வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

தன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க

புத்தக மதிப்புரை 



வல்லமை இதழிற்காக எழுதிய புத்தக விமர்சனம் 

ஆங்கில மூலம்: ஸ்வராஜ் எழுதியவர்: அர்விந்த் கெஜ்ரிவால்
தமிழில் மொழிபெயர்ப்பு : கே.ஜி. ஜவர்லால்
பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்
விலை: ரூ. 80
பக்கங்கள் : 120
வெளியான ஆண்டு: 2012


ஆசிரியர் குறிப்பு:

தற்போது டெல்லியில் முதலமைச்சர் ஆக இருக்கும் திரு. அர்விந்த் கெஜ்ரிவால் எழுதிய ஸ்வராஜ் என்ற ஆங்கிலப்புத்தகத்தின் தமிழாக்கம் இந்த புத்தகம். தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் ‘இதயம் பேத்துகிறது’ என்கிற வலைத்தளத்தின் ஆசிரியர் திரு கே.ஜி. ஜவர்லால்.


2011 ஆம் ஆண்டு அண்ணா ஹசாரேயின் தலைமையில் ஊழலை எதிர்த்து திரண்ட அணியில் முக்கியப்பங்கு திரு அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு உண்டு. அதற்குப்பின் ஆம் ஆத்மி என்றொரு கட்சியை ஆரம்பித்து மிகக்குறைந்த காலத்தில் டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். தகவல் அறியும் சட்டத்தை அமல்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2006 இல் இவருக்கு ராமோன் மாக்ஸேஸே விருது வழங்கப்பட்டது.


‘நம் நாட்டில் குறை சொல்பவர்கள் அதிகம். குறைகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துச் சொல்பவர்கள் குறைவு. இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்ப்பதன் மூலம் என் சமூகக் கடமை ஒன்றை நிறைவேற்றியிருப்பதாக உணருகிறேன்’ என்கிறார் மொழிபெயர்ப்பாளர் திரு ஜவர்லால்.


‘நாளைய இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான திட்டம் இந்தப் புத்தகம். வேலையில்லா திண்டாட்டம், வன்முறை, ஊழல், பணவீக்கம், தீவிரவாதம், தீண்டாமை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண விழைபவர்களுக்கு இந்தப் புத்தகம் தூண்டுகோலாக அமையும்’ என்கிறார் இந்த புத்தகத்திற்கு முகவுரை எழுதியிருக்கும் திரு அண்ணா ஹசாரே.


சரி, புத்தகத்திற்குள் செல்லலாமா?
ஏன் இந்தப் புத்தகம்? என்று முதல் அத்தியாயத்தை  தொடங்கும் ஆசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல கேள்விகள் கேட்கிறார்.


நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய சமயங்களில்  எம்பி- க்களுக்கு பணத்தை கொடுத்து (horse riding) தங்களுக்கு சாதகமாக வோட்டுப் போடவைக்க முயலுகிறது. எம்பிக்கள் இப்படி விலைபோக ஆரம்பித்தால் நம்முடைய வாக்குகளுக்கு என்ன மரியாதை?


வருமான வரி ஏய்ப்பு செய்துவந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் பிடிபட்டபோது அதன் முக்கிய அதிகாரி கூறினார்: ‘இந்தியா ஏழை நாடு. உங்களுக்கு உதவவே நாங்கள் வந்துள்ளோம். எங்களுக்கு இப்படி தொந்திரவு கொடுத்தால், எங்களுடைய பலத்தை காட்டி உங்கள் நாடாளுமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளுவோம்!’ வெளிநாட்டு சக்திகள் நம் நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனவா?


