
உன்னை.......ஹிக்! .......என்.....கண்........தேடுதே.........!

அந்த காலத்து கருப்பு வெள்ளை டாக்சியில் இந்த ‘விக்கல்’ பாட்டை நான் பாடியபடியே அப்பா, அம்மா, சகோதர சகோதரிகளுடன் வந்து கொண்டிருந்தேன்.  டிரைவர் மாமா சொன்னார்: ‘பாப்பா நல்லா பாடுது ...! பெரிசா ஆன பி. சுசீலா மாதிரியே வரும் போல....!’
 நல்லகாலம், டிரைவர் மாமாவின் ஜோசியம் பலிக்கவில்லை! பி.சுசீலா தப்பிச்சார்!

இப்படிப் பாடிண்டே நாங்க வந்து சேர்ந்த இடம் சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீச்வரன் பேட்டைல இருக்கற நாகப்பையர் தெரு. வந்து சேர்ந்த இடத்தைப் பற்றிச் சொல்றதுக்கு முன்னால இந்த பாட்டைப் பற்றி சொல்லியாகணும். ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ (இளம் வயது ஜெமினி – அவருக்கு அக்கா போல அஞ்சலி தேவி!) படத்தில் வரும் இந்தப் பாட்டுல பாடல் வரிகளை விட ‘விக்கல்’ பிரபலமானது. நான் மிகச் சரியாக விக்கி, எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருப்பேன். இந்தப் பாடலை ரொம்பவும் ரசிச்சு ரசிச்சு (விக்கி விக்கி!) பாடினதாலோ என்னவோ எனது இசைப்பயணம் விக்கித்து(நின்று)விட்டது!

திருவல்லிக்கேணில நாகப்பையர் தெருவுல (இப்போதைய பெயர் என்னவோ, அந்தத் தெருவுக்கு – நாகப்பா தெரு?) நாங்க குடியிருந்த மாடிவீடும், முக்கியமா மாடிப்படிகளும் இன்னமும் நினைவில பசுமையாக இருக்கு. எனக்கு நினைவு தெரிய ஆரம்பிச்சது இங்கதான். அதுதான் முதல் நினைவு - எனது சிற்றறிவில அப்போது நடந்த சம்பவங்களில் இருந்துதான் நினைவு இருக்கிறது. இந்த வீட்டிற்கு வருவதற்கு முன் நாங்க புரசைவாக்கத்துல இருந்ததா அம்மா சொல்லுவா. அங்கு நடந்ததெல்லாம் அவ்வளவா, ஏன் துளிக்கூட நினைவில்ல எனக்கு. மாதம் ஒருமுறை மெரீனா பீச்சுக்கு எல்லோருமா போவோம்; ஓரணாவிற்கு(!) தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல் வாங்கி சாப்பிடுவோம் (எல்லாருக்குமா சேர்த்து ஓரணாவுக்கு சுண்டலா, ஒவ்வொருத்தருக்கும் ஓரணாவுக்கா? தெரியல) அப்படின்னு அம்மா எப்போதாவது அசைபோடுவா. நான் திறந்தவாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பேன் – அப்போ சாப்பிட்ட சுண்டலை நினைச்சோ என்னவோ? அம்மா சொல்வதற்கு சாட்சியாக நானும் எங்க அக்காவும் மெரீனா பீச்ல விளையாடற கருப்பு வெள்ளைப் புகைப்படம் ஒண்ணு இன்னும் எங்க வீட்ல இருக்கு.

திருவல்லிக்கேணி வீட்டில கீழே ஒரு குடும்பம். மேல நாங்க. எங்க போர்ஷனுக்கு போறதுக்கு குறுகலா மாடிப்படிகள், சிமென்ட் கைப்பிடி சுவருடன். படிகள் செங்குத்தாக ஏறும். பாதி ஏறினவுடனே ஒரு திருப்பம். அதாவது, ஒரு மிகக்குறுகலான வளைவு. மறுபடி செங்குத்தான படிகள். அந்த வீட்டில் எத்தனை வருடங்கள் இருந்தோம்னு நினைவுல இல்லை. ஆனா என் தம்பி கணக்கில்லாத தடவை அந்த மாடிப்படியில உருண்டு விழுந்தது நினைவுல இருக்கிறது. எனக்கு அப்போது 5 வயசு இருக்கலாம். ஒன்றாம் வகுப்பில் இருந்ததால் இந்தக் கணக்கு. அவன் என்னைவிட மூன்று வயது சிறியவன்.

நாகப்பய்யர் தெருவுல நாங்க இருந்தது ரொம்ப சின்ன(!?), 5 படுக்கை (அறை)  கொண்ட வீடு. மாடிப்படிகளை தாண்டினவுடன் ஒரு குட்டி ரேழி. அதை ஒட்டினாப்ல சின்ன ரூம். அதுதான் எங்க கிச்சன், டைனிங் ஹால், ஸ்டோர் ரூம் அதாவது த்ரீ இன் ஒன் ரூம். அதை ஒட்டி இன்னொரு சற்றுப் பெரிய அறை. அதுதான் நாங்க அஞ்சு பேரும் – அம்மா ,அப்பா, என் அக்கா, நான், என் தம்பி - படுத்துக்கற 5 படுக்கை அறை! 

அம்மா எங்க வீட்டு - மாடிக் கதவை சாத்தியே வைச்சிருப்பா. அசந்து மறந்து நாங்க யாராவது திறந்துட்டு மறுபடி சாத்த மறந்துட்டா போச்சு!  அடுத்த நொடி ‘ஓ!’ ன்னு ஒரு அலறல் கேட்கும். என்னோட ரெண்டு வயசு தம்பி தத்தக்கா பித்தக்கான்னு  மாடிப்படில எறங்க போயி, கால் தடுக்கி, அந்த படிகளில் உருண்டுண்டு  இருப்பான். ‘ஓடி போய் அவனைப் பிடி!’ ன்னு அம்மா கத்துவா. நானும் என் அக்காவும் (என்னை விட 3 வயசு பெரியவ)  விழுந்தடிச்சுண்டு ஓடறதுகுள்ள அவன் கடைசிப் படியில் விழுந்து கிடப்பான்.  உதட்டுல அடிபட்டோ, பல்லில் அடிபட்டோ அழுதுண்டிருப்பான். அம்மா கிட்டேருந்து அவனுக்கு மட்டுமல்ல; எங்களுக்கும் சேர்த்து திட்டு விழும் – ‘எந்த முட்டாள் கதவை சாத்த மறந்தது?’ ன்னு. ஒருநா இப்படி அடிபட்டுதே, இனிமே படில எறங்காம இருப்பானா? சின்னக் குழந்தைதானே? அடுத்த நாளும் இதே கதை தான்! மறுபடி மறுபடி  மாடிப்படியில உருளல் தான்! மறக்கவே முடியாத மாடிப்படிகள்!

இந்தக் காலம் போல அப்போல்லாம் குழந்தை பிறக்கறதுக்கு முன்னால ஸ்கூல் அட்மிஷன், பிறந்தவோடனே ப்ளே ஹோம்ல சேர்க்கறது எல்லாம் கிடையாது. அஞ்சு வயசுவரைக்கும் வீட்டுலேயே கொட்டம். கிண்ட(ல்)ர் கார்டன் எல்லாம் கிடையாது.  நேரா ஒண்ணாங்கிளாஸ். ஸ்லேட், பலப்பம் தான் ரெண்டாவது வரைக்கும். மூணாவதுலேருந்து பென்சில் நோட்புக். அஞ்சாவதுல தான் ஆங்கிலம். மத்த சப்ஜெக்ட் எல்லாம் தமிழ்ல தான்.

நாங்க படிச்சது கனகவல்லி எலி(மெண்டரி) ஸ்கூலில். பள்ளிகூட வாசல்ல கனகவல்லி எலி. பள்ளிக்கூடம்னு ஆங்கிலத்துல (Kanakavalli Ele. School) எழுதியிருக்கும் – அந்த போர்டுல இடமில்லாததால!

