ஆழம் அக்டோபர் இதழில் நான் எழுதி வெளியான கட்டுரை.
இந்தியாவில் சாமியார்களுக்கும் பஞ்சமில்லை,சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. சமீபத்திய உதாரணம் அஸ்ரம் பாபு. போன வருடம் டெல்லியில் 23 வயது மாணவி ஒரு குழுவினரால் வன்புணர்வுக்கு ஆளானபோது இவர் உதிர்த்த முத்துக்கள் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது நினைவில் இருக்கலாம். ‘வெறும் ஐந்து, ஆறு பேர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல; அவர்களைப் போலவே அந்தப் பெண்ணும் குற்றவாளிதான். குற்றவாளிகளை அவள் ‘சகோதரர்களே என்னைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள்’ என்று கெஞ்சியிருக்க வேண்டும். இப்படிச் செய்திருந்தால் அவளது மானம் காப்பாற்றப்பட்டிருக்கும். இரு கை சேர்ந்தால்தானே சத்தம் வரும்?’
இத்துடன் விட்டாரா? இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கக்கூடாது என்றார். எப்படி நம் நாட்டில் வரதட்சணைக்கு எதிரான சட்டம் தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல பாலியல் பலாத்காரக் குற்றங்களுக்கு எதிரான சட்டங்களும் தவறான வழியில் பயன்படுத்த இது வழி வகுக்கும் என்றார்.
சர்ச்சை பலக்கவே, தான் சொன்னதை ஊடகங்கள் திரித்துக் கூறுவதாக சொல்லிப் பின் வாங்கியதுடன், தான் அப்படிச் சொல்லியதை நிரூபிப்பவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசு கொடுப்பதாகவும் அறிவித்தார்.
அஸ்ரம் மாட்டிக்கொண்ட சில சர்ச்சைகள்:
- முதன்முதலாக அஸ்ரம் பாபு சர்ச்சையில் மாட்டிக் கொண்டது 2008 ஆம் ஆண்டு. இரண்டு சிறுவர்கள் (அபிஷேக் மற்றும் தீபேஷ் வகேலா) இவரது மோடேரா ஆஸ்ரமத்தில் மரணமடைந்தனர். அவர்களுடைய அழுகிப்போன உடல்கள் நதிப்படுகையில் கண்டெடுக்கப்பட்டன.
- 2013 பிப்ரவரியில் 24 வயது ராகுல் பச்சோரி இவரது ஜபல்பூர் ஆஸ்ரமத்தில் மர்மமான முறையில் இறந்தார். தன் மகன் விஷமிட்டுக் கொல்லப்பட்டதாக இவரது தந்தை குற்றம் சாட்டினார்.
- அஸ்ரம் டிரஸ்ட்டின் முன்னாள் தலைவர் திரு ராஜூ சந்தக், அஸ்ரம் மற்றும் அவரது உதவியாட்கள் இருவர் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக 2009 ல் புகார் கொடுத்தார்.
- ஆசிரமத்துக்கென்று கொடுக்கப்பட்ட நிலத்தை சுற்றியிருந்த உபரி அரசு நிலத்தை அபகரித்தார்.
- சத்சங் நடத்த இடம் கொடுத்த மங்கல்ய கோயில் இடத்தை சத்சங் முடிந்த பின்னாலும் காலி செய்யவில்லை.
எல்லாவற்றையும் மீறி தற்போது எழுந்துள்ள புதிய சர்ச்சை, பாலியல் குற்றம் தொடர்பானது. இவரது ஜோத்பூர் ஆஸ்ரமத்தில் இருக்கும் 16 வயதுப் பெண் அஸ்ரம் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக காவல் துறையில் புகார் அளித்தார். வழக்கம்போல குருஜியின் தரப்பிலிருந்து ‘இதெல்லாம் புனையப்பட்டது’ என்ற பதில் முதலில் வந்தது. அந்தப் பெண்ணின் தரப்பிலிருந்து கமலா மார்க்கெட் காவல் நிலையத்தில் குருஜிக்கு எதிராக ஒரு புகார் கொடுக்கப்பட்டது.
