ஞாயிறு, 16 டிசம்பர், 2012

முப்பதும் தப்பாமே.....!





இன்றைக்கு மார்கழி முதல் நாள்.

திருவாடிப் பூரத்து செகத்துதித்த, திருப்பாவை முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்றெடுத்த, பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னான, ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்த, உயரரங்கற்கு கண்ணி உகந்தளித்த, மருவாறும் திருமல்லி வளநாடி, வண்புதுவை நகர்கோதை அருளிச் செய்த திருப்பாவையால் சிறந்து விளங்கும் மாதம்.

தினமுமே திருப்பாவையை சேவித்த போதும் மார்கழியில் சேவிப்பது மன நிறைவைத் தரும். திருப்பாவையை நினைவு தெரிந்த நாளாக சேவித்து வருகிறேன்.

திருவல்லிக்கேணி திருவேட்டீச்வரன் பேட்டையில் இருந்த போது விடியற்காலையில் மார்கழி மாதம் தினமும் பஜனை கோஷ்டி ஒன்று எங்கள் வீதி (நாகப்பா ஐயர் தெரு) வழியே போகும். அதுதான் எங்களுக்குத் திருப்பள்ளியெழுச்சி!

பள்ளியிலும் திருப்பாவை, திருவெம்பாவை சொல்லிக் கொடுப்பார்கள். என் அக்கா, திருமதி எம்.எல்.வி. பாடிய ராகத்திலேயே எல்லாப் பாடல்களையும் அழகாகப் பாடுவாள். வாசலில் பெரிய கோலம் போடுவாள். நான்? ரசிப்பேன் அவ்வளவுதான்! நம்மால் முடிந்ததைத்தானே நாம் செய்ய முடியும்?

பிறகு புரசைவாக்கம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். லேடி எம்.சி.டி. முத்தையா செட்டியார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன்.

திருப்பாவை என்றால் எனக்கு நினைவுக்கு வரும் – ஆண்டாளைத் தவிர – ஒருவர் திரு கேதாரேஸ்வர ஸர்மா. எங்கள் தமிழ் வாத்தியார், ஸர்மா ஸார்.

மார்கழி மாதம் முப்பது நாளும் பள்ளி முடிந்த பின் திருப்பாவை அன்றைய நாள் பாட்டை சொல்லிக் கொடுத்து அதற்கு விளக்கமும் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவரது மாணவிகளுள் ஒருவர் வீட்டிலிருந்து பிரசாதம் வரும்.

வெள்ளைவெளேரென்ற பஞ்சகச்சம். வெள்ளை நிற அங்கி அதன் மேலே வண்ண ஷால். கட்டு குடுமி. நெற்றியில் பளீரென்ற திருநீறு.
ஆண்டாளைப் பற்றி சொல்லுகையில் கண்களில் நீர் ததும்பும்!

தமிழ் வாத்தியார் என்றால் மனதில் தோன்றும் பிம்பத்துக்கு ஏற்றார்போல் எங்கள் ஸர்மா ஸாருக்கும் நிறைய பெண்கள் + ஏழ்மை.

திருப்பாவை உபன்யாசத்துக்கு நடுவே தன் ஏழ்மையையும், ஆண்டாளும் அவள் சாதித்த திருப்பாவையுமே தன் பெண்களை கரையேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் கண்ணீருடன்  ஆண்டாளின் முன் வைப்பார்.
நாங்களும் கண்களில் கண்ணீருடன் அவருக்காக ஆண்டாளிடம் மானசீகமாக பிரார்த்தனை செய்து கொள்ளுவோம்.  

அவரது மாணவிகளைத் தவிர, சில தாய்மார்களும் அவரது உபன்யாசத்தைக் கேட்க வருவார்கள். பல தாய்மார்கள் நேரில் வராவிட்டாலும் பிரசாதம் செய்து அனுப்பி விடுவார்கள்.

கடைசி நாளன்று – வங்கக் கடல் கடைந்த  பாசுரத்தன்று ஆண்டாள் கல்யாணம் நடத்துவார். ரொம்பவும் அமர்க்களமாகப் பண்ணுவார். பூக்களும் நகைகளுமாக ஆண்டாளும் ரங்கமன்னாரும் மின்னுவார்கள். ஆண்டாள் பெருமாளுடன் கலந்து விட்டதை அவரால் சொல்லவே முடியாது. நா தழுதழுக்கும். கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் கொட்டும். உணர்ச்சிப் பெருக்கில் எல்லோரும் ஊமைகளாக உட்கார்ந்திருப்போம். அன்றைக்கு நிறைய மாணவிகள், பெற்றோர்களுடன் வருவார்கள்.

நடுவில் ஒரு நாள் திருப்பாவைப் போட்டி நடக்கும்.

வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டாள் படம் பரிசு. வருடம் தவறாமல் கலந்து கொண்டு பரிசும் வாங்கி விடுவேன் நான்.

ஆண்டாள் சாதித்த திருப்பாவை முப்பதையும் தப்பாமல் சொன்னால் நல்ல வாழ்க்கை அமையும்  என்ற  விதையை ஒவ்வொரு மாணவியின் உள்ளத்திலும் விதைத்தவர் அவர்தான்.

அவரது பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. அவர் நம்பிய ஆண்டாள் அவரைக் கைவிடவில்லை.

நானும் அவர் சொல்லியதை அப்படியே நம்பினேன். என் பெண்ணின் உள்ளத்திலும் திருப்பாவை என்கிற வித்தை விதைத்தேன்.

எனக்கு ஒரு நாராயணனும், அவளுக்கு ஒரு கேஷவ மூர்த்தியும்  கிடைத்து எங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து இருக்கிறது. 

'சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்....

என்பதற்கு  இதைவிட சாட்சி வேண்டுமா?




25 கருத்துகள்:

  1. திருப்பாவை – மார்கழி மாத நினைவுகளை சுவைபடச் சொல்லியதற்கு நன்றிம்மா….

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வெங்கட்!

      நீக்கு
  2. மார்கழித் திங்கள் மலரும் நினைவுகள் நினைத்துப் பார்க்கையில் மகிழ்ச்சிதான். அந்நாளைய ஆசிரியர்கள் போல் இப்போது யாரும் இல்லை. சூழ்நிலையும் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் வகுப்புகளில் மிகவும் கண்டிப்பாக இருப்பவர், ஆண்டாளை நினைத்து உருகுவது எங்கள் எல்லோருக்கும் வியப்பாக இருக்கும்.

      அந்த மாதிரியான அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கும் ஆசிரியர்கள் இக்காலத்தில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு தமிழ் இளங்கோ!

      நீக்கு
  3. மார்கழி மாதத்திற்கு ஏற்ற மிகச்சிறப்பான அருமையான பகிர்வு.

    //நானும் அவர் சொல்லியதை அப்படியே நம்பினேன். என் பெண்ணின் உள்ளத்திலும் திருப்பாவை என்கிற வித்தை விதைத்தேன்.

    எனக்கு ஒரு நாராயணனும், அவளுக்கு ஒரு கேஷவ மூர்த்தியும் கிடைத்து எங்கள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்து இருக்கிறது. //

    ஆஹா, இதைவிட வேறென்ன சாக்ஷி வேண்டும்? அருமையாகச் சொல்லி விட்டீர்கள்.

    >>>>>>

    பதிலளிநீக்கு
  4. //ஆண்டாள் சாதித்த திருப்பாவை முப்பதையும் தப்பாமல் சொன்னால் நல்ல வாழ்க்கை அமையும் என்ற விதையை ஒவ்வொரு மாணவியின் உள்ளத்திலும் விதைத்தவர் அவர்தான்.

    அவரது பெண்களுக்கும் நல்ல வாழ்க்கை அமைந்தது. அவர் நம்பிய ஆண்டாள் அவரைக் கைவிடவில்லை.//

    இதைக்கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;)

    >>>>>

    பதிலளிநீக்கு
  5. //வெள்ளைவெளேரென்ற பஞ்சகச்சம். வெள்ளை நிற அங்கி அதன் மேலே வண்ண ஷால். கட்டு குடுமி. நெற்றியில் பளீரென்ற திருநீறு. ஆண்டாளைப் பற்றி சொல்லுகையில் கண்களில் நீர் ததும்பும்!//

    அந்தத்தமிழ் ஆசிரியரை நானும் என் மனக்கண்ணால் கற்பனை செய்து பார்த்தேன். சந்தோஷமாக உள்ளது.

    என் “மீண்டும் பள்ளிக்குப்போகலாம்” பதிவு ஏனோ ஞாபகத்துக்கு வந்தது.

    இணைப்பு இதோ:
    http://gopu1949.blogspot.in/2012/03/1.html

    நல்ல பதிவு. பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதே படிக்கிறேன் ஸார்! வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!

      நீக்கு
  6. வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டாள் படம் பரிசு. வருடம் தவறாமல் கலந்து கொண்டு பரிசும் வாங்கி விடுவேன் நான்.//

    வாழ்க்கையிலும் பரிசுவாங்கவைத்த திருப்பாவைப்பாசுரங்கள் ...

    பகிர்வுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  7. வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
    மனம் நிறைந்த பாராட்டுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. படிக்கும்போதே மனம் உருகுகிறது... (படைப்பின் வெற்றி)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஜனா!
      உங்களைப் போன்ற நல்ல எழுத்தாளர்கள் பாராட்டுவது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  9. மார்கழிச் சிந்தனைப் பூக்கள் நன்று நன்று.
    மிகத் தெளிவாக உள்ளது மிக்க நன்றி.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  10. நல்லதுங்க ,நம்பிக்கையே கடவுள் .நல்லது நடந்தால் அது இறையருள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் கவியாழி!
      எனது எல்லாத் தளங்களையும் பார்த்து கருத்துரை எழுதியதற்கு நன்றி!
      உங்கள் வரவு தொடரட்டும்!

      நீக்கு
  11. முப்பதும் தப்பாமே சொல்லுவதால் எங்கும் திருவருள் பெற்று இன்புற்றதை மிக நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் அம்மா.

    பதிலளிநீக்கு
  12. வாருங்கள் குமரன். உங்கள் வருகை மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது.
    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
    உங்கள் வருகை தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம்! நாளைய வலைச்சரத்தில் தங்கள் பதிவுகள் வாருங்கள்!

    பதிலளிநீக்கு
  14. ஓ! மிக இனிமையான செய்தியைக் கூறியிருக்கிறீர்கள், உஷா! நன்றி! கட்டாயம் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. 'சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
    இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
    செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்....

    என்பதற்கு இதைவிட சாட்சி வேண்டுமா?//

    உண்மை .என் அம்மா எங்களை இப்படித்தான், மார்கழி மாதம் திருப்பாவை, திருவெம்பாவை பாடச் சொல்வார்கள். கோவில் வழி பாடு செய்ய சொல்வார். அது போலவே திருப்பாவை, திருவெம்பாவை இரண்டையும் காலையில் தினம் பாடும் கடவுள பக்தி உள்ள கணவர் கிடைத்தார்..

    பதிலளிநீக்கு
  16. வாருங்கள் கோமதி!
    உங்களது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  17. திருப்பாவை, நாச்சியார் திருமொழி வாசித்திருக்கிறேன். தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி என்று எல்லோருக்கும் வேண்டிய தமிழ்கவி ஆண்டாள். ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று வணங்கியிருக்கிறேன். ஆண்டாள் மதுரைக்கு வந்திருக்கிறார். மதுரையை 'மாட மதில் சூழ் மதுரை' என்று ஒரு பாடலில் அழைக்கிறார். அழகர்கோயில் சுந்தரராஜபெருமாள் மீது நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார். அடுத்த மாதம் ஆண்டாள் சூடிய மாலையணிந்து அழகர் வையையில் இறங்கும் பெருவிழா தொடங்கப்போகிறது. ஆண்டாளின் தமிழ் ஆளுமையை எண்ணி வியக்கதிருப்பாவையை தினமும் பாடலாம்.

    பதிலளிநீக்கு