எங்களை பள்ளிகூடத்துல சேர்த்த பெருமை எங்க மாமா திருமஞ்சனம் சுந்தரராஜனை சேர்ந்தது. என் அக்கா, நான், என் தம்பி மூணு பேருமே இந்த பள்ளிகூடத்துல தான் அஞ்சாவது வரை படிச்சோம். மாமாதான் எங்களை அழைச்சுண்டு போய் ஸ்கூல்ல சேர்த்தது. அதுவரை ரஜினி ஆக இருந்த நான் பள்ளிகூடத்தில் சேரும்போது ரஞ்சனியாக – மாமாவின் கைங்கர்யம் – மாறினேன்.


தொடரும்



அதீதம் இதழில் வெளிவரும் எனது தொடர் 

வெள்ளி, 2 அக்டோபர், 2015

வலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் 2015

அன்புள்ள வலைப்பதிவாள நண்பர்களே,

வழக்கம்போல இந்த ஆண்டும் நமது வலைப்பதிவர் திருவிழா வரும் 11 ஆம் தேதி  (11.10.2015) புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. வலைப்பதிவு செய்யும் அத்தனை அன்பர்களும் திரளாக வந்து இந்த விழாவில் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க  வேண்டுகிறேன்.

மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் துரிதகதியில்  நடைபெற்று வருகின்றன. நம்மைப் போன்றே வலைப்பதிவு செய்யும் நண்பர்களை சந்திக்க, சந்தித்து அளவளாவ இது ஒரு பொன்னான வாய்ப்பு.

எல்லோரையும் விழாக்குழு சார்பில் வருக, வருக என்று அழைக்கிறேன்.
கீழே இருப்பது விழாவின் அழைப்பிதழ். இதை நான் வந்து உங்களுக்கு நேரில் கொடுத்ததாக நினைத்து விழாவில் கலந்துகொள்ள வேண்டுகிறேன்.



Displaying in inner Frd Side.jpg


Displaying INNER Back SidePAGE 1.jpg




அன்புடன்,
ரஞ்சனி நாராயணன்

புதன், 30 செப்டம்பர், 2015

தூய்மை இந்தியா இயக்கம்



சென்ற வருடம் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி. பெங்களூரே அல்லலோல கல்லோலம்! அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு வைக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் குண்டு கட்டாக ஒரே பிளாஸ்டிக் பையில் கட்டி குப்பை வண்டியில்  (பாதி வண்டியில் மீதி கீழே!)  போடக் கூடாது என்று பெங்களூரு மஹா நகர பாலிகே கண்டிப்பாக உத்தரவு போட்டிருந்தது. ஆளுக்கு ஒரு குப்பை பையைச் சுமந்து கொண்டு எங்கே போடுவது என்று திக்குத் தெரியாமல் அலைந்தோம். ஓர் வீட்டில் இத்தனை அமர்க்களம் என்றால் ஒரு நாட்டை சுத்தப் படுத்துவது என்பது சாமானிய காரியமா?


2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி மிகவும் வியப்பான நிகழ்வுகள் இந்தியாவின் பொதுவிடங்களில் நிகழ்ந்தன. நாட்டின் பிரதம மந்திரியிலிருந்து வட்டம், மாவட்டம் என்று குட்டிக்குட்டி தலைவர்கள், அந்தந்த பகுதிகளின் சின்னச்சின்ன பிரபலங்கள் எல்லோரும் துடைப்பமும் கையுமாக வீதிகளில் இறங்கினர்! தொலைக்காட்சிகளுக்கு நல்ல தீனி! நடிக நடிகையரிலிருந்து அவர்கள் வீட்டு நாய்க்குட்டி வரை கையில் துடைப்பத்துடன் காட்சி தந்தனர்.

காந்திய வழியில் நமது பிரதமர் திரு மோதி கையில் துடைப்பத்துடன் ‘சுத்தமான இந்தியாவை உருவாக்குவோம்’ என்று சொல்லி தெருவில் இறங்கியதை நாடே தொலைக்காட்சி முன் அமர்ந்து திறந்த வாயில் ஈ புகுந்தது தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தது. எல்லாம் ‘தூய்மை இந்தியா’ என்னும் இயக்கத்திற்காக நிகழ்ந்தவை.

சுமார் 31 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் ‘இந்தியாவை சுத்தப்படுத்துவோம்’ என்று உறுதிமொழி எடுத்தனர். சமூக தளங்களும் தங்கள் பங்கிற்கு ஜோக்குகள், கேலிச்சித்திரங்கள், உறுதிப்பத்திரங்களில் கையெழுத்து என்று இறங்கின. எல்லாம் சிறிது நாட்கள்தான். தெருவோரங்களில் இயற்கை உபாதையை கழிக்க ஒதுங்குபவர்கள் தங்கள் வழக்கத்தைத் தொடர்ந்தனர்.  இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுக் குப்பையை அடுத்த வீட்டு வாசலில் தூக்கி எறிந்துவிட்டு சட்டென்று மறைந்தனர்.

எப்படி நமது கிராமங்களின், நகரங்களின் கழிவுகளை அகற்றவது? பொதுமக்களின் பணத்தைக் கொட்டி கழிப்பறைகள் கட்டுவதால் பலன் இருக்குமா? கழிப்பறைகளை சரியாகப் பயன்படுத்தாமல் அவை பயன்பாட்டிற்கு ஒவ்வாத நிலைக்குத் தள்ளப்பட்டால் என்ன செய்வது? மறுபடி மரத்தடியிலும், புதர்களின் மறைவிலும் போய் உட்காருவார்களா? தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைவதை எப்படித் தடுப்பது? நமது நகரங்கள் தினந்தோறும் வெளியே தள்ளும் கழிவுகளை கூட்டிப் பெருக்கி மறைக்க ஒரு மிகப்பெரிய தரைவிரிப்பு எங்கே கிடைக்கும்? சுத்தமான இந்தியா என்பது வெறும் கனவாகவே நின்றுவிடுமா? இந்த மிகப்பெரிய கனவு நனவுபட பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைக்குமா?

கேள்விகள், கேள்விகள், கேள்விகள்!

அரசு தரப்பில் இதுபோல முன்முயற்சி எடுப்பது இது முதல் தடவை அல்ல. ஊரக சுகாதார வசதி திட்டம் 80களில் ஆரம்பிக்கப்பட்டு 1999 இல் ஒட்டுமொத்த துப்புரவு இயக்கமாக புனரமைப்பு செய்யப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் மிகத் துப்புரவுடன் இருக்கும், பஞ்சாயத்துகள், தொகுதிகள், மாநிலங்கள் ஆகியவற்றிற்கு ‘நிர்மல் கிராம் புரஸ்கார்’ என்ற விருதும் வழங்கப்பட்டது. இந்த அமைப்பு 2012 இல் நிர்மல் பாரத் அபிக்யான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்போது ‘சுத்தமான இந்தியா’ என்ற இயக்கமாக மாறியிருக்கிறது. இந்தமுறை நிறைய நிதி ஒதுக்கப்பட்டு அதிக அளவில் விளம்பரங்களும் செய்யப்படுகின்றன.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இயக்கத்தை வெற்றி பெறச் செய்வதில் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள். புதுமாதிரியான வழிமுறைகளை கண்டுபிடித்து செயல்முறைப்படுத்த உள்ளனர். சமூக வலைத்தளங்களும் தூய்மை இந்தியா இயக்கத்தின் செய்தியைப் பரப்புவதில் ஈடுபட்டிருக்கின்றன. நமது திருவிழாக்கள் மூலம் தூய்மை இந்தியாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்கள். குடிநீர், சுகாதார அமைச்சரகம் ஒரு புதிய பிரச்சாரத்தை ‘சுத்தமான இந்தியாவும், பாதுகாப்பான குடிநீரும்’ என்ற பெயரில் திருவிழாக்களில் நடத்த இருக்கிறார்கள். இந்தியாவின் முக்கியத் திருவிழாக்கள் -  மீனாக்ஷி கல்யாணம் நடக்கும் மதுரை, அமர்நாத் யாத்திரை, பூரி ஜகன்னாத் தேர்த்திருவிழா, மகாராஷ்டிரா பந்தர்பூர் பால்கி யாத்திரை, பீகாரின் சோனேபூர் மாட்டுச்சந்தை – போன்றவிடங்களில் இந்தப் பிரச்சாரம் நடைபெற உள்ளது.