‘அஸ்ரம் பாபு ஆகஸ்ட் 11 ஆம் தேதி ஜோத்பூரை விட்டுக் கிளம்பிவிட்டார். இந்தப் பெண் சொல்லும் சம்பவம் எப்படி ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடந்திருக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்புகிறார் ஆஸ்ரமத்தின் செய்தித் தொடர்பாளர் சுனில் வான்கடே. ‘ஜோத்பூரில் நடந்ததாகச் சொல்லப்படும் சம்பவத்துக்கு இந்தப் பெண் டெல்லியில் புகார் கொடுத்துள்ளார். ஏனெனில், அங்கு மட்டுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் காவல் துறையினரால் முதல் ஆய்வு அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. நாங்கள் அந்தப் பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறோம்.’
‘அஸ்ரம் பாபுவுக்கு எதிராக வழக்கைப் பதிவு செய்து புலனாய்வை ஓர் உதவி பெண் காவல்துறை ஆணையரிடம் ஒப்படைத்துள்ளோம்’ என்கிறார் ஜோத்பூர் காவல்துறை ஆணையர் பிஜு ஜார்ஜ் ஜோசப். புகார் தந்துள்ள பெண்ணுக்கு உரிய பாதுகாப்பை அளித்துள்ளதாகவும், மானாய் என்ற இடத்திலுள்ள குருஜியின் ஆஸ்ரமத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இந்தப் பெண் மத்தியப் பிரதேசம் சின்த்வராவில் அமைந்திருக்கும் அஸ்ரம் பாபுவின் குருகுலத்தில் கடந்த நான்கு வருடங்களாகப் படித்து வருகிறாள். உத்தரப் பிரதேசம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த இவள் தற்சமயம் 12 ஆம் வகுப்பில் படிக்கிறாள். கொஞ்ச நாள்களாகவே அவள் ஆரோக்கியம் சரியில்லை. இதை அவளது பெற்றோர் அஸ்ரம் பாபுவின் கவனத்துக்குக் கொண்டு வந்தபோது, அவளை ஜோத்பூருக்கு அழைத்து வருமாறு அவர்களிடம் கூறியிருக்கிறார். ஏதோ சடங்குகள் செய்ய வேண்டும் என்று சொல்லி அன்றிரவே பெற்றோர் முன்னிலையில் சில சடங்குகள் செய்திருக்கிறார். அடுத்தநாள், இன்னும் ஒரு சடங்கு செய்ய வேண்டும், அதற்கு அந்தப் பெண் மட்டுமே தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆகஸ்ட் 15 இரவு அவளைத் தனது குடிலுக்கு அழைத்துப் போய் பேயோட்டுவதாகச் சொல்லி அவளை இயற்கைக்கு விரோதமான பாலியல் தொடர்புக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பயந்துபோன அந்தப் பெண் முதலில் இந்த விஷயத்தை வெளியில் சொல்லவில்லை. ஆனால் அஸ்ரம் அவளை தன்னுடன் அகமதாபாத் வரச் சொன்னபோது, வீட்டுக்குச் சென்று, இரண்டு நாள்கள் கழித்து நடந்ததைக் கூறியிருக்கிறார்.
தனது புகாரில் ராம்லீலா மைதானத்தில் ஆகஸ்ட் 1820 தேதிகளில் நடக்கவிருந்த முகாமுக்குத் தன் தந்தை தன்னை கூட்டிக்கொண்டு குருஜியைப் பார்க்க வந்தபோது, குருஜி தங்களை சந்திக்காமலேயே போய்விட்டதாகவும் கூறியிருக்கிறாள். அதற்குப் பிறகுதான் அவளது தந்தை காவல் நிலையத்தை அணுகத் தீர்மானித்தார்.
ராஜஸ்தான் காவல்துறை இந்த வழக்கைப் பதிவு செய்து விசாரணை செய்யாது என்று கருதிய பெண்ணின் தந்தை டெல்லியில் வழக்கைப் பதிவு செய்திருக்கிறார். பிறகு ஜோத்பூருக்கு வழக்கு மாற்றப்பட்டது. டெல்லி காவல்துறை அந்தப் பெண்ணின் அறிக்கையை குற்றவியல் நடைமுறைக் குறியீடு பகுதி 164 இன் கீழ் பதிவு செய்திருக்கிறது. இந்திய சட்டக் குறியீடு 376 இன் கீழும், குழந்தைகள் பாலியல் குற்ற பாதுகாப்பு சட்டத்தில் பல்வேறு பகுதிகளின் கீழும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
கைது செய்ய வந்த காவல் துறையினரைச் சுமார் எட்டு மணிநேரம் காக்க வைத்திருக்கிறார் அஸ்ரம். தனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாகவும், இப்போது தன்னால் வெளியில் வரமுடியாது என்றும் கூறியிருக்கிறார். ஒருவழியாக நடு இரவுக்குப் பின் கைது செய்தனர்.
தற்சமயம் சிறை வாசம் அனுபவித்து வரும் 72 வயதாகும் அஸ்ரம், 1960 களில் தன்னுடைய சமய போதனைகளை ஆரம்பித்தார். சுமார் 200 ஆஸ்ரமங்கள் இந்தியா முழுக்க இருக்கின்றன. ‘சந்த் ஸ்ரீ அச்ரம்ஜி ஆஸ்ரம்’ நடத்தும் இணையதளத்தில் காணப்படும் விவரங்களின்படி இந்த ஆன்மிக குரு 1941 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தௌமல், மேகிபா சிருமலானி ஆகியோரின் நான்காவது பிள்ளையாகப் பிறந்தார். ஆசுமல் என்பது பூர்வாசிரமப் பெயர்.
இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானிலுள்ள சிந்த் மாவட்டத்திலிருந்து குஜராத்திலுள்ள அகமதாபாத் அருகில் இருக்கும் மணி நகருக்கு இவரது குடும்பம் குடி பெயர்ந்தது. தந்தையின் மரணத்துக்குப் பிறகு வாழ்வின் பொருளை அறிவதிலும் அதன் பின்னால் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடிப்பதிலும் இவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. உலக வாழ்க்கையை வெறுத்து விடுவாரோ என்று பயந்து லக்ஷ்மி தேவி என்ற பெண்ணை இவருக்கு வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்தனர். 1968 ஆம் ஆண்டு தனது குடும்பத்தை விட்டு விருந்தாவனத்துக்குச் சென்றார். அங்குள்ள ஆஸ்ரமத்தில் 70 நாள்கள் இருந்துவிட்டு, மவுண்ட் ஆபுவிலுள்ள குகைகளில் தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு அகமதாபாத் திரும்பி சபர்மதி நதிக்கரையில் ஆஸ்ரமம் நிறுவி, தன் உபதேசங்களை ஆரம்பித்தார். இவருக்கு நாராயண் பிரேம் சாய் என்று ஒரு பிள்ளையும், பாரதி தேவி என்றொரு பெண்ணும் இருக்கிறார்கள். இவரது பிள்ளையும் ஓர் ஆன்மிக குரு.
எல்லாச் சாமியார்களுக்கும் இருக்கும் எண்ணிலடங்கா பக்தர்களைப் போல இவருக்கும் உண்டு. இவரைக் கைது செய்தது தப்பு, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இவர்கள் கோஷம் போடுகிறார்கள்.
குரு பக்தி என்ற பெயரில் இத்தகையவர்கள் வளர்த்து வரும் குருட்டு நம்பிக்கையை முதலீடாகக் கொண்டுதான் அஸ்ரம் பாபுக்கள் தங்கள் வியாபாரத்தை நடத்துகிறார்கள்.