முதலில் என்னைத் தொடர் பதிவிற்குக் கூப்பிட்ட திரு தமிழ் இளங்கோ, மற்றும்
திருமதி கீதா சாம்பசிவம் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
நானும் எல்லோரையும் போல கணனி மொழிகள் கற்கத்தான் வகுப்பில் சேர்ந்தேன். முதலில்
பேசிக். அது கொஞ்சம் பரவாயில்லை போல மண்டையில் ஏறியது. அடுத்து கோபால். (cobal) யாருன்னு
கேட்காதீங்க. நீங்க எல்லாம் கேட்க மாட்டீங்க. ஆனால் எங்கள் ஆசிரியர் சொன்னபோது
நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். கோபாலா? யாரு? என்று! அப்படி கேட்டதுக்கு
கைமேல் பலன். ஒன்றும் புரியவில்லை. திக்கி திணறி அடுத்து லோட்டஸ். வீட்டில் கணனி
இல்லை. அதனால் எழுதிய ப்ரோக்ராம்கள் சரியா தவறா கண்டுபிடிக்க முடியவில்லை. கணனி
மையத்திற்கு போய் கணனியில் தட்டச்சு செய்தால் திரை முழுக்க error!
என் மாமா பிள்ளை இங்கு வேலை கிடைத்து வர, தினமும் அவனைப் போட்டு படுத்த (உண்மையில் ‘பிடுங்க’) ஆரம்பித்தேன். பாவம் ஒரே மாதத்தில், ‘அக்கா! ஆபீஸ் அருகில்
வீடு பார்த்திருக்கேன்’ என்று தலைமறைவாகி விட்டான்.
ஒரு நாள் என் பிள்ளையிடம் சொன்னேன். ‘ரொம்ப கஷ்டமா இருக்கே!’ அவன் என்னை
பரிதாபமாகப் பார்த்துவிட்டு, ‘இதுக்கெல்லாம் ‘logic’ புரியணும்-மா’ என்றான்.
அடுத்த நாள் ஆசிரியரிடம் ஏதோ விளக்கம் கேட்டேன். அவரும் ‘logic’ புரியணும் என்றார்.
வேறு யாரையும் கேட்க துணிவில்லை.
மூன்றாவது நபரும் logic பற்றி பேசினால் – எனக்கு logical thinking இல்லை என்பது
நிச்சயமாகிவிடுமே!
நன்றாகப் புரிந்தது MS Word மட்டுமே! இதுக்கு logic எல்லாம் வேண்டாம்
போலிருக்கு! இதன் நடுவில் பாண்டிச்சேரியில் இருந்த என் ஓர்ப்படி கீழே விழுந்து
தலையில் அடி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்தி வந்தது.
அவளது பிள்ளை அப்போது SSLC. அவனுக்கு பரீட்சை சமயம். உதவ ஓடினேன். இத்துடன் கணனி
மொழிக்கு ‘நீநாம ரூபமுலகு’ பாடியாயிற்று.
அடுத்து என் பெண் ஒரு யோசனை கூறினாள்: ‘உனக்கு நல்லா வரைய வருமே. நீ flash,
coraldraw கத்துக்கோ’ என்று. நமக்கு யாரு எப்போ எதிரியாவாங்கன்னு சொல்லவே
முடியாது!
அந்த மையம் இருந்தது மல்லேஸ்வரம். எங்க வீட்டுலேருந்து ஜெயநகர் 4வது
ப்ளாக்கிற்கு நடந்து சென்று அங்கிருந்து பஸ் பிடித்துப் போகணும். முதல்நாள்
வீட்டைவிட்டு கிளம்பினேன். எங்கள் தெரு முழுக்க தோண்டி வைத்திருந்தார்கள். ஒரு பள்ளத்தில்
கால் இடற, கீழே விழுந்தேன். முழங்காலில் அடி. மறுபடி வீட்டிற்கு வந்து
நியோஸ்பிரின் போட்டுக் கொண்டு போனேன். முதல் நாளே வகுப்பை மிஸ் பண்ணக் கூடாது,
இல்லையா?