போபால் விஷவாயு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தப்பிப்போக அரசியல்வாதிகளும், மூத்த தலைவர்களும் எவ்விதம் உதவினார்கள் என்று செய்திகளில் படித்தபோது, ஆசிரியரின் மனதில் எழுந்த கேள்விகள்: இந்தியா நம்பகமானவர்களின் கைகளில்தான் இருக்கிறதா? பத்திரமான வாழ்க்கையையும், நம்பிக்கையான எதிர்காலத்தையும் இதுபோன்ற அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்கலாமா?


நம் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்விகள் தாம் இவை.


இரும்பு கனிமச் சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்கள் டன் ஒன்றுக்கு ரூ 27 மட்டுமே ராயல்டி செலுத்துகின்றன. வெட்டி எடுத்த இரும்புக் கனிமத்தை டன் ஒன்றுக்கு ரூ 6000 விலைக்கு விற்கின்றன. வெட்டி எடுக்கவும் சுத்திகரிக்கவும் டன் ஒன்றுக்கு ரூ 300 ஆகிறது. நாட்டின் வளங்களை நேரடியாகக் கொள்ளை அடிப்பது அல்லவா இது?


இப்படிக் கேள்விகள் கேட்பதுடன் நிற்கவில்லை ஆசிரியர். பலமைல்கள் நெடுந்தூரம் பயணம் செய்து பலரிடமும் பேசி, ஆழ்ந்து ஆய்வு செய்திருப்பதுடன், இவற்றுக்கான விடைகளையும் தருகிறார் இந்தப் புத்தகத்தில்.


‘பிரச்னையின் ஆணிவேர் என்னவென்றால், ஜனநாயகம் என்று நாம் சொல்லும் அமைப்பில் மக்களுக்கு எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை! 120 கோடி மக்களை வாட்டி வதைக்கும் பிரச்னைகள் என்ன? அவர்களது தேவைகள் என்ன? இதையெல்லாம் தில்லியிலும், இதரத் தலைநகரங்களிலும் உட்கார்ந்து கொண்டு தீர்மானிக்கிறார்கள்.


இன்னொரு அநியாயமும் நம்நாட்டில் நடக்கிறது. அதாவது நமக்கு என்ன மாதிரியான சட்டங்கள் வேண்டும் என்று அரசு நம்மைக்கேட்பதில்லை. ஆனால் நீர், நிலம், காடுகள், கனிமவளங்கள் இவையெல்லாம் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன! சில சட்டங்கள் இயற்றப்படுவதற்குமுன் வெளிநாட்டு நிறுவனங்களுடனும், வெளிநாட்டு அரசுகளுடனும் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன! நமது நாட்டின் நீர்வளங்கள், கனிமவளங்கள் எல்லாம் எப்படி பறிபோகின்றன என்று உதாரணங்களுடன் சொல்லுகிறார் ஆசிரியர். விவசாயம் மட்டுமே தெரிந்த ஒருவரின் நிலம் பறிமுதல் செய்யப்படுவதால், வேறு தொழில் தெரியாத அவரது குடும்பமே அழிந்துபோகிறது.



இப்போதிருக்கும் பஞ்சாயத்து ராஜின் குறைபாடுகள் என்னென்ன என்று சொல்லும் அர்விந்த் அவற்றிற்கான தீர்வுகளையும் சொல்லுகிறார். மற்ற நாடுகளில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்று உதாரணங்களுடன் விளக்குகிறார். அமெரிக்காவில் மிடில் டௌன் என்ற இடத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாலை ஐந்து மணிக்கு மக்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அவர்களது கருத்துகளுக்கு ஏற்றவாறு அந்த ஊரின் நிர்வாகம் நடந்து கொள்ளுகிறது. அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தில் வால்மார்ட் நிறுவனம் தனது மையத்தை நிறுவ முயன்றபோது, அங்குள்ள சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்கிற காரணத்தை மக்கள் முன்வைத்ததால்  அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில்?



