எங்கள் மாமா
17
ஸ்ரீரங்கம் என்றால் உடனே நினைவுக்கு வருவது எங்கள் பாட்டியின் வீடு மட்டுமல்ல; எங்கள் மாமாக்களின் நினைவும் தான்.
எங்கள் பெரிய மாமா சென்னை திருவல்லிக்கேணியில் இருந்தார். அவர் ரொம்பவும் கண்டிப்பானவர். அவரிடம் எங்களுக்கு சற்று பயம் அதிகம். எதிரில் நின்று பேச பயப்படுவோம்.
அடுத்த மூன்று மாமாக்களிடம் அதீத செல்லம். மாமா வா, போ என்று பேசும் அளவுக்கு சுதந்திரம். இந்த மூவரில் பெரிய மாமா திருமஞ்சனம் கண்ணன் என்கிற கண்ணப்பா மாமா. அவர்தான் இந்தப் பதிவின் நாயகன்.
நாங்கள் சிறுவயதினராக இருந்த போது மாமா எங்களுடன் சில காலம் சென்னையில் தங்கி இருந்தார். அதனால் இந்த மாமா ரொம்பவும் நெருக்கமானவர் எங்களுக்கு.
மாமாவின் பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது. அவரது புகைப்படங்களுக்கு பாத்திரங்கள் நாங்கள் – மாமாவின் மருமான்களும், மருமாக்களும் தான். அதுவும் நான் ரொம்பவும் ஸ்பெஷல்.
என் தோழி ஜெயந்தி எனக்கு photographic memory இருப்பதாக எழுதியிருந்தாள். என் மாமா நான் photogenic என்று அடிக்கடி சொல்லுவார். அதனால் மாமா எடுத்த படங்களின் முக்கிய கதாநாயகி நானாக இருந்தேன் – எனக்குத் திருமணம் ஆகி புக்ககம் போகும் வரை!
எங்களை சிறுவயதில் புகைப்படங்கள் எடுத்ததுடன் நிற்காமல் எங்களது திருமணங்களுக்கும் மாமாதான் புகைப்படக்காரர்.
தன்னிடமிருந்த கருப்பு வெள்ளை காமிராவில் மாமா காவியங்கள் படைத்திருக்கிறார். மாமாவின் புகைப்படங்களில் நாங்கள் எல்லோரும் உயிருடன் உலா வந்தோம். மாமா தன் புகைப்பட பரிசோதனைகளை எங்கள் மேல் நடத்துவார்.
மாமாவின் மனதில் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப நாங்கள் ‘போஸ்’ கொடுக்க வேண்டும். மாமா நினைத்தது புகைப்படத்தில் வரும் வரை எங்களை விட மாட்டார்.
இப்போது இருப்பது போல டிஜிட்டல் காமிராக்கள் இல்லாத நேரம் அது. ஒரு பிலிம் சுருள் முடியும் வரை புகைப்படங்கள் எடுத்துவிட்டு, திருச்சி போய் அவற்றை பிரதி எடுத்துக் கொண்டு வருவார். கூடவே புதிய பிலிம் சுருளும் வரும், அடுத்த பரிசோதனைக்கு.
காவிரியில் ஆடிப்பெருக்கன்று சுழித்தோடும் வெள்ளத்திலிருந்து, மகாபலிபுரம் அர்ஜுனன் தபஸ் வரை மாமாவின் கருப்பு வெள்ளைக் காமிராவில் புகைப் படங்களாக சிறைப் பிடிக்கப்பட்டிருக்கும்.
எனக்கு நினைவு இருக்கும் மாமாவின் புகைப்படப் பரிசோதனை ஒன்று. எனக்கு நானே புத்தகம் கொடுப்பது போல.
நான் ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பேன். காமிராவின் லென்ஸ் –ஐ பாதி மூடிவிட்டு உட்கார்ந்திருக்கும் படத்தை எடுப்பார். அடுத்தாற்போல அந்த நாற்காலி பக்கத்தில் நின்று கொண்டு காலி நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு புத்தகத்தைக் கொடுக்க வேண்டும். லென்ஸ்- இன் மறுபாதியை மூடிவிட்டு இந்தப் படத்தை எடுப்பார்.
திரும்பத் திரும்பத் திரும்பத் ……….
எத்தனை முறை இதனை எடுத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? எனக்கு இன்றுவரை நினைவு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
அப்போதெல்லாம் செய்தி பரிமாற்றம் கடிதங்கள் மூலம்தான். நாங்களும் எங்கள் மாமாக்களுக்கு கடிதம் எழுதுவோம். கடிதத்தின் ஆரம்பத்தில் ‘ஸ்ரீமதே ராமானுஜாய நம:’ போட வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது எங்கள் கண்ணப்பா மாமா தான்.
மாமாவுக்கு கணீரென்ற குரல். அகத்தில் இருக்கும் பெருமாளுக்கு அந்த கணீர் குரலில் பாசுரங்கள் சேவித்தபடியே மாமா திருமஞ்சனம் செய்வதைக் காணக் கண் கோடி வேண்டும்.
‘நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று மாமா நாத்தழுதழுக்க பெரிய திருமொழி சேவிக்கும்போது திருமங்கையாழ்வாரும், ‘எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும்* எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே’ என்று திருமாலை சேவிக்கும்போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் நம் கண் முன்னே தோன்றுவார்கள்.
கண்ணப்பா மாமாவுக்குத் திருமணம் ஆகி மாமி வந்தார். மாமா எங்களுக்கு எத்தனை நெருக்கமோ அத்தனை நெருக்கம் ராஜம் மாமியும். திவ்யப்பிரபந்தம் மட்டுமே தெரிந்திருந்த எங்களுக்கு முமுக்ஷுப்படி, ஸ்ரீவசன பூஷணம், ஆச்சார்ய ஹ்ருதயம் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியவர் இந்த மாமிதான்.
‘பகவத்கீதையில் கிருஷ்ணனுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் ராஜத்தைத் தான் கேட்பார்’ என்று என் மாமா வேடிக்கையாகக் கூறுவார். அந்த அளவுக்குக் கீதையை கரைத்துக் குடித்தவர் மாமி.
பல திவ்ய தேசங்களுக்கும் சென்று அங்கிருக்கும் பெருமாள்களையும் தன் காமிராவில் சிறை எடுத்து வருவார் எங்கள் மாமா. மாமாவிற்கு தான் எடுத்த படங்களுள் மிகவும் பிடித்தமான படம் திருவாலி திருநகரி திருமங்கையாழ்வார் தான். கூப்பிய கைகளுடன் நிற்கும் அவரது திரு முகத்தை மட்டும் க்ளோஸ்-அப் – பில் எடுத்து வீட்டுக் கூடத்தில் மாட்டியிருப்பார். ஆழ்வாரின் கண்களின் வழியே அவரது கருணை நம்மை ஆட்கொள்ளும்.
இத்தனை திறமை இருந்தும் மாமா தனது திறமையை பணமாக்க விரும்பவில்லை. எத்தனையோ பேர்கள் சொல்லியும் தனது மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்காக மட்டுமே வைத்துக்கொண்டு இருந்தார்.
எங்களது பாட்டியின் முதுமை காலத்தில் மாமாவும் மாமியும் மிகுந்த ஆதுரத்துடன் பாட்டியைப் பார்த்துக் கொண்டனர். மாமாவின் குழந்தைகளும் பாட்டியினிடத்தில் வாஞ்சையுடனும், மிகுந்த பாசத்துடனும் இருந்தனர். பாட்டியின் கடைசிக் காலம் இவர்களது அரவணைப்பில் நல்லவிதமாக கழிந்தது. இதற்காக மாமாவுக்கும், மாமிக்கும் நாங்கள் எல்லோருமே நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம்.
கண்ணப்பா மாமா என்று நாங்கள் ஆசையுடன் இன்றும் அழைக்கும் எங்கள் மாமாவுக்கு இன்று 80 வயது நிறைகிறது. மார்கழித் திருவாதிரையில் பிறந்தவர் மாமா. எங்கள் அம்மா ஒவ்வொரு வருடமும் தனது தம்பியை நினைத்துக் கொண்டு திருவாதிரை களியும், ஏழுகறிக் கூட்டும் செய்வாள்.
பழைய நினைவுகளுடன், மாமாவின் அன்பில் நனைந்த நாட்களை அசை போட்டபடியே இந்தப் பதிவை மாமாவுக்கு அர்ப்பணிக்கிறேன்.
மாமாவும் மாமியும் என்றென்றும் ஆரோக்கியத்துடன், சந்தோஷமாக இருக்க ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.