வெள்ளி, 18 ஜனவரி, 2013

வைர விழா!




உங்களிடம் இரண்டு கேள்விகள்:
தொலைக்காட்சி தொடர்களினால் யாருக்கு  லாபம்?
ஏக்தா கபூருக்கு என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஏக்தா கபூர் எடுக்கும் ஹிந்தி தொடர்களால் நம் தமிழ் தொலைகாட்சிகளுக்கு லாபம். அந்தத் தொடர்களுக்கு பழைய, புதிய திரைப் படங்களின் பெயர்களை இட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே!
இவர்களையெல்லாம் விடுங்கள். பழைய, வயதான நடிக நடிகையருக்கும் இந்தத் தொடர்களால் மறுவாழ்வு கிடைத்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
பதிவுகள் எழுதுவதால் என்ன லாபம்?
பல புதிய நட்புகள் உருவாகி செழித்து வளருகின்றன. எழுத்துக்களால் மட்டுமே இணையும் நட்புகள்.
தொலைக்காட்சியில் வரும் பழைய, வயதான நடிக நடிகையர் போலவே என்னைப் போன்ற வயசாளிகளுக்கு   பதிவுலகம் புதிய வாழ்க்கையை கொடுத்துள்ளது.
எங்களின் பொழுதுகள் வீணடிக்கப் படுவதில்லை. வளரும் தொழில் நுட்பத்தை நாங்களும் கற்று அதை எங்களுக்கு தகுந்த முறையில் பயன்படுத்துகிறோம். பொழுது போகவில்லையே என்று அலுத்துக் கொள்வதில்லை. யாரிடமாவது அரட்டை அடிக்கலாமா, வம்பு பேசலாமா என்று அலைவதில்லை. முக்கியமாக அது இல்லை, இது இல்லை என்று குறைப்பட்டுக் கொண்டு மற்றவரை பாடாய் படுத்துவதில்லை!
எங்களுக்கு வாழ்க்கை தந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் வரும் ஆனந்தத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவித்து வருகிறோம். உட்கார்ந்த இடத்தில் உலகை சுற்றி வருகிறோம் என்று கூட சொல்லலாம்.
வயது எங்கள் உடலுக்கே தவிர மனதிற்கு அல்ல.பதிவு எழுதுவது எங்களின் மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது.
நாங்கள் எத்தனை உற்சாகமாக இருக்கிறோம் என்பதை நாளை (19.01.2013) தனது 75 வது பிறந்த நாளைக் கொண்டாடிடும் திருமதி ருக்மிணி சேஷசாயியின் பதிவுகளைப் படித்தால் தெரியும்.
யார் வழிக்கும் போகாமல் இவர் தனது பதிவுகளை குழந்தைகளுக்கு கதைகள் எழுதுவதற்கென்றே வைத்துக் கொண்டு விட்டார். பெரியவர்களின் விளையாட்டுக்கு இவர் வருவதே இல்லை. சென்ற ஆகஸ்டில் நடந்த பதிவர் விழாவிலும், பிறகு பெங்களூரில் எங்கள் வீட்டிற்கு வந்த போதும் இவரை சந்தித்திருக்கிறேன்.
இவருடன் பேசிக்கொண்டு இருப்பதே மனதுக்கு நிறைவைத் தரும் விஷயம்.
சமீபத்தில் ஆழி கடந்தான் வாழி என்று சுந்தரகாண்டத்தை குழந்தைகளுக்கு புரியும்படி எழுதி இருந்தார். ஹனுமத் ஜெயந்தியை ஒட்டி இந்தக் கதையை எழுதி இருப்பதாக சொன்னார்.
இவரது தாய்மொழி கன்னட. படித்தது தமிழ் முதுகலை பட்டப்படிப்பு! நான் வியப்புடன் இவரைப் பார்த்தபோது சொன்னார்: ‘எங்கள் பள்ளியில் மூன்று தமிழ் ஆசிரியைகள். ஒருவருக்கு தாய்மொழி தெலுங்கு. இன்னொருவருக்கு மலையாளம். எனக்கு கன்னட.’
பதிவுலகத்தில் மட்டுமில்லாமல், ஜெயா தொலைக்காட்சியிலும், சுட்டி விகடனிலும் கதைகள் சொல்லி சாதனை புரிந்துள்ளார் இவர்.

புதுவருட வாழ்த்திற்காக இவருக்கு நான் தொலைபேசிய போது தனது 75 வது பிறந்தநாளை தன் குழந்தைகள் எல்லோரும் ஒன்று கூடி கொண்டாட இருப்பதாகவும், கட்டாயம் வரவேண்டும் என்றும் சொன்னார்.
வரும் வாரம் எங்கள் வீட்டில் ஒரு திருமணம் கேரளாவில். அதற்கு கிளம்ப வேண்டும் என்பதால் என்னால் போக இயலவில்லை. ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடுகிறோமே என்று கொஞ்சம் வருத்தம் தான்.
அடுத்த மாதம் இன்னொரு திருமணம் சென்னையில். அப்போது வந்து பார்ப்பதாக அவரிடம் சொல்லி இருக்கிறேன்.
இந்தப் பதிவை படிப்பவர்கள் எல்லோரும் தவறாமல் திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்களின் தளத்திற்கு போய் அவரது  ஆரோக்கிய வாழ்விற்கு  இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு, அவரை  வணங்கி அவரது ஆசிகளைப் பெற்று வருமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.


இசைப்பாவில் கேட்டு மகிழுங்கள்:’

24 கருத்துகள்:

  1. எங்களுக்கு வாழ்க்கை தந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் வரும் ஆனந்தத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவித்து வருகிறோம். உட்கார்ந்த இடத்தில் உலகை சுற்றி வருகிறோம் என்று கூட சொல்லலாம்.
    வயது எங்கள் உடலுக்கே தவிர மனதிற்கு அல்ல.பதிவு எழுதுவது எங்களின் மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது.//

    உண்மை உண்மை நன்றாக சொன்னீர்கள் ரஞ்சனி.

    திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்களுக்கு வாழ்த்துக்கள் அவர்களிடம் அவர்கள் தளத்திற்கு சென்று ஆசி பெற்றுக் கொள்கிறேன்.
    உங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வாருங்கள் கோமதி!
    என் கருத்துக்கள் உங்களுக்குப் பிடித்திருந்தது மகிழ்ச்சி!
    நன்றி!

    பதிலளிநீக்கு
  3. தாங்கள் அறிமுகப்படுத்திய ருக்மணி சேஷசாயீ அவர்கள் பதிவின் பக்கம் ( http://chuttikadhai.blogspot.in/2009/07/blog-post_09.html ) சென்று வந்தேன். தமிழில் எம்.ஏ பட்டம் பெற்றுள்ளார். நானும் தமிழில் பட்டம் பெற்றவன்தான் என்பதால் மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கற்றோரைக் கற்றோரே காமுறுவர் - இல்லையா?

      நன்றி!

      நீக்கு
  4. சகோதரி அவர்களுக்கு! நீங்கள் உங்கள் பதிவில் ருக்மணி சேஷசாயீ அவர்கள் பதிவின் பக்கமாக Thursday, July 9, 2009 என்ற இணைப்பு கொடுத்து விட்டீர்கள். பின்னர் 2013 சென்று வந்தேன். ஒரு தகவலுக்காக மட்டுமே இது!

    பதிலளிநீக்கு
  5. மிகவும் அழகான அருமையான பதிவு இது. நம் இன்றைய உணர்வுகளை வெகு அழகாகப் பட்டியல் இட்டுள்ளீர்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  6. //பதிவுகள் எழுதுவதால் என்ன லாபம்?//

    ”ரஞ்ஜு அம்மாவின் படுத்தல்களே லாபம்”

    என்று நான் சொல்லமாட்டேன்.

    ஏனென்றால் அவர்கள் என்னைப் பாடாய்ப்படுத்தியது blogspot இல் அல்ல. Wordpres இல் மட்டுமே.

    >>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா...ஹா....
      இன்னொரு படுத்தல் உங்களை நோக்கி வந்துகொண்டே இருக்கிறது.

      நீக்கு
  7. //பல புதிய நட்புகள் உருவாகி செழித்து வளருகின்றன. எழுத்துக்களால் மட்டுமே இணையும் நட்புகள்.//

    ஆம் மிகவும் உண்மை தான்.

    “நேற்று வரை நீ யாரோ நான் யாரோ ....

    இன்று முதல் நீ வேறோ நான் வேறோ”

    என்ற சினிமாப்பாடல் தான் என் நினைவுக்கு வருகிறது.

    அந்த அளவுக்கு நம் நட்பினை, நம் எழுத்துக்கள், நமக்கு ஈட்டிக்கொடுத்துள்ளன என்று சொன்னால் அது மிகையாகாது.

    >>>>>>

    பதிலளிநீக்கு
  8. //எங்களின் பொழுதுகள் வீணடிக்கப் படுவதில்லை. வளரும் தொழில் நுட்பத்தை நாங்களும் கற்று அதை எங்களுக்கு தகுந்த முறையில் பயன்படுத்துகிறோம். பொழுது போகவில்லையே என்று அலுத்துக் கொள்வதில்லை. யாரிடமாவது அரட்டை அடிக்கலாமா, வம்பு பேசலாமா என்று அலைவதில்லை. முக்கியமாக அது இல்லை, இது இல்லை என்று குறைப்பட்டுக் கொண்டு மற்றவரை பாடாய் படுத்துவதில்லை!//

    சபாஷ். கையைக்கொடுங்கோ ... கண்ணில் ஒத்திக் கொள்ளணும் போல உள்ளது. அருமை. அருமை.

    >>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கருத்துக்கள் உங்களுக்குப் பிடித்திருப்பது சந்தோஷம்.

      நீக்கு
  9. //மற்றவரை பாடாய் படுத்துவதில்லை!//

    மற்றவரை நாம் பாடாய்ப்படுத்துவது இல்லை தான்.

    ஆனால் வீட்டில் உள்ள மற்றவர்கள் நம்மை [கணினியில் மூழ்கிவிடும் நம்மை] பாடாய்ப்படுத்தி பம்பரமாய் ஆட்டி வருகிறார்களே, மேடம்.

    அதற்கு நாம் என்ன செய்வதூஊஊஊ?

    இப்போ பாருங்கோ என்னால் தொடர்ச்சியாக உங்களுக்குக் கருத்துச்சொல்ல முடியவில்லை.

    அவ்வப்போது பல தொந்தரவுகள். இடையூறுகள்.

    >>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடாது தொந்தரவுகள் வந்தாலும் விடாது எழுதுவோமே!

      நீக்கு
  10. //எங்களுக்கு வாழ்க்கை தந்த அனுபவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் வரும் ஆனந்தத்தை வீட்டிலிருந்தபடியே அனுபவித்து வருகிறோம்.//

    ஆனந்தம்! ஆனந்தம்!! ஆனந்தமே!!!

    //உட்கார்ந்த இடத்தில் உலகை சுற்றி வருகிறோம் என்று கூட சொல்லலாம்.//

    உண்மை உண்மை உண்மை ;)))))

    //வயது எங்கள் உடலுக்கே தவிர மனதிற்கு அல்ல.//

    கரெக்டூஊஊஊ ; அச்சா பஹூத் அச்சா !!

    //பதிவு எழுதுவது எங்களின் மனதிற்கு உற்சாகத்தைத் தருகிறது.//

    அது எங்களுக்கும், உங்கள் பதிவுகளின் மூலம் தெரிகிறதூஊஊஊ. மிகுந்த உற்சாகமாகவே உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    >>>>>>

    பதிலளிநீக்கு
  11. இந்தப் பதிவை படிப்பவர்கள் எல்லோரும் தவறாமல் திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்களின் தளத்திற்கு போய் அவரது ஆரோக்கிய வாழ்விற்கு இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு, அவரை வணங்கி அவரது ஆசிகளைப் பெற்று வருமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

    ஆஹா, பேஷா.

    இவர்களை நான் சென்னையில் ஒருமுறை ஒரு பரிசளிப்பு விழாவில் நேரில் சந்தித்துள்ளேன்.

    என்னுடைய மூன்றாவது சிறுகதை தொகுப்பு நூலுக்கு “நம் உரத்த சிந்தனை” என்ற தமிழ் மாத இதழ் மூலம் எனக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

    பரிசு வழங்கியவர்:-

    நகைச்சுவை நடிகர் “டெல்லி கணேஷ்” அவர்கள்.

    அதே கூட்டத்திற்கு இவர்களும் வருகை தந்திருந்தார்கள் என்று ஞாபகம் உள்ளது.

    அந்த சமயம் எனக்கு இவர்களுடன் பழக்கம் இல்லாததால் சந்தித்துப்பேசி என்னை அறிமுகம் செய்துகொள்ள முடியவில்லை.

    >>>>>>

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உரத்த சிந்தனை மூலம் உங்கள் புத்தகத்திற்கு முதல் பரிசு கிடைத்தது அறிய சந்தோஷம்.

      உரத்தசிந்தனையில் திருமதி ருக்மணி மிகவும் ஈடுபாடு உள்ளவர். அங்கு நடக்கும் கூட்டங்களுக்கு தவறாமல் போவேன் என்று சொல்லியிருக்கிறார்.

      நீக்கு
  12. அந்த மேற்படி பரிசளிப்பு விழாவினை இதோ இந்த என் பதிவினில் படமாக வெளியிட்டுள்ளேன். பாருங்கோ:

    http://gopu1949.blogspot.in/2011/07/4.html

    பிரியமுள்ள
    கோபு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தக வெளியீட்டிற்கு பாராட்டுகள். நிச்சயம் பார்க்கிறேன்.

      வரிவரியாய் படித்து ரசித்ததற்கும், திருமதி ருக்மிணியை பிறந்தநாள் வாழ்த்துக் கூறி அவரிடம் ஆசிர்வாதம் வாங்கியதற்கும் நன்றி!

      நீக்கு
  13. என்னுடைய நமஸ்காரங்களை இங்கிருந்தே தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. வயதின் சிரமம் பாராமல் வளரும் விஞ்ஞானத்தோடு இணைந்து உங்கள்(போன்றோரின்) அனுபவங்கள் இளையவர்களுக்குப் பாடமாவது நிச்சயம் பாராட்டப் படவேண்டியது.

    பதிலளிநீக்கு
  15. வாருங்கள் ஸ்ரீராம்!
    உங்கள் நமஸ்காரங்களை திருமதி ருக்மிணியிடம் தெரிவிக்கிறேன்.
    பாராட்டுக்களுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  16. திருமதி ருக்மிணி சேஷசாயி அவர்களின் தளத்திற்கு போய் அவரது ஆரோக்கிய வாழ்விற்கு இறைவனை பிரார்த்தித்துக் கொண்டோம் .. அவரை வணங்கி அவரது ஆசிகளைப் பெற்று வந்தோம் .. வாய்ப்பளித்த தங்களுக்கு இனிய நன்றிகள்..

    பதிலளிநீக்கு