தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில்
மின்வெட்டு, மின்பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு
போன்ற வார்த்தை பயன்பாட்டை அடிக்கடி காணமுடியும்.
மின்வெட்டால் மக்கள் படும் அவதியை சொல்லி தெரிய
வேண்டியதில்லை. தமிழகத்தின் அரசியலை நிர்ணயிக்கும் அளவுக்கு மின்வெட்டு பிரச்னை
தலைத்தூக்கியிருக்கும் நிலையில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முனைந்திருக்கிறார் ஓசூர்
நகரில் இயங்கிவரும் குரோமோர் உயிரிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் திரு என்.பாரதி.
இவர் கண்டுபிடித்திருக்கும் பீமா என்ற மூங்கில், மின்
உற்பத்தியில் உயிரி எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
இது குறித்து திரு பாரதி கூறியது:
நான்கு ஆண்டுகாலம் கடுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்டு பீமா
என்ற மூங்கில