எமக்குத் தொழில்அசைபோடுதல் 21 15.6.2016
அந்தக்காலத்தில்
பள்ளிகூடங்களில் வகுப்பறைகள் தனித்தனியாக இருக்காது. ஒரு பெரிய ஹால். அதிலேயே
இரண்டு மூன்று வகுப்புகள் நடக்கும். வகுப்புகளுக்கு நடுவில் மறைப்பும் இருக்காது. மரத்தடியில்
இல்லாமல் ஒரு கட்டிடத்திற்குள் பள்ளி இருந்ததே ஒரு அதிசயம் தான், இல்லையா? கனகவல்லி பள்ளியிலும் சரி, அரசு நடுநிலைப்பள்ளியிலும் சரி வகுப்புகள் எல்லாமே நீளமான ஒரு ஹாலில் தான்
இருக்கும். கனகவல்லி பள்ளியில் கீழே தரையில் உட்கார்ந்து கொள்ளுவோம். மாணவர்கள்
வருவதற்கு முன் ஆயா வந்து ‘கூட்டி,
மெழுகி’ விட்டுப்
போவார்கள். சில நேரங்களில் நாங்கள் வந்தபின் ‘கூட்டி, மெழுகு’வார்கள். அதேபோலத்தான் அரசு நடுநிலைப்பள்ளியிலும். மாடியிலும் கீழும்
பெரிய ஹால்கள். அதில் பக்கத்துப் பக்கத்தில் வகுப்புகள் நடக்கும்.
ஒரு வகுப்பில்
சொல்லிக் கொடுப்பது இன்னொரு வகுப்பிற்கு நன்றாகக் கேட்கும். ஆசிரியர்களோ,
மாணவர்களோ இதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. என்ன ஒரு கஷ்டம் என்றால், சில
ஆசிரியர்கள் தாங்கள் சொல்வதைத் திரும்பச் சொல்லச் சொல்லுவார்கள். வகுப்பு
முழுவதும் ஓ என்று இரைச்சல் போடுவார்கள். பக்கத்தில் இருக்கும் வகுப்புகளுக்கு
இடைஞ்சல் ஆக இருக்கும். ஆனால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதே போல ஒரு
வகுப்பில் ஆசிரியர் இல்லையென்றால் இரண்டு வகுப்புகளையும் ஒன்றாக உட்கார
வைத்துவிடுவார்கள். சத்தம் காதைப் பிளக்கும். பாவம் ஒரு ஆசிரியை இரண்டு
வகுப்புகளைச் சமாளிப்பது ரொம்பக் கடினம். அதனால் யாராவது ஒரு மாணவியைக் கூப்பிட்டு
வகுப்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்வார்கள். வகுப்பிலேயே கொஞ்சம் உயரமாக இருக்கும்
மாணவியைத் தான் எப்போதுமே கூப்பிடுவார்கள்.
எனக்கு இந்தப் பதவி
மேல் எப்போதும் ஒரு கண். ஆனால் எந்த ஆசிரியையும் என்னைக் கூப்பிட மாட்டார்கள்.
குள்ளமாக, சோனியாக இருப்பேன். அதுவுமில்லாமல் முதல் நாள் கிடைத்த புது பெயர் ஒரு
காரணம். ஒருநாள் அதிசயமாக எனக்கு அந்தப் பதவி கிடைத்தது. நாங்கள் உட்கார்ந்திருந்த
ஹாலில் மூன்று வகுப்புகள். ஒருமுறை பக்கத்து வகுப்பிற்கு புதிதாக ஒரு ஆசிரியை வந்திருந்தார்.
எங்கள் வகுப்பு ஆசிரியை வரவில்லை. எல்லோரும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தோம். அந்த
ஆசிரியைக்கு வகுப்பு நடத்தவே முடியவில்லை. எங்களிடம் வந்தார். ‘யாரு இங்க வகுப்பு
பாத்துக்கறவங்க?’ வழக்கமாகப் பார்க்கும் பெண் வரவில்லை அன்று. உடனே நான் எழுந்து
நின்றேன். ‘நான் பார்த்துக்கறேன், டீச்சர்!’ சரியென்று சொல்லிவிட்டு அந்த ஆசிரியை
போய்விட்டார். ‘பேசாதீங்க, பேசாதீங்க....!’ ம்ஹூம்! என் வகுப்பு மாணவிகள் என்
சொல்லுக்குக் கட்டுப்பட்டால் தானே? சத்தம் இன்னும் அதிகமாயிற்று!
பக்கத்து
வகுப்பிற்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு வகுப்பிலிருந்து ஆசிரியை வெளியே
வந்தார், கோபமாக. ‘ஏண்டி! உங்களுக்கெல்லாம் அறிவில்லையா? ஒருமுறை சொன்னால்
தெரியாதா? ஏண்டி இத்தனை பேச்சு பேசறீங்க? உங்க டீச்சர் இல்லைன்னா இப்படி அடுத்த
வகுப்பு நடக்குதுங்குற அறிவு கூட இல்லாமல்
பேசுவீங்களா?’ அது யாரு வகுப்பை பார்த்துக் கொள்வது?’ என்று இரைந்து கொண்டே
என்னைத் திரும்பிப் பார்த்தார். ‘இவளா? இவளா உங்களையெல்லாம் பாத்துக்கறா?’ என்று
சொல்லிக்கொண்டே சிரிக்க ஆரம்பித்துவிட்டார். ‘இன்னும் குள்ளமா, சாதுவா வேற யாரும்
கிடைக்கலையா? அவ மூஞ்சியப் பார்த்தாலே கொழந்த மாதிரி இருக்கு. அவ உங்கள மாதிரி
பிசாசுங்களை பார்த்துக்க முடியுமா?’ என்று சொல்லிவிட்டு, ‘நீ போடி, போய் உன்
இடத்துல உட்கார்ந்துக்க’ என்று சொல்லிவிட்டு மாலதி என்கிற பெண்ணைக் கூப்பிட்டு, ‘வகுப்ப
பாத்துக்க. ஒரு துளி சத்தம் வந்தது உன் கண்ண நோண்டிடுவேன்...ஆமா!’ என்று எச்சரித்துவிட்டுப்
போனார். தலைவர் பதவி தானாகவும் வரவில்லை. நானாகத் தேடிக் கொண்டதும் சில நிமிடங்களில்
கைவிட்டுப் போய்விட்டது!
இசை ஆசிரியை (இவரது
பெயர் மறந்துவிட்டது – இவர் சொல்லிக் கொடுத்த பாடல்கள் இன்னும் நினைவிருக்கின்றன –
ஆச்சரியம், இல்லை?), எனது வகுப்பு ஆசிரியை கனகவல்லி இவர்களைத் தவிர எனக்குஹால்.
நன்றாக நினைவிருக்கும் இன்னொரு ஆசிரியை எங்கள் தையல் ஆசிரியை. எங்கள்
வகுப்பிற்குப் பக்கத்து வகுப்பு இவருடையதுதான். ‘ஏ! புள்ளே!, எந்திரி!’ என்பார்.
பள்ளியில் சேர்ந்த புதிதில் எனக்கு இந்த ஆசிரியை பேசுவதே புரியாது. அதுவும் இந்த ‘எந்திரி’
என்பது புரிய வெகுநாட்கள் ஆயிற்று. முதல் தடவை என்னைப் பார்த்துவிட்டு, ‘இது யாரு?
புது பொண்ணு? எந்திரி, நல்லாப் பாக்கலாம்’ என்று சொன்னபோது எனக்குப்
புரியவேயில்லை. பக்கத்தில் இருந்த பெண் ‘எந்திரிச்சு நில்லு. டீச்சர் உன்னைய
பாக்கணுமாம்’ என்றபோது எழுந்து நின்னேன். ‘...........?’ அதே கேள்வி அதே
தலையாட்டல். ‘உனக்கு தையல் எதுக்குடி, நீங்கல்லாம் படிக்கறதுக்குத்தான் லாயக்கு.
தையல் வருமா?’ ன்னு கேட்டார். ‘அம்மா நன்னா தைப்பா’ என்றேன். டீச்சருக்கு ரொம்ப
சிரிப்பு நான் பேசும் விதத்தைப் பார்த்து. ‘சரி, சரி, உக்காரு’ என்றார்.
எனக்கு ரொம்பவும்
பிடித்த வகுப்பு பாட்டு வகுப்பு மற்றும் தையல் வகுப்பு. விதம்விதமாக தையல்கள்
போடச் சொல்லிக் கொடுத்தவர் இவர். முதலில் கைக்குட்டைக்கு ஓரம் தைக்கச் சொல்லிக்
கொடுத்தார். ஹெம்மிங், ஓட்டுத் தையல், கெட்டித் தையல் என்று ஆரம்பித்து நிறைய
எம்ப்ராய்டரி தையல்களும் சொல்லிக் கொடுத்தார். கிராஸ் ஸ்டிச் – சும் இவரிடம் தான்
கற்றேன். கைகுட்டை ஓரங்களில் இழை எடுத்துவிட்டு அதை அழகாகத் தைக்கும் விதத்தையும்
இவர் சொல்லிக் கொடுத்தார். எனக்கு இந்தத் தையல் ரொம்பவும் பிடிக்கும். நிறைய
கைகுட்டைகளுக்கு இப்படி செய்து கொடுப்பேன். வீட்டிற்கு வருவோரிடம் என் அம்மா. ‘ரஜினி
கைக்குட்டை தைக்கக் கற்றுக் கொண்டு விட்டாள்’ என்று சொல்லும்போது அம்மா என்னை கேலி
செய்கிறாளா, புகழ்கிறாளா என்றே புரியாது!
அடுத்த பகுதியில்
வண்ணமயில்!