ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

வியக்க வைக்கும் இந்திய தேர்தல்




4tamilmedia.com - தளத்தில் 11.4.2014 அன்று வெளியான கட்டுரை. 




இந்தியாவில் தேர்தல் என்பது இமாலய நிகழ்வு. இந்த வருடம் ஏப்ரல் 7 ஆம் தேதியிலிருந்து மே மாதம் 12 ஆம் தேதி வரை 7 தவணைகளாக நடக்கும் இந்தத் தேர்தலில் சுமார் 815 மில்லியன் மக்கள் வாக்களிக்கிறார்கள். இதுதான் உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நிகழ்ச்சி. 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு சுமார் 100 மில்லியன் மக்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். இத்தனை பெரிய தேர்தலுக்கு ஆகும் செலவும் இதை ஏற்பாடு செய்வதில் இருக்கும் சிக்கல்களையும் யோசிக்கும்போது, தேர்தல் அமைதியாகவே நடந்து முடிகிறது என்பது வியப்பான ஒன்று. அரசியல்கட்சிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட அளவுகோல்களை தாண்டி செலவழித்தாலும், இந்தியாவில் தேர்தல்கள் சுத்தமாகவே நடக்கின்றன -  அதாவது முடிவுகளில் மோசடி நடப்பதில்லை.

வாக்குப்பதிவுகள் மேற்கத்திய ஜனநாயக நாடுகளைப் போலவே இங்கும் இருக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு நடக்கும் இந்த 16வது தேர்தலில் சுமார் 60-70% வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மாவோயிஸ்டுகள், மற்ற பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் கூட மிதமிஞ்சிய கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாவதில்லை. இந்தியாவின் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, நேபால், ஏன் மாலத்தீவுகளில் கூட நடைபெறும் ரத்தக்களறியான தேர்தல்களை ஒப்பிடும்போது, இந்தியாவில் நடைபெறும் தேர்தல்கள் அமைதியானவையே.

இதையெல்லாம் பார்க்கையில் இந்த வெற்றிகரமான நிகழ்வு கொஞ்சம் புதிராகவே இருக்கிறது. இந்தியர்களை அவர்களது மாநிலத்தின் திறனைப்பற்றிக் கேளுங்கள்: அவர்களின் பதில் நிராகரிக்கப்பட வேண்டியதாகவே இருக்கும். அரசு நிகழ்ச்சிகள் எல்லாமே மோசமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.  அவ்வளவு ஏன்? ஒரு அரசு பள்ளியையோ, அரசு மருத்துவ மனையையோ உதவிக்கு அணுகமுடியுமா? ஒரு காவல்காரரிடம் ஒரு உதவி கேட்கமுடியுமா? உணவு மான்யத் திட்டங்களை நம்ப முடியுமா? எங்கு பார்த்தாலும் ஊழல், குப்பை, எங்குபோனாலும், எந்த வேலையானாலும் தாமதம், நிர்வாக சீர்கேடு என்று எல்லாமே மனதை அயர்த்துவது நிஜம். பொதுத்துறை எதுவானாலும் இந்த நிலை தான். உதாரணமாக இந்திய கப்பற்படையின் நிலையைப் பாருங்கள்.  தோல்விகளாலும், உயிர்களை பலி கொண்ட விபத்துகளாலும் எப்படியெல்லாம் பாதிப்படைந்திருக்கிறது. நீண்ட நாட்களாக பணமுதலீடு இல்லாமல் இயங்கும் ரயில்வே துறை, மக்களுக்கு தேவையான சாலைகள், மின்சார இணைப்புகள்  இவற்றை அமைத்துத் தரமுடியாத மாநில அரசுகள். இத்தனை பின்னடைவுகள் இருந்தும், இந்திய தேர்தல்கள் எப்படி கச்சிதமாக நடந்து முடிகின்றன?

முதல் விடை: இந்திய தேர்தல்கள் குறுகிய காலக் கவனத்துடன் ஒரு சிறிய காலத்திற்கு நடைபெறுவதுடன், மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதைப்போன்ற சூழ்நிலைகளில் அரசு நிர்வாகிகள் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள். இதற்கு முதல் உதாரணம் 10 வருட தேசிய ஜனத்தொகை கணக்கெடுப்பு.  இன்னொரு உதாரணம் இப்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பயோமெட்ரிக் தகவல் கணக்கெடுப்பு. சுமார் 600 மில்லியன் மக்களின் கண்கள், கை ரேகைகள் ஆகியவற்றை சேகரிப்பது சும்மாவா? இந்தத் தகவல்களை நல்லமுறையில் பயன்படுத்துவார்களா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இத்தனை தகவல்களும் தனியார் நிறுவனங்களால் அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் சேகரிக்கப்பட்டிருக்கின்றன என்பது.

இரண்டாவது விடை: அரசு அதிகாரிகள் தேர்தல்களை நடத்தி முடிப்பதை   மிகப்பெரிய கௌரவமான வேலையாக நினைக்கிறார்கள். இந்த சமயத்தில் இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இந்திய வான்வெளி ஆராய்ச்சியும் இதைப்போன்ற ஒன்றுதான். வியக்கத்தக்க வகையில் குறைந்த செலவில் சமீபத்தில் செலுத்தப்பட்ட ‘மங்கள்யான்’ இதற்கு உதாரணம். இதேபோல சமீபத்தில் ‘இளம்பிள்ளைவாதத்திலிருந்து விடுதலை’ என்று இந்திய பொதுநலத்துறை அறிவித்ததையும் இன்னொரு உதாரணமாகச் சொல்லலாம்.

மூன்றாவது விடை:. ரிசர்வ் வங்கி போல இந்திய தேர்தல் கமிஷனும் சுதந்திரமானது. இதன் செயல்பாடுகளில் அரசியல் தலைவர்கள் தலையிட முடியாது. அரசியல் தலையீடு, மற்றும் லஞ்சம் இல்லாத காரியங்களை அரசு அதிகாரிகள் மிகச் சிறப்பாகச் செய்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் போல எப்போதும் லஞ்சம் வாங்கி மேலிடத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில் தேர்தல் அதிகாரிகள் இல்லை. தேர்தல் நடத்த போடப்படும் பெரிய பட்ஜெட் பணத்தை வேறுவழியில் செலவழிக்க முடியாது. தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்க வாய்ப்புகளும் கிடையாது.

இந்த மாதிரியான அப்பழுக்கற்ற தேர்தல் நடவடிக்கைகள் பிற அரசுத் துறைகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க முடியும் என்பதுடன் இதிலிருந்து நல்ல பல பாடங்களையும் படிக்கலாம். முக்கியமான பாடம் நமது இலக்கு சுலபமானதாக, நன்கு வரையறுக்கப்பட்டதாக இருக்க வேண்டியதின் அவசியம். இதை மனதில் வைத்துக்கொண்டு எளிதாக வர்த்தகம் செய்யக் கூடய இடங்களில் இப்போது இந்தியா இருக்குமிடத்தை  (134 வது இடம் 189 இடங்களில்). ஒவ்வொரு வருடமும் பத்து பத்தாகக் குறைத்துக் கொண்டு வாருங்கள் என்று அரசு அதிகாரிகளிடம் சொல்லலாம்.

இன்னொரு பாடம் செய்யும் செயல்களில் காணப்படும் வெளிப்படையின் முக்கியத்துவம். தேர்தல் அதிகாரிகளைப் போல மக்களின் தொடர்ந்த கண்காணிப்பில் இருக்கும் அதிகாரிகளின் செயல்பாடுகளில்  அரசியல்வாதிகளால் குறுக்கிட்டு திருட்டுத்தனம் செய்ய முடியாது. தகவல் அறியும் உரிமையினால் எத்தனை கேடுகெட்ட செயலாக இருந்தாலும் வெளியே வருவது மிகப்பெரிய சிறப்பான விஷயம்.

கடைசியாக இந்த தேர்தல்களை நடத்தும் அதிகாரிகளுக்கு எல்லையில்லா அதிகாரம் கிடையாது.  யார் வாக்கு அளிக்கலாம், யார் அளிக்கக் கூடாது என்று நிர்ணயிக்க முடியாது இவர்களால். இதன் காரணமாகவே இவர்கள் திறமையாகவும் ஊழல் இல்லாமலும் செயல்படுகிறார்கள். மக்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கோ, ஏமாற்றுவதற்கோ இடம் கொடுக்காமல், தேர்தல்களை நல்லபடியாக நடத்தி முடிப்பது ஒன்று தான் இவர்களது.  வேலை,

இந்தமுறை யார் வெற்றிபெற்றாலும், தேர்தல் நடக்கும் முறைகளை முன்னுதாரணமாகக் கொண்டு இந்தியாவின் அரசு அதிகாரத்துவத்தை எப்படி கூர்மைப்படுத்துவது என்று யோசிக்கலாம்.

நன்றி: தி எகனாமிஸ்ட் பத்திரிக்கை
4தமிழ்மீடியாவிற்காக மொழியாக்கம்/ கட்டுரை வடிவம்: ரஞ்சனி நாராயணன்



4 கருத்துகள்:

  1. உங்கள் மொழியாக்கம் மிக அருமை ரஞ்சனி. ரசித்துப் படித்தேன் .
    பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..
    எல்லா நலங்களும் நின்று நிலைபெறுக!..

    பதிலளிநீக்கு
  4. நான்காம் தமிழ் ஊடகத்தில் வந்த கருத்துரை:

    Senthilkumar G • 10 days ago
    என்ன ஒரு அற்புதமான கட்டுரை. ஒவ்வொரு தேர்தலின் போதும், அரசியல்வாதிகளின் அற்ப நடவடிக்கைகளினால் மனம் சலித்திருந்தாலும் கூட, தேர்தல் ஆணையத்தின் விஸ்வருப நடவடிக்கைகளினால் மனம் மாறி தேர்தல் தினத்தன்று வாக்களிக்கச் சென்றுவிடுவேன். அத்தகைய ஆற்றல் மிக்க அமைப்பை ஏற்படுத்தியுள்ள நமது முன்னோர்களின் அறிவுக்கூர்மையை என்ன சொல்லி வியப்பது?!. ஆக இதன் மூலம் நாம் உணர வேண்டியது, புதிய புதிய சட்டங்கள் தேவையில்லை; இருக்கும் சட்டங்களை முறையாக அமல் செய்தாலே இந்தியா ஒரு வல்.... இல்லையில்லை........நல்லரசாக அமையும். நன்றி-

    பதிலளிநீக்கு