நம்நாட்டில் இருக்கும் நூறு கோடிப்பேர் எப்படி ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்க முடியும், சாத்தியமா? சாத்தியம் என்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு கிராமத்திலும் ஒட்டுமொத்த கிராமத்தின் ஒருங்கிணைந்த பிரதிநிதிகளைக் கொண்ட கிராம சபை அமைக்கப்பட வேண்டும். அந்த கிராமத்தின் முன்னேற்றத்துக்கு வேண்டிய திட்டங்களை கிராம மக்களைக் கலந்தாலோசித்து நிறைவேற்ற வேண்டும். இதுபோல ஒரு அமைப்பை (தன்னாட்சி) ஏற்படுத்தி ராலேகான் சித்தியில் ஏற்படுத்தி அந்த கிராமத்தின் அடையாளத்தையே மாற்றி இருக்கிறார் அண்ணா ஹசாரே. போபட்ராவ் பவார், ஹிவ்ரே பஸார் என்கிற கிராமத்தையும், தமிழ் நாட்டில் குத்தம்பாக்கம் என்கிற கிராமத்தை இளங்கோ என்கிற இளைஞரும் மாற்றி இருக்கிறார்கள்.


கிராமங்களில் கிராம சபை போல நகரங்களில் சமுதாய அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் சாதாரண ‘எப்படி இருக்கீங்க?’வில் தொடங்கவேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் பி.டி. ஷர்மா. தங்கது சொந்த விஷயங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு ஒவ்வொருகிடையிலும் நெருக்கம் வரவேண்டும். இது மெல்ல மெல்ல சமூக விஷயங்களுக்கும் இயற்கையாக திசை திரும்ப வேண்டும். மக்கள் ஒன்று கூட வேண்டும். ஒருவரோடு ஒருவர் பேச வேண்டும். ஒரு உறவு/நட்பு ஏற்பட்ட்விட்டாலே பேச்சின் திசை தானாக உள்ளூர் பிரச்னைகளையும், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளையும் நோக்கித் திரும்பும்.  வேற்றுமைகள் மறையும்.


‘நாட்டின் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால் நாம் இணைந்து செயல்பட வேண்டும்’ என்கிற வேண்டுகோளுடன் புத்தகத்தை முடிக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.



தற்போது திரு கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பலத்த விவாதங்களுக்கு ஆளாகியிருக்கின்றன. அவற்றையெல்லாம் சற்று நேரம் மறந்துவிட்டு, எந்தவிதமான முன்கூட்டிய எண்ணங்களுக்கும் இல்லாமல் இந்தப் புத்தகத்தை படித்துப் பாருங்கள். இந்தியாவின் வளம் நமது ஒருங்கிணைந்த கைகளில் என்று சொல்லும் இந்தப் புத்தகம் உங்களையும் கவரும். இவர் சொல்லும் தன்னாட்சிக்கு நீங்களும் வோட்டுப் போடுவீர்கள்!

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

டாலர் நகரம் - புத்தக மதிப்புரை

டாலர் நகரம்
எழுதியவர்: ஜோதிஜி
பதிப்பகம்: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம் 
விலை: ரூ. 190
பக்கங்கள் : 247
வெளியான ஆண்டு: 2013



வல்லமை இதழில் புத்தக மதிப்புரைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற மதிப்புரை 


ஆசிரியர் குறிப்பு:

கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘தேவியர் இல்லம்’ என்ற வலைப்பதிவில் தன் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லி ‘நான் இப்படித்தான்; என் எழுத்து இப்படித்தான்’ என்று முத்திரை பதித்த பதிவர் திரு ஜோதி கணேசன் என்னும் ஜோதிஜி. தனது மனைவியுடனும், 3 பெண்குழந்தைகளுடனும் (இவர்களே இவரது தேவியர்கள்) திருப்பூரில் வசிக்கிறார். 4தமிழ்மீடியா இணைய தளத்தில் இவர் எழுதி வந்த ‘டாலர் நகரம்’ கட்டுரைத் தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது இவரது முதல் புத்தகம். இவர் எழுதிய ‘ஈழம் வந்தார்கள் வென்றார்கள்’ சமீபத்தில் இ-புத்தகமாக வெளியிடப்பட்டு சுமார் 5,000 தரவிறக்கங்களை எட்டிப்பிடித்துள்ளது.