விழுந்தால் நான் கலங்குவது இல்லை. ஒவ்வொருமுறை விழும்போதும் பிரமாதமாக
எழுவதற்கு வாய்ப்புக் கிடைக்கும். என் அனுபவம் இது. அதையெல்லாம் பிறகு பதிவு
எழுதுகிறேன். இப்படியாக திரும்பவும் கணனி! இந்தமுறை கொஞ்சம் சுவாரஸ்யமாக. இரண்டு
மாதத்தில் கோர்ஸ் முடிந்துவிட்டது. ஆனால் வீட்டில் கணனி இல்லை. சிறிது காலம்
கழித்து animation கற்றுக் கொள்ளலாம் என்று இன்னொரு மையத்தில் சேர்ந்தேன். இது வீட்டிற்குப்
பக்கத்தில் இருந்தது.
இப்போது வீட்டில் கணனி வாங்கலாம் என்று தீர்மானம் செய்தோம். பிள்ளையும்
பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருந்தான். கணனி வாங்கி அதில் நான் கற்றுக்கொண்ட
எல்லாவற்றுக்கும் தேவையான மென்பொருட்களை ஏற்றி.....
மையத்தில் முதல் முறை நான் வரைந்திருந்த படத்தை உயிரூட்டியதும் நான் அடைந்த
மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்ன படம் தெரியுமா? வேடனும் புறாவும், எறும்பும். முதலில்
வேடன் வருவான். அவன் கையிலிருந்த வில்லிலிருந்து அம்பு பறக்கும். ‘சர்..........!’
என்று. என் ஆசிரியை ரொம்பவும் சின்னப்பெண். சௌஜன்யா (இவளைப் பற்றி இங்கே படிக்கலாம்) அவளிடம் ரொம்பப் பெருமையாகக்
காண்பித்தேன். ‘பார் எப்படி அம்பு பறக்கிறது’ என்று. அவள் இன்னும் சில அம்புகளை வரைந்தாள்.
‘இப்போ பாருங்க!’ சர் சரென்று பல அம்புகள் பறந்தன. நான் ஒண்ணே ஒண்ணு தான்
போட்டிருந்தேன்!
அப்புறம் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இன்னொரு படம் வரைந்தேன். ஒரு குளம்
அதில் ஒரு மீன். நீந்திக் கொண்டே இருக்கும். அப்போது மேலிருந்து ஒரு தூண்டில்
வரும். அதில் ஒரு புழு. (புழு மாதிரி என்று சொல்வது பொருந்தும்!) மீன் போய் அதை சாப்பிடும்.
மறைந்து விடும்!
இதற்கு முன்னாலேயே மின்னஞ்சல் அனுப்பக் கற்றுக் கொண்டிருந்தேன். நான் வரைந்து
உயிரூட்டிய படத்தை எல்லோருக்கும் அனுப்பினேன். என் நாத்தனார் பெண்ணிற்கு மட்டும் தான்
படத்துடன் போய் சேர்ந்தது. மற்றவர்கள் படம் திறக்கவேயில்லை என்றார்கள். ‘உங்க கணனியை
upgrade பண்ணிக்குங்க’ என்றேன்!
அப்புறம் தமிழ் எழுத்துருக்களை தேடிக் கண்டுபிடித்து, தம்பி வீட்டில் இருந்த
என் அம்மாவிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதை ‘send’ பண்ணிவிட்டு அம்மாவிற்கு
தொலைபேசி ‘அம்மா என் கடிதம் வந்ததா?’ என்றால் அம்மா ‘இன்னிக்கு தான போட்ட? இன்னும்
இரண்டு நாட்கள் ஆகும்’ என்றாள். ‘ஐயோ! அம்மா! இது இமெயில் மா, அடுத்த நொடி
வந்துடும்’
‘இமெயில், எறும்பு மெயில் எல்லாம் அனுப்பாதே. ஒழுங்கா இன்லன்ட் லெட்டர்- ல
எழுதி போஸ்ட் பண்ணு. எனக்கு இந்த கம்ப்யூட்டர் தெரியாது. இனிமே கத்துக்கறாதாகவும்
இல்லை’ என்று என் ஆசையை அப்படியே வழித்து குப்பைத் தொட்டியில் போட்டாள்.
2011 ல பிள்ளைக்குக் கல்யாணம். மாட்டுப்பெண் வந்தவுடன் நானும் அவளும் எப்படி
ஒருவரையொருவர் சமாளிக்கிறோம் என்று ஒரு கட்டுரை எழுதினேன். எந்தப்
பத்திரிக்கையிலும் வரலை. அப்போதான் இந்த வேர்ட்ப்ரஸ் தளம் பார்த்தேன். அதிலேயே
இந்த முதல் பதிவைப் போட்டேன். இதற்கு மேல நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியும்.
எல்லாமே வரலாறு!