2019 ஆம் ஆண்டிற்குள் இந்த இயக்கம் சாதிக்க விரும்பும் சில விஷயங்கள்:

  •   சுகாதாரக் கழிவறைகள் எல்லா வீடுகளிலும் அரசு மான்யத்துடன் அமைப்பது.
  • ஏற்கனவே இருக்கும் உலர் கழிப்பறைகளை சுகாதாரக் கழிப்பறைகளாக மாற்றுவது.
  • கிராம சுகாதார மையங்கள் – கைப்பம்புகள், குளிக்கவும், துணி துவைக்கவும் வசதியுடன். 
  • தனியார் வீடுகளில் கழிப்பறை கட்ட வசதி இல்லாத இடங்களில் கிராமப் பஞ்சாயத்துகளின் (இவற்றைப் பராமரிக்க) ஒத்துழைப்புடன் இவை அமைக்கப்படும்.
  •  சாக்கடைகள் கட்டுதல்,  திட மற்றும் நீர்மக் கழிவுகளை அகற்ற உதவி செய்தல்.



இந்தமுறை நமக்கு நம்பிக்கை கொடுக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அரசின் நடவடிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவருவதாகவும், முன்னேற்றங்கள் நீண்ட நாட்களுக்கு நிலைப்பதாகவும் இருப்பதுதான்.  இன்னும் சில வளர்ந்துவரும் நாடுகளிலும் மனிதர்கள் திறந்தவெளிகளை கழிவறையாகப் பயன்படுத்தினாலும், நம் நாட்டில் தான் மிகப்பெரிய அளவில் இது நடைபெற்று வருகிறது. இதனால் இந்தத் தூய்மை இயக்கம் மிக மிக முக்கியத்துவம் பெறுகிறது. அடுத்த ஐந்து வருடங்களுக்குள் சுமார் 600 மில்லியன் இந்தியர்களுக்கு  – வேறு வழியில்லாமல் இதுவரை திறந்தவெளிகளை கழிப்பறையாக பயன்படுத்தி வந்தவர்களுக்கு – ஃப்ளஷ் கழிவறைகள் கட்டித் தரப்படும்.


ஆனால் இப்படிக் கட்டித்தரப்படும் கழிவறைகளை அவர்கள் சரிவர பயன்படுத்தவிடில் என்ன ஆகும்? இதைப்பற்றி இந்தத் திட்டத்தில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால் தூய்மை இந்தியா இயக்கம் வெற்றிபெற நாம் ஒவ்வொருவரும் இதில் பங்கு பெற வேண்டும். நாம் செலுத்தும் வரிப்பணம் தான் இத்தகைய திட்டங்களாக மாறுகிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். அரசாங்கம் என்பது நாம் தேர்ந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதிகளைக் கொண்டே இயங்குகிறது. பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புவதுடன் நம் கடமை முடிவதில்லை. அவர்களை தட்டிக் கேட்கும் பொறுப்பும் நமக்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


இந்தியக் குடிமக்களாகிய நாம் எந்தவகையில் இந்த தூய்மை திட்டத்திற்கு உதவலாம்?


  • சிலசமயம் நாம் நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது ஒருசில காட்சிகளைப் பார்ப்போம்: நமக்கு முன்னால் செல்லும் கார் சாலையோரமாக நிறுத்தப்படும். அதிலிருந்து மிகவும் நாகரீகமான பெண்மணி இறங்கி தன் குழந்தையை திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க வைப்பார். அல்லது தாங்கள் சாப்பிட்ட குப்பைகளை போகிற போக்கில் அப்படியே காரின் ஜன்னல் வழியே வீசிக் கடாசுவார்கள். இவர்களை எப்படித் திருத்துவது? தொலைக்காட்சிகளில் இப்போதெல்லாம் இதைப்போலச் செய்வோர்களை கைதட்டி அவமானப்படுத்துவது போலக் காட்டுகிறார்கள். நாமும் இதைச் செய்யலாம். நமது வீடுகள் மட்டுமன்றி நமது சுற்றுப்புறங்களும் தூய்மையாக இருந்தால் பல நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
  • நம்மைப் போன்றவர்கள் நமக்கென்ன என்று இருக்காமல், நம்மை முதலில் திருத்திக் கொள்ள வேண்டும். எல்லோரும் பொதுவிடத்தில் குப்பைகளைப் போடும்போது நான் ஒருத்தி மட்டும் போடாவிட்டால் இந்த நாடு திருந்திவிடுமா என்று கேள்விகள் கேட்கக்கூடாது.
  • நம் வீட்டினுள் இருக்கும் சுத்தம் நம் வீட்டைச் சுற்றியும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைக்கப்படும் குழுக்கள் அவர்கள் குடியிருப்புகளை மட்டுமின்றி அவர்களது தெருக்களையும் தூய்மையாக வைத்திருக்க முயற்சிகள் எடுக்கலாம்.
  • அரசு எடுக்கும் நடவடிக்கைகளை கேலி செய்வது நம்மில் பலருக்கும் கைவந்த கலை. ‘ஆமா, இந்த அரசு வந்து என்ன கிழிக்கப் போவுது?’ என்று கேட்பவர்கள் நம்மிடையே அதிகம். நம்முடைய இந்த அழுக்கான மனப்பான்மை மாறினால் இந்தியா தூய்மை ஆகும் என்பதில் சந்தேகமில்லை. எல்லோருமே ஒன்று கூடித் தேரிழுக்க வேண்டும்.



பலநாடுகளிலும் இந்த சுகாதாரப் பிரச்னை இருக்கின்றது. பசிபிக் கடலில் எறியப்படும் பிளாஸ்டிக்குகள் எல்லாம் சேர்ந்து பல மைல்கள் தூரத்திற்கு பிளாஸ்டிக் தீவுகளாக மாறியிருக்கின்றன. எவரெஸ்ட் சிகரமும் நம்மால் குப்பைத்தொட்டி ஆகிவிட்டது. இன்னும் சிலவருடங்களில் எவரெஸ்ட் சிகரத்தைவிட மலையேறுபவர்கள் விட்டுவிட்டு வரும் குப்பைகளின் சிகரம் உயர்ந்துவிடும் அபாயம் இருக்கிறது. இந்த வயிற்றெரிச்சலை எங்கு போய்ச் சொல்ல? சீன தேசத்தின் பெரும்சுவர் 30% காணாமல் போய்விட்டது. மனிதர்களின் பேராசையின் விளைவால் பெரும் சேதங்கள் ஏற்படுகின்றன. கேதார்நாத்தில் அரசின் எச்சரிக்கையையும் மீறி உணவகங்களும், தங்குமிடங்களும் கட்டப்பட்டதால் நிகழ்ந்த நிகழ்வுகள் நம்மால் மறக்க முடியாத ஒன்று. திடீர் வெள்ளமும், பாறைச்சரிவுகளும் இமாலயப் பகுதிகளில் பெருகிவிட்டன.


நதி நீரை வாகனங்களை கழுவுவதற்கும், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும், தீயணைப்பு வண்டிகளுக்கும் பயன்படுத்தக்கூடாது. சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைக் கழிவுகள் நதிகளில் கலப்பதை தடுக்க வேண்டும். இவற்றால் நம் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படுவதை எடுத்துக் கூற வேண்டும். பொதுமக்கள் சிறுசிறு குழுக்களாக அமைத்துக் கொண்டு தங்கள் பகுதிகளில் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி இதுபோன்று சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கலாம். சுற்றுப்புறம் மாசுபடுவதால் மனிதர்கள் மட்டுமல்ல; நம்மைச் சுற்றி உள்ள சிறுசிறு பறவையினங்கள், விலங்குகள் இவையும் பாதிக்கப்படுகின்றன.


இந்த உலகம் நாம் வாழ மட்டுமல்ல; நம்மைச் சுற்றியுள்ள கோடிக்கணக்கான உயிரினங்களும் வாழத்தான் படைக்கப்பட்டுள்ளது. நம் வீட்டையும், நாட்டையும் சுத்தமாக வைத்திருந்து அடுத்த தலைமுறையினருக்கு சுத்தமான இந்தியாவை விட்டுச் செல்ல வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.


வாழ்க இந்தியா! வாழ்க அதன் இயற்கைவளங்கள்! நாளைய இந்தியா தூய்மையான இந்தியாவாக மலரட்டும்!


 ---------------------*----------------------------------------*-------------------------------------*-------------------------------------*


“வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்ட என் சொந்தப் படைப்பே.  ஐந்து வகையான போட்டிகளில் வகை-(2) சுற்றுச்சூழல் கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. இதற்கு முன் இப்படைப்பு எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் போட்டியின் முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதியளிக்கிறேன்










செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

எமக்குத் தொழில் ‘அசைபோடுதல்!’





அதீதம் இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் தொடரின் முதல் பகுதி 

அந்தக் கால்டாக்சி ஓட்டுனர் ரொம்ப நல்ல  மாதிரி. வண்டியில் ஏறி உட்கார்ந்து மும்பை சிஎஸ்டி ரயில் நிலையம் என்றதும், ‘கித்னா நம்பர் பிளாட்பாரம் ஜி?’ என்று கேட்டார். சட்டென்று வாயில் வந்த ‘கொத்தில்லா’ வை பாதில முழுங்கிட்டு, ‘பதாநஹி, பெங்களூரு காடி’ என்றேன். அதற்கு மேல் நமக்கு அந்த மொழி வராது! பெங்களூரு செல்லும் உதயான் விரைவு வண்டி 17வது நடைமேடையில் வரும் என்று தெரிந்துகொண்டு எங்களை மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தின் பின்பக்கத்தில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டு கிளம்பிப் போனார். நாங்கள் இறங்கினது 18 வது நடைமேடை. எப்படி இங்கிருந்து 17 வது நடைமேடைக்கு போறது? ஒருபக்கத்தில் பிரம்மாண்டமான படிக்கட்டுகள் ‘ஹோ’ என்று விரிந்து ‘வா, வா’ என்று கூப்பிடுவது போலிருந்தது. அதில் பெட்டிகளையும் வைத்துக்கொண்டு ஏறுவது சிரமம்.  மாடிப்படிகளை அனாயாசமாக ஏறி இறங்கியது ஒரு காலம். ‘எப்டி இருந்தா நா இப்டி ஆயிட்டேன்!’  என்று யோசித்தபடியே நின்ற என்னைத் தாண்டி ஒரு தானியங்கி வண்டி சென்றது. ‘காடிவாலா!, காடிவாலா!’ என்று கூவினேன். அவர் வண்டியை நிறுத்தாமலேயே என்னைப் பார்த்து ஹிந்தியில் ஏதோ ‘போலி’விட்டு வேகமாகப் போய்விட்டார். பார்த்துக் கொண்டே இருக்கும்போது 17 வது நடைமேடையில் ஒரு ரயில் வந்து பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றது. ஆ! அதுதான் நாங்கள் செல்ல வேண்டிய உதயான் விரைவு வண்டி!

கைபேசியில் நேரம் பார்த்தேன். ரயில் புறப்பட இன்னும் நிறைய நேரம் இருந்தது. இந்தப் படிக்கட்டுகள் ஏறி இறங்காமல் அங்கு போக முடியுமா? என்று மெதுவாக பார்த்துக்கொண்டே நடந்தேன். ஆஹா! நான் காண்பதென்ன கனவா, இல்லை நனவா?  என் கண்ணெதிரே லிப்ட்! அருகே போய் பார்த்தபின் என் மகிழ்ச்சி இரட்டிப்பாயிற்று!  பின்னே? நம்ம தகுதிகளையெல்லாம் எழுதிப் போட்டிருக்கிறார்களே, அதன் தலைப்பக்கத்தில்! ‘Handicapped, senior citizen, ladies’ என்று!! சுறுசுறுவென கணவரையும் அழைத்துக்கொண்டு பெட்டிகளைத் தள்ளிக் கொண்டு லிப்ட் அருகே வந்தேன். லிப்ட், நடைமேடையிலிருந்து சற்று பள்ளத்தில் இருந்தது. மெதுவாக அங்கே இங்கே பிடித்துக் கொண்டு முதலில் நான் இறங்கினேன். பிறகு பெட்டிகளை இறக்கினேன். கடைசியாக கணவரையும் இறக்கி, அவரிடம் ‘மேலே பாருங்கள்!’ என்றேன். அவரும் லிப்டின் தலைமாட்டில் எழுதியிருப்பதைப் படித்துவிட்டு ‘அட! அத்தனை தகுதியும் உனக்கு இருக்கிறதே!’ என்று உற்சாகத்துடன் சொல்லிக்கொண்டே லிப்டில் ஏறினார். அவரது பாராட்டை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டு, முதல் மாடி பொத்தானை அழுத்தினேன். முதல்மாடிக்கு சென்று வெளியே வந்து அடுத்த லிப்டில் இறங்கி 18வது நடைமேடையை அடைந்தோம். அப்பாடி! என்ன ஒரு இமாலய சாதனை!

இதை எதற்கு இங்கு சொல்லுகிறேன் என்றால், மேலே சொன்ன தகுதிகளைத் தவிர வயதான எங்களுக்கு இன்னொரு தகுதியும் தன்னடையே வந்து சேரும். அதுதான் பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல பழைய சம்பவங்களை அசைபோடுதல். ஆடுமாடுகள் மட்டும் தான் அசைபோடுமா? வயதான மனிதர்களும் அசை போடுகிறார்கள்; ‘எப்பப் பாத்தாலும் பழசையே பேசிண்டு......வேற வேல இல்லையா?’ அப்படின்னு இன்னிக்கு வயசாளிகளை திட்டற இளசுகள் நாளைக்கு நிச்சயம் தங்களது பழசுகளை அசை போடுவார்கள். இப்படி அசை போடறதுதானே அந்த வயதின் சுவாரஸ்யம்? அதுதானே எங்களது நாளைய சரித்திரம்?

இந்தக் காலம் போல இல்லை அந்தக்காலம். தொலைக்காட்சி, தொலைபேசி, என்று எங்களைத் தொலைக்கக்கூடிய சமாச்சாரங்கள் எதுவுமே கிடையாது. அதனால் தானோ என்னவோ நாங்களும் எதிலும் தொலைந்து போகாமல் இருந்தோம். எங்கள் வீட்டில் சின்னதாக ஒரு ரேடியோ கூடக் கிடையாது. எங்களுக்கு ‘போர்’ என்பதே தெரியாது. கூடப் பிறந்தவர்களுடன் ஒட்டி உறவாடி வளர்ந்து வந்தோம். ஒரே ரூமில் எல்லோரும் (நாங்கள் நால்வர்)  படித்து, தூங்கி, சண்டைபோட்டு விளையாடினோம். பொழுதுபோக்கு என்றால் புத்தகங்கள் படித்தல்; பதைபதைக்கிற வெய்யிலில் தம்பியின் நண்பர்களோடு கில்லி, கோலி, பம்பரம் விளையாடுதல்; அப்போல்லாம் பாய் பிரெண்ட், கர்ல் பிரெண்ட் கிடையாது. எல்லோரும் பிரெண்ட்ஸ் தான்.

போன் செய்யாமலேயே உறவினர் வீட்டிற்குப் போவோம். ஒரு டாக்டர் தான் எல்லா வியாதிகளுக்கும். டாக்டரிடமும் அப்பாயிண்ட்மெண்ட் கிடையாது. தமிழ் மீடியத்தில் அரசுப் பள்ளியில் தான் படித்தோம். எங்கு போகவேண்டுமானாலும் நடை தான். பேருந்து என்பதே ஆடம்பரம்! சினிமா, உணவகங்கள் எல்லாமே எப்போதோ ஒருமுறை தான். கையேந்தி பவன்கள் வராத காலமது. பள்ளியில் பாட்டு வகுப்புகள் நடக்கும், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் – திருவல்லிக்கேணியில் படித்ததால் ஆழ்வார் பாசுரங்களும் கற்றோம். எளிமையான மனஅழுத்தம் குறைவான வாழ்க்கை.

சம்மர் கேம்ப் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் பாட்டி அகத்தில் தான். காலையில் கொள்ளிடக் குளியல்  மாலையில் கோவிலுக்குள் இருக்கும் மணல்வெளியில் விளையாட்டு; மதிய வேளைகளில் பாட்டி வீட்டுப் பிரம்மாண்டத்  திண்ணையில் புளியங்கொட்டைகளைப் பரப்பிப் போட்டு மணிக்கணக்கில் ஆடுவோம். ஐந்து கல், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், பரமபதம், தாயம் இவைகள் இண்டோர் கேம்ஸ்.  கில்லி, கோலி, பாண்டி, பம்பரம் இவை அவுட்டோர் கேம்ஸ். இன்னும் இன்னும் நிறைய இருக்கிறது அசை போட.......


எல்லாவற்றையும் அசைபோட ஆசை! 

வியாழன், 6 ஆகஸ்ட், 2015

வக்கீலிடமும், வைத்தியரிடமும் உண்மையைச் சொல்ல வேண்டும்!




உறவினர் ஒருவர் குளியலறையிலிருந்து வெளியே வரும்போது வழுக்கி விழுந்துவிட்டார். இரண்டு நாட்கள் எங்கேயும் அடிபடவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான்காம் நாள் இடது கை மணிக்கட்டில் வீக்கம் கண்டது. அவரை அழைத்துக் கொண்டு எலும்பு முறிவு மருத்துவரிடம் சென்றிருந்தோம். மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு எக்ஸ்-ரே எடுத்து வரச்சொன்னார்.

எக்ஸ்ரேயில் எலும்பு முறிவு உறுதி ஆயிற்று. மருத்துவர்  எங்கள் உறவினரிடம் சில கேள்விகள் கேட்டார். இந்தப் பதிவிற்கு இந்தக் கேள்வி பதில்தான் மிகவும் முக்கியம்.

மருத்துவர் : உங்களுக்கு சர்க்கரை இருக்கிறதா? மருந்து எடுத்துக் கொள்ளுகிறீர்களா?
உறவினர் : ம்....ம்....கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.....!
மருத்துவர் : உயர் இரத்த அழுத்தம் இருக்கிறதா? மருந்து எடுத்துக் கொள்ளுகிறீர்களா?
உறவினர் : ம்.....ம்.....கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.....!

இந்தப் பதில்களைக் கேட்டு மருத்துவருக்கு வந்ததே கோவம்! '

'உங்களை நான் சுகர் இருக்கிறதா என்று தான் கேட்டேன். கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா  என்று கேட்கவில்லை. இருக்கிறதா, இல்லையா? அதற்கு மருந்து எடுத்துக் கொள்ளுகிறீர்களா, இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள். கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா இல்லையா என்பதை நாங்கள் மருத்துவர்கள் சொல்ல வேண்டும். அதேபோலத்தான் உயர் இரத்த அழுத்தமும். இருக்கிறது, அதற்கு இந்த இந்த மருந்துகள் சாப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள். ஒரு விஷயம் புரிந்துகொள்ளுங்கள், இத்தனை மருந்துகள் சாப்பிடுவதால் உங்கள் சர்க்கரையும், இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மருத்துவரிடம் சாமர்த்தியமாக பதிலளிக்க வேண்டாம். இப்போது உங்கள் சர்க்கரையையும், இரத்த அழுத்தத்தையும் பரிசோதித்தால் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா என்று எங்களுக்குத் தெரிந்து விடும்.

மருத்துவரிடம் எதையும் மறைக்கக்கூடாது. உங்கள் உடல் இருக்கும் நிலையைப் பார்த்து நாங்கள் மருந்துகள் கொடுப்போம். அதற்குத்தான் ஒவ்வொன்றையும் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறோம், புரிகிறதா?' என்றார்.

'நோயாளிகளின் பூரண ஒத்துழைப்பு எங்களுக்கு வேண்டும். இப்போது எல்லோருக்கும் சுகர், பிபி இருக்கிறது. இதைச் சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம்?'

உறவினர் பேசவேயில்லை. சற்று நேரம் கழித்து மருத்துவரிடம் மன்னிப்புக் கேட்டார்.

வக்கீலிடமும், வைத்தியரிடமும் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பது இதுதான் போலும்.

படம்: கூகிள் நன்றி

வியாழன், 16 ஏப்ரல், 2015

நெட் நியூட்ராலிட்டி என்றால் என்ன?

என்னுடைய வேர்ட்ப்ரெஸ் தளத்தில் பகிர்ந்த கட்டுரையை இங்கும் பகிர்ந்து கொள்ளுகிறேன், இன்னும் நிறைய பேர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக.




இந்திய இணையப் பயனாளர்கள் தலையில் இடியை இறக்கப் போகும் செய்தி தான் தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டு இருக்கிறது. நடக்கப் போவதை நினைத்துப் பதட்டத்தில் பலரும், என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமலே குழப்பத்தில் பலரும் ஆழ்ந்துள்ளனர்

என்ன பிரச்சனை?

மொபைல் நிறுவனங்கள் WhatsApp, Skype, Viber போன்ற நிறுவனங்களின் வரவு காரணமாக வருமான இழப்பு ஏற்படுவதாகக் கூறி இவற்றுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிக்க அனுமதிக்க TRAI அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளன.

இதை TRAI அமைப்பு பொதுமக்களின் பார்வைக்குக் கொடுத்து கருத்துகளை வரவேற்றுள்ளது. ஏப்ரல் 24 ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளைப் பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு மே மாதம் இறுதி முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளது.

இந்தப் பிரச்சனை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் தொடர்ந்து படிக்கவும். என்ன செய்யணும் என்று கூறினால் மட்டும் போதும் என்பவர்கள் நேராக இறுதிக்குச் சென்று விடலாம்.

TRAI (Telecom Regulatory Authority of India – தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்) என்றால் என்ன?

தொலைத்தொடர்பு சேவைகளின் செயல் பாட்டினை வழிப்படுத்தி நெறிப்படுத்தும் அமைப்பு இது.

கோரிக்கைகள் ஏற்கப்பட்டால் என்ன நடக்கும்?

நீங்கள் WhatsApp, Skype, Viber போன்றவற்றைப் பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

உங்கள் இணைய இணைப்பு நிறுவனம் (Internet Service Provider)  அனுமதிக்கும் தளங்களை / செயலியை (App) மட்டுமே பார்க்க முடியும். அனுமதிக்காத தளத்தைப் பார்க்க, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

புரியலையே..!

புரியும்படி சொல்லுகிறேன்: நீங்கள் உணவு விடுதிக்குச் செல்கிறீர்கள். சாப்பாட்டிற்கான டோக்கனை வாங்கிச் சென்று சாப்பிட அமர்ந்ததும் உங்களுக்குச் சாப்பாடு மட்டும் வைக்கப்படுகிறது. சாம்பார், ரசம், மோர், பொரியல், கூட்டு, அப்பளம், ஊறுகாய் எங்கே? என்று கேட்கிறீர்கள்.
அதற்குச் சர்வர்..
இவை வேண்டும் என்றால் நீங்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். சாம்பார் ரசம் மோர்  40 ருபாய், பொரியலுக்கு 20 ருபாய், கூட்டு 20ருபாய்  அப்பளம் 10 ருபாய்., ஊறுகாய் 5 ருபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
அப்புறம் எதுக்கு 80ருபாய்  வாங்குனீங்க?
அது சாப்பாட்டுக்கு மட்டும்
சாப்பாட்டை மட்டும் எப்படிச் சாப்பிடுறது?

அது அப்படித் தாங்க.. வேண்டும் என்றால் எங்க முதலாளி TRAI கிட்ட பேசிக்குங்க. இவ்வளோ தான் இந்த விசயம்.

Net Neutrality என்ற வார்த்தையைத் தற்போது இணையத்தில் அதிகம் காண முடிகிறது. இது என்ன? Net Neutrality என்பதற்கு எந்த இணையக் கட்டுப்பாடும் இல்லாமல் அனைவருக்கும் சமமாகக் கொடுக்கப்படும் இணையச் சேவை என்பது அர்த்தம். அதாவது எந்த தளத்திற்கும் / செயலிக்கும் (App)  கூடுதல் கட்டணம் இல்லாமல் அனைத்தும் ஒரே கட்டணமாகத் தற்போது நீங்கள் கொடுத்துக்கொண்டு இருப்பது போல. உதாரணத்திற்கு 1 GB டேட்டா 200 ருபாய்க்கு வாங்கினால் அதை நீங்கள் உங்கள் விருப்பம் போல எதற்கு வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம்.

இணையத்தைப் பார்வையிட, ஒரு தளத்தை செயலியில் படிக்க, இணையக் குறுந்தகவல் அனுப்ப, Viber மூலமாக மற்றவருடன் பேச, கூகுளில் தேட, இணையத்தில் பொருட்களை வாங்க, செய்திகளைப் படிக்க, YouTube காணொளிகளைப் பார்க்க என்று அனைத்துமே நம் விருப்பம். இது தான் Net Neutrality .

ஏன் மொபைல் நிறுவனங்கள் இது போலச் செய்ய முயற்சிக்கின்றன? இணையம் என்பது கட்டற்ற இடம். எனவே புதியதாகப் பல தொழில் நுட்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அதில் இரண்டு சேவை உலகளவில் மொபைல் நிறுவனங்களின் அடிப்படை வருமானத்தை ஆட்டம் காண வைத்து இருக்கின்றன.

எந்தச் சேவைகள்?
இணையக் குறுந்தகவல் (WhatsApp Line Telegram) மற்றும் இணைய அழைப்பு  (Viber, Skype , WhatsApp).

குறுந்தகவல் கொள்ளை

மூன்று வருடங்களுக்குப் முன்பு மொபைல் சேவையில் இணையம் என்பது மிகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது. இந்தக் காலங்களில் மொபைல் நிறுவனங்கள் குறுந்தகவல் (SMS) கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தன. ஒரு அழைப்பிற்கு நிகரான கட்டணத்தைக் குறுந்தகவலுக்கு வசூலித்து வந்தன. அதோடு விழாக்காலங்களில் இரட்டிப்புக் கட்டணம் வசூலித்தார்கள். இதனால் மக்கள் முந்தைய நாள் வாழ்த்து அனுப்பினார்கள். நிறுவனங்களும் முந்தைய நாட்களுக்கும் இரட்டிப்புக் கட்டணம் வசூலித்தார்கள். தினமும் வசூலிக்கும் கட்டணமாக இல்லாமல் பண்டிகைக் காலங்களில் வேண்டும் என்றே அதிகக் கட்டணம் என்பது பகல் கொள்ளை என்பதை மனசாட்சி உள்ளவர் எவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதிகரித்த இணையப் பயன்பாடு

இதன் பிறகு இணையம் என்பது தவிர்க்க முடியாததாக ஆனதால், அதைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது.

இணையக் குறுந்தகவல் சேவையின் அறிமுகத்திற்குப் பிறகு என்ன நடந்தது?

பல இணையக் குறுந்தகவல் சேவை பயன்பாட்டில் இருந்தாலும், இந்தியாவில் தாமதமாகவே தெரிந்து கொண்டார்கள். WhatsApp வந்த பிறகு மக்களிடையே எளிமை காரணமாகப் பிரபலமாகியது. ஃபேஸ்புக் நிறுவனம் WhatsApp நிறுவனத்தை வாங்கிய பிறகு இந்தியாவில் WhatsApp மேலும் பிரபலமாகத் துவங்கியது. இதில் எத்தனை குறுந்தகவல் வேண்டும் என்றாலும் உலகம் முழுவதும் இலவசமாக அனுப்பலாம். அதோடு குழு முறையில் இணைந்து குறுந்தகவல் அனுப்புவது, படங்கள் அனுப்புவது  உட்பட பல்வேறு வசதிகளை இந்தச் செயலிகள் கொண்டு இருக்கின்றன.

இதனால் தற்போது பொதுமக்கள் அதிகக் கட்டணமான மொபைல் நிறுவனங்களின் குறுந்தகவல் சேவையின் பயன்பாட்டை கிட்டத்தட்ட நிறுத்தி விட்டார்கள். இதனால் வேறு வழியில்லாமல் மொபைல் நிறுவனங்களும் விழாக்காலங்களில் இரட்டிப்புக் கட்டணம் வசூலித்ததை நிறுத்த வேண்டியதானது. மக்களின் இந்த மாற்றம் குறுந்தகவல் மூலம் லாபம் பெற்றுக் கொண்டு இருந்த மொபைல் நிறுவனங்களுக்கு பெரிய அடியானது.

இணைய அழைப்பு

Viber,  Skype போன்ற செயலிகள் வந்த பிறகு வெளி நாடு, மாநிலங்களில் உள்ள நண்பர்கள் குடும்பத்தினருடன் இணையம் மூலம் இலவசமாகப் பேசத் துவங்கினார்கள். தற்போது இந்தச் சேவையை அதிகப் பயனாளர்களை வைத்துள்ள WhatsApp கொண்டு வந்த பிறகு மொபைல் நிறுவனங்கள் பயந்துள்ளன. விரைவில் உள்ளூர் அழைப்புகளுக்கும் மக்கள் இணையத்திலேயே அழைக்கத் துவங்கி விடுவார்கள்.

நிறுவனங்களுக்குத் தலைவலியாகும் Whatsapp & Viber

மொபைல் நிறுவனங்கள் ஏன் கூடுதல் கட்டணம் விதிக்க TRAI யை நெருக்குகின்றன?

மொபைல் நிறுவனங்கள் இந்தக் கட்டமைப்பை உருவாக்கப் பல பில்லியன் முதலீடு செய்து இருக்கின்றன .ஆனால், இதைப் பயன்படுத்தி மற்ற WhatsApp Viber Line போன்ற  நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன. மொபைல் நிறுவனங்கள் குறுந்தகவல் மூலம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்ததால் இணையக் குறுந்தகவலான WhatsApp Line போன்ற சேவைகளை உருவாக்கத் தவறி விட்டன. இதனால் மற்ற நிறுவனங்கள் முந்திக் கொண்டன.

இணையக் குறுந்தகவலோடு தற்போது அழைப்பும் இணையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வாய்ப்பு அதிகரித்து விட்டதால் நெருக்கடியான நிலையில் உள்ளன. இதனால் வருமான இழப்பை எதிர்கொள்ள நேரும் என்று பயப்படுகின்றன.

மொபைல் நிறுவனங்களுக்கு உண்மையிலே பாதிப்பு உள்ளதா?
ஆம். வருமானமே இல்லையா..!?
நிறுவனங்களுக்கு இது போல வருமான இழப்பு இருந்தாலும், இணையம் & மொபைல் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கிறது. முன்பு குறுந்தகவலுக்குச் செய்த செலவை விட மக்கள் இணையத்திற்கு அதிகச் செலவு செய்து வருகிறார்கள். தொழில்நுட்பம் வளரும் போது மாற்றங்களும் தவிர்க்க முடியாதது. அது மொபைல் நிறுவனங்களுக்கும் பொருந்தும். ஒரு வகையில் நட்டம் என்றால் இன்னொரு வகையில் லாபம் இருக்கும்.

இருப்பினும் வருங்காலம் அனைத்துமே இணையம் என்று ஆகும் போது தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். முன்னரே கூறியபடி அழைப்புகளுக்கும் அனைவரும் இணையத்தையே பயன்படுத்துவார்கள். எனவே, எதிர்காலத்தில் Data Pack மட்டுமே மக்கள் வாங்குவார்கள்.

தொலைதொடர்பு நிறுவனங்கள் முதலீடு செய்த செல் டவர்கள் Wifi Router போல செயல்பட்டுக்கொண்டு இருக்கும். இது நியாயமான ஒன்றல்ல. எனவே, இணையக் கட்டணத்தை உயர்த்துவது மட்டுமே ஒரே நியாயமான வழியாகும் ஆனால், தற்போது விடுத்துள்ள கோரிக்கை நிறைவேறினால் அதிகக் கட்டணத்தை செலுத்தியும்  பல இணையத் தளங்களைப் பார்க்க முடியாத நிலை நமக்கு ஏற்படும். அதாவது லாபம் மட்டுமே இந்த நிறுவனங்களுக்கு, பாதிப்பு முழுக்க நமக்கு என்றாகி விடும்.

Airtel Zero

ஏர்டெல் நிறுவனம் தற்போது ஏர்டெல் ஜீரோ என்ற ஒரு வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது என்னவென்றால் இந்த வசதியில் இணையும் தளங்களை இலவசமாகப் பார்க்கலாம் என்பது. உதாரணமாக நான் என்னுடைய தளத்திற்கு ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அவர்களுக்குக் கட்டணத்தைச் செலுத்தி விட்டால், என்னுடைய தளத்தை ஏர்டெல் பயன்படுத்தும் அனைவரும் இலவசமாகப் பார்க்க முடியும். அதாவது நீங்கள் டேட்டா கட்டணம் செலுத்தாமலே!

டேட்டா கட்டணம் செலுத்தி இருந்தால், இந்தத் தளங்களைப் பயன்படுத்தும் போது இதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. நீங்கள் இதில் உலவும் நேரம் இலவசம். தற்போது Flipkart நிறுவனம் இதில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் கூறுகின்றன. இந்த நிறுவனத்தைப் புறக்கணிக்கப் போவதாகவும் பலர் இணையத்தில் கூறி வருகிறார்கள். ஏர்டெல்லுடன் பல இணைய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருவதாகக்  கூறப்படுகிறது.

Update :

Flipkart நிறுவனம் மக்களின் எதிர்ப்புக் காரணமாக இதில் இருந்து தற்போது விலகி விட்டது.

இலவசமாகக் கிடைத்தால் நல்லது தானே..!
அதை ஏன் எதிர்க்க வேண்டும்?
இந்த முறை இணையக் கட்டமைப்பையே மாற்றி அமைக்கும் செயல். இதன் மூலம் பணம் படைத்தவர் மட்டுமே லாபம் பெற முடியும் என்பது போல நிலை வரும்.

உதாரணத்திற்கு
இது போலப் பணக்காரத் தளங்கள் இணைந்தால், இவை மட்டுமே இணையம் என்பது போல நிலையாகி, கட்டணம் கொடுத்து இணைய முடியாத பல தகுதியான நிறுவனங்கள் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்படும். சக்தி வாய்ந்த ஒருதலைப் பட்சமான செய்தி நிறுவனம் இது போலச் சேவையைக் கொடுத்தால், இதை மட்டும் படிப்பவர்கள் இந்த நிறுவனம் கூறும் செய்தியை மட்டும் தான் நம்பி இருப்பார்கள். இவர்கள் கூறுவதே செய்தி என்ற நிலையாகலாம். இது இணையம் என்ற அடிப்படை கட்டமைப்பையே குலைக்கும் செயல். இணையம் என்பது விருப்பம் சார்ந்ததாக இருக்க வேண்டுமே தவிரத் திணிப்பாக இருக்கக் கூடாது.

இதை மேலோட்டமாகப் பார்த்தால் இலவசமாகத் தருகிறார்கள், அதை ஏன் எதிர்க்க வேண்டும்? என்பது போலத் தான் தோன்றும் .ஆனால், இது பரவலானால் பணம் படைத்தவன் வகுத்ததே சட்டம் என்பது போல நிலையாகி விடும். மக்களும் இலவசமாகக் கிடைக்கும் தளங்கள் மட்டுமே போதும் என்ற மனநிலைக்கு வந்து அவர்களின் வசதி வாய்ப்புகள் மறைமுகமாக முடக்கப்படும். இது போல ஒரு சேவையைத் தான் ஃபேஸ்புக் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம் மூலம் இந்தியாவில் Internet.org என்ற தளத்தில் செய்து வருகிறது. இந்த இலவச இணைய வசதி, ஏழைகளுக்கு, வசதி குறைந்தவர்களுக்கு என்ற பெயரில் மக்களை மறைமுகமாக ஏமாற்றும் முயற்சியே!

பெரிய நிறுவனங்களின் விருப்பமே மக்களின் விருப்பமாக மாற்றும் முயற்சி. இலவசம் என்ற பெயரில் மறைமுகத் திணிப்பு. உலகத்தில் இலவசம் என்று எதுவுமே இல்லை. இலவசம் என்று தரும் ஓர் நிறுவனத்தின் எந்த ஒரு செயலுக்குப் பின்னாலும் பில்லியன் கணக்கில் மறைமுக லாபம் இருக்கிறது. எனவே தான் Net Neutrality என்பதை அனைவரும் வலியுறுத்துகிறார்கள்.



TRAI தற்போது என்ன செய்கிறது?
TRAI மொபைல் நிறுவனங்களின் வேண்டுகோளை பரிசீலித்து இதற்குக் கட்டணம் விதிப்பது குறித்து மக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மக்களைக் குழப்பும் விதத்திலும் மொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும் உள்ளது. மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க ஏப்ரல் 24 ம் தேதி வரை கெடு விதித்துள்ளது. இதன் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பது தான் அனைவரும் பரபரப்பாக எதிர்பார்க்கும் விசயமாக உள்ளது. தற்போது இணையத்தில் பலரும் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்கிறார்கள்.

அதில் ஒன்று தான் நீங்கள் தற்போது படித்துக்கொண்டு இருக்கும் இந்தக் கட்டுரையும்.

இதன் ஆபத்து இன்னும் பலருக்கு தெரியவில்லையே..! உண்மை தான்.

நாளையே WhatsApp க்குத் தனிக்கட்டணம் என்றால், பலர் அலறி அடித்துக்கொண்டு என்ன விசயம்? ஏன் தடை? என்று கேட்பார்கள். வட மாநில இணையப் பயனாளர்கள் இதன் ஆபத்து குறித்து அறிந்து இந்தியப் இணையப் பயனாளர்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழில் இது குறித்த பரவலான செய்திகளைக் காண முடியவில்லை.

வட மாநிலத்தவர் இந்தப் பிரச்சனைக்காக எடுக்கும் முயற்சிகளுடன் ஒப்பிடும் போது நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். அமெரிக்காவில் இது போல கொண்டு வரத் திட்டமிட்டார்கள் .ஆனால், மக்களின் கடும் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டது. பிரேசில், சிலி மற்றும் நெதர்லாந்து நாடுகளிலும் இதே நடந்து இருக்கிறது. நமக்கு என்ன ஆகும் என்பது நம் அனைவர் முயற்சிகளில் தான் உள்ளது.

நான் என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் செய்ய வேண்டியது இரண்டு விசயம். இதை எதிர்த்துப்  பெட்டிசன் மற்றும் TRAI க்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். இதை எப்படிச் செய்வது?

இது குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை. நம்மைப் போல இணையம் பயன்படுத்தும் பலர் இவற்றை நாம் எளிமையாகச் செய்ய நமக்கு வசதி ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதைச் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள். நீங்கள் பின்வரும் இணையத்தளங்கள் சென்று இரண்டு நிமிடங்களைச் செலவழிக்க வேண்டியது மட்டுமே. மிக மிக எளிமையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

1. பெட்டிசன் கொடுக்க

https://www.change.org/p/rsprasad-trai-don-t-allow-differential-pricing-of-services-let-consumers-choose-how-they-want-to-use-internet-netneutrality
உங்கள் பெயர் மின்னஞ்சல் முகவரி கொடுக்கவும்.

2. TRAI க்கு மின்னஞ்சல் அனுப்ப –

http://www.savetheinternet.in/
Respond to TRAI now க்ளிக் செய்து அனுப்பவும்.

இதை நீங்கள் மொபைலில் படித்துக் கொண்டு இருந்தாலும் வெகு எளிதாகச் செய்ய முடியும். இது போல எதிர்ப்பு தெரிவித்தால் பிரச்சனை சரியாகி விடுமா? இணையம் பழைய முறையிலேயே தொடருமா? உறுதியில்லை. இது நம் எதிர்ப்பை பதிவு செய்யும் ஒரு வாய்ப்பு அவ்வளவு தான். TRAI எடுக்கும் முடிவே இறுதியானது. மக்கள் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படலாம் அல்லது மொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்கப்படலாம்.

உங்களால் முடிந்தது தற்போது மேற்கூறிய இரண்டு வேலையைச் செய்வதும் மற்றவர்களுக்கு இது குறித்த செய்தியைக் கொண்டு செல்வதும் மட்டுமே! எனவே, இதை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து, அவர்களையும் மேற்கூறிய இரண்டு விசயங்களையும் செய்ய வலியுறுத்துங்கள். இணையம் காக்க நீங்களும் இணையலாம்! இணைய சுதந்திரத்துக்கு ஆதரவாக இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேலான மெயில்கள்! நீங்கள் தினமும் 100 இ-மெயில்களை அனுப்பலாம். அல்லது எப்போதாவது முக்கியப் பணிகளுக்கு மட்டுமே இ-மெயிலை பயன்படுத்துபவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இப்போது நீங்கள் அனுப்பும் இ-மெயில் இணைய சுதந்திரம் காக்க குரல் கொடுக்கும் வகையில் அமையலாம். இந்த நம்பிக்கையில்தான் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு மேல் இதுவரை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்-க்கு இ-மெயில் அனுப்பியுள்ளனர்.

வருங்காலத்தில் இணைய உரிமை பாதிக்கப்படக்கூடாது என கருதினால், நீங்களும் டிராய்க்கு இமெயில் அனுப்பி கருத்து தெரிவிக்கலாம். அதற்கு முன்னர் நெட் நியூட்ராலிட்டி (இணையதள சமநிலை) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நெட் நியூட்ராட்லிட்டியை காக்கவேஇணையவாசிகள் இ-மெயில் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நெட் நியூட்ராலிட்டி எனும் பதம் சமீப காலமாக இந்தியா முழுவதும் பலமாக அடிபடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதிலும் சமீபத்தில் டிராய் அமைப்பு இது தொடர்பாக கருத்து திட்ட முன்வடிவை வெளியிட்டு பொதுமக்களிடம் இருந்து கருத்து கோரியதை அடுத்து, இது தொடர்பான விவாதம் தீவிரமாகி இருக்கிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் நெட் நியூட்ராலிட்டி தொடர்பான விவாதம் பல ஆண்டுகளாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பதுடன் அதை காக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இணையதள சமநிலை என புரிந்து கொள்ளக்கூடிய நெட் நியூட்ராலிட்டி என்றால் இணையத்தில் எல்லா வகையான இணையதளங்கள் மற்றும் சேவைகளை சமமாக கருதுவது என புரிந்துகொள்ளலாம்.

அதாவது, எல்லா இணையதளங்களையும் அணுகுவதற்கான சமமான வாய்ப்பு எப்போதும் இணையவாசிகள் கையில் இருக்க வேண்டும் என்று பொருள். எல்லா இணையதளங்களும் சமமான வேகத்தில் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும்.

இதன் உட்பொருள் எந்த ஓர் இணையதளத்தையும் பயன்படுத்த தனியே கட்டணம் கொடுக்கும் நிலை வரக்கூடாது என்பதும், இதற்கான உரிமை இணைய சேவை வழங்கும் நிறுவனம் அல்லது தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் வழங்கப்படக்கூடாது என்பதுதான்.

நெட் நியூட்ராலிட்டி பாதிப்பின் விபரீதம்

இணைய சேவைய வழங்குவது மட்டும்தான் நிறுவனங்களின் வேலையே தவிர, அதை எப்படி பயன்படுத்துவது என்பது இணையவாசிகளின் உரிமை என்பதுதான் இணைய சமநிலையின் அடிநாதம்.

ஆனால், இப்போதே இணையத்தை அப்படித்தானே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என நீங்கள் கேட்கலாம். உண்மை தான். ஆனால் இந்த நிலை தொடர்வதற்கு ஆபத்து வந்திருக்கிறது என்பதே விஷயம். எப்படி என்றால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட இணையதளங்கள் அல்லது செயலிகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கும் நிலை உருவாகலாம் என்பதுதான். இப்படி கட்டுப்பாடு விதிக்கப்படும் இணையதளங்களைப் பார்க்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரலாம். மற்ற இணையதளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என்று சொல்லப்படலாம்.

உதாரணத்துக்கு, வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் அல்லது இணைய தொலைபேசி சேவையான ஸ்கைப்பை பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரலாம்.  அதேபோல செல்பேசியில் வாட்ஸ்அப் போன்றவைக்கும் கட்டுப்பாடுகள் வரலாம்.

இத்தகைய உரிமை இணைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டால், இணைய பயன்பாட்டுக்கான கட்டணம் வசுலிக்கப்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட இணையதளங்களை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். அப்போது செலவை மிச்சமாக்க இணையவாசிகள் சில இணையதளங்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள நேரலாம்.

அல்லது சில இணையதளங்களை அதிகம் பயன்படுத்த அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். இதுதான் நெட் நியூட்ராலிட்டி பாதிக்கப்படும்போது ஏற்படும் விபரீதம்.

ஏனெனில், நிறுவனங்கள் இணைய சேவையை  சமமாக வழங்குவதை நிறுத்திக்கொண்டு தங்கள் இஷ்டம்போல வழங்கத் துவங்கும். இதனால் இணையத்தின் அடிப்படை சுந்ததிரம் பாதிக்கப்பட்டு, அதன் ஆதாரத் தன்மையான எவராலும் கட்டுப்படுத்தப்படாத குணமும் பாதிக்கப்படும் என்று வல்லுனர்களும் இணைய ஆர்வலர்களும் கவலைப்படுகின்றனர்.

பொதுவாக இந்த கட்டுப்பாட்டை இணைய நிறுவனங்கள் கொள்ளைப்புற வழியாக கொண்டு வர பார்க்கின்றன. உதாரணத்துக்கு, அவை அதிவேக இணைய சேவையை பெற அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுகளிடம் அனுமதி கோரி வருகின்றன. இவை இன்டெர்நெட் பாஸ்ட் லேன்  என குறிப்பிடப்படுகின்றன. இந்த விரைவு பாதையில் பயன்படுத்தக்கூடிய இணைய சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் இவை அனுமதி கோருகின்றன.

ஆனால், இப்படி அனுமதித்தால் அதிக பயன்பாடு உள்ள இணையதளங்களை எல்லாம் அதிவேக சேவைக்கு கொண்டு சென்று இணையத்தை கூறு போட்டு விடுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஓர் இணையம் இருப்பதற்கு பதில் துண்டு துண்டாக பல இணையங்கள் இருக்கும். அவற்றின் மீது இணைய நிறுவனங்களுக்கே கட்டுப்பாடு இருக்கும் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட இணையதளங்களை இலவசமாக வழங்க முயலும் இன்டெர்நெட். ஆர்க் அமைப்பும் சரி இந்தியாவில் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஜிரோ இன்டெர்நெட்டும் சரி... இத்தகைய நிலைக்கே வித்திடும் என்று இணைய ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இணைதளங்களை இலவசமாக பார்க்கலாம் என்பது கவர்ச்சியாக தோன்றினாலும் இதையே சாக்காக வைத்து மற்ற இணைய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முற்படும் நிலை வரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இணைய ஆர்வலர்கள் எல்லோருமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இணைய நிறுவனங்கள் மட்டும் இதை ஆதரிக்கின்றன. ஸ்கைப், வாட்ஸ் அப் போன்ற இணைய சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது அவற்றுக்கு எந்த லாபமும் வருவதில்லை. எனவே, இதுபோன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க உரிமை கேட்கின்றன.

அதேபோல தங்கள் சேவையை பயன்படுத்தி வருவாய் ஈட்டும் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்கின்றன. இது தொடர்பாகத்தான் டிராய் அமைப்பு இப்போது இணையவாசிகளின் கருத்தை கேட்டுள்ளது.

நெட் நியூட்ராலிட்டி காக்கப்பட வேண்டும் என்பதையும், அதற்கான காரணங்க்ளையும் விளக்கி மெயில் அனுப்பலாம்.

இணையவாசிகள் இப்படி டிராய் அமைப்புக்கு கருத்து தெரிவிக்க வசதியாக Save The Internet (http://www.savetheinternet.in/)  எனும் இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தளம் மூலம் மெயில் அனுப்பலாம். இதுவரை ஒரு லட்சம் மெயில்களுக்கு மேல் அனுப்பட்டுள்ளன.



இதே போல இந்த பிரச்சனையின் அடிப்படையை விளக்கி நெட்நியூடிராலிட்டி
 (http://www.netneutrality.in/ )  எனும் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

நெட்நியூட்ராலிட்டிக்கான பாதிப்பு இணையம் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் நிர்வகிக்கப்படும் விதத்தை பாதிக்கும் என்பதால் இது தொடர்பாக இமெயில் அனுப்பி கருத்து தெரிவிப்பது உங்களின் உரிமையை மட்டும் அல்ல இணையத்தையும் காக்கும்!

நன்றி  WhatsApp
தகவல், நன்றி: திரு அனந்தநாராயணன்