புத்தகம்: டாலர் நகரம்

டாலர் தேசம் என்று அமெரிக்காவைச் சொல்லுவது உண்டு. இது என்ன டாலர் நகரம்? இந்தியாவின் ஏற்றுமதியில் பல கோடி டாலர்களை பெறுவதில் பெரும்பங்கு வகிக்கும் திருப்பூரைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார், ஜோதிஜி. திருப்பூர் என்றால் உடனடியாக பனியன், ஜட்டிகள் என்று உள்ளாடைகள் நினைவுக்கு வரும்; அந்தக் காலத்தவர்களுக்கு திருப்பூர் குமரன் நினைவிற்கு வருவார். அந்தத் திருப்பூரின் இன்னொரு பக்கத்தை – தொழில் நகரம் என்று பக்கத்தை தனது டாலர் நகரம் மூலம் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில்.

ஒரு சாதாரண தொழிலாளியாக 1992 – இல் திருப்பூர் வந்த ஜோதிஜி இப்போது திருப்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொது மேலாளர் ஆக இருக்கிறார். தனது வாழ்க்கையை சொல்லும்போதே தான் கண்ட, இப்போது காணும் திருப்பூரின் வரலாற்றையும் பதிவு செய்கிறார்.  புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டும் வேறல்ல என்று புரிகிறது.

தொழில் வாழ்க்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிய போராட்டங்கள், சந்தித்த அவமானங்கள், தாண்டிய தூரங்கள், ஏறிய படிகள், சறுக்கிய இடங்கள் என்று பலவற்றையும் பேசும் ஜோதிஜி, கூடவே திருப்பூரின் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், அவற்றில் நிகழும் அரசியல்கள், இந்த ஊருக்கு வேலை தேடி வரும் ஆண், பெண், குழந்தைகளின் அவலங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிஜி என்கிற தனிமனிதர் மறைந்து திருப்பூர் மட்டுமே தெரிய ஆரம்பிக்கிறது. இந்த மாற்றம் மிகவும் இயல்பாக நடக்கிறபடியால் கடைசியில் நம் நினைவில் நிற்பது டாலர் நகரம் மட்டுமே.

நூல் என்பது ஆடையாக மாறுவதற்கு எத்தனை எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். ஒவ்வொரு துறைக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். நெய்யப்பட்ட துணி வண்ண வண்ண ஆடைகளாக உருமாறும் நேரம் என்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போல என்று சொல்லும் ஜோதிஜி, ஒவ்வொருதுறை பற்றியும் மிகவும் விரிவாகப் பேசுகிறார்.

திருப்பூர் என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் என்று தோன்றும். இங்கு வந்துவிட்டால் எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம் என்று வந்துவிடுகிறார்கள். ஆனால் உள்ளே இருப்பவர்களுக்குத்தான் உண்மை நிலை தெரியும். தொழிலாளிகளுக்கு உழைப்பு, உழைப்பு  என்று போதை ஏற்றும் உழைப்பு. ஆனால் உழைப்பிக்கேற்ற கூலி கிடைக்காது. பெண்களின் நிலைமையை என்னவென்று சொல்ல? ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நகரங்களில் நடக்கும் பாலியல் மீறல்கள் திருப்பூரிலும் உண்டு. இவற்றைத் தவிர ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஏற்றுமதி நிறுவனங்களில் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகளை கணக்கில் கொண்டு வரமுடியாது. குடும்பத்துடன் இந்த ஊருக்கு வருபவர்களுக்கு குடும்பம் முழுவதுக்கும் வேலை கிடைக்கும், ஆனால் வாழ்க்கை?

சமச்சீரற்ற முறையில் வளர்ந்திருக்கும் திருப்பூரின் திட்டமிடாத உள்கட்டமைப்புகள், அறிவிக்கப்படாத மின்தடைகள், மூடாத சாக்கடைக்குழிகள், முடிவே இல்லாமல் தொடரும் சாலை மராமத்து பணிகள், பெருநகரங்களின் சாபக்கேடான போக்குவரத்து நெரிசல், சாயப்பட்டறை முதலாளிகளின் சமூக பொறுப்பற்ற செயல்களால் விஷமாகிப் போன நொய்யலாறு என்று பல சீரழிவுகள் நம்மை திகைக்க வைக்கின்றன. வெளியில் பளபளக்கும் டாலர் நகரம் உள்ளே டல்லடிக்கிறது.

மையத் தொழிலான ஆடை தொழிலை சார்ந்த துணைத்தொழில்களை நம்பி இங்கு நிறையப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் முதலீடு முதல் கோடி ரூபாய் முதலீட்டிற்கும் இங்கு வழி உண்டு. டெல்லி முதல் கன்யாகுமரி வரையுள்ள இந்தியர்கள் ஒன்று கூடி வாழும் ஊர் திருப்பூர் என்பது இந்த ஊரின் தனிச் சிறப்பு. தனது அயராத உழைப்பு என்ற மூலதனத்தை வைத்துக்கொண்டு உயர்ந்த ‘கருணா என்கிற கூலி’ பற்றிச் சொல்லும் ஆசிரியர் அப்படி உயர்ந்த வாழ்க்கையைத் தங்களது கூடா நட்பால் தொலைத்தவர்களைப் பற்றியும் சொல்லுகிறார்.

‘உலகமய பொருளாதார பாதிப்பின் நேரடி உதாரணமாக திருப்பூரைச் சொல்லலாம். தினந்தோறும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பண மதிப்பு இங்குள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களையும் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. டாலர் மதிப்பு ஏறும் என்று பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் காத்திருந்து காத்திருந்து வங்கிக் கடன் வட்டி ஏறி கடைசியில் தற்கொலைக்கும் தயாராகிறார்கள் என்று செய்தி நம்மை கதி கலங்க வைக்கிறது. நிலையில்லாத டாலர் மதிப்பு மட்டுமல்ல; வங்கிகளின் கெடுபிடிகள், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம், பூரண ஆயுசுதான்’.

அந்நிய முதலீடு லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்களை முடக்கி விடும் அபாயம் உள்ளது. தமிழ் நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் பேரூராட்சி நகராட்சிகளுக்கு அடிப்படை வரி கூட கட்டாமல் இருந்து வருகின்றன. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இங்கு இருப்பதில்லை. 2012 ஆண்டு கடைசி பகுதியில் திருப்பூரில் ‘திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012’ என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக, மறைமுகமாக சம்மந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் தங்கள் குமுறல்களை கொந்தளிப்பாக அதிகாரவர்க்கத்தினரிடம் வெளிப்படுத்தினர்’.

உழைக்கத் தயாராக இருக்கும் திருப்பூர்வாசிகளுக்கு மத்திய அரசு என்ன திட்டம் தீட்டி இவர்களை காப்பாற்றபோகிறதோ? என்ற தனது ஆதங்கத்துடன் புத்தகத்தை முடிக்கிறார், ஜோதிஜி. ஒரு பரபரப்பான திரைப்படத்தைப் பார்த்த உணர்வுடன் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நமக்குள்ளும் இதே கேள்விதான் எழுகிறது.


26 அத்தியாயங்களில் ஒன்று கூட ‘போர்’ அடிப்பதில்லை என்பது இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். ஆனந்த விகடன் இயர் புக் 2014 தேர்ந்தெடுத்த சிறந்த எட்டு புத்தகங்களில் இந்தப் புத்தகமும் ஒன்று. இதற்கு மேல் நான் என்ன சொல்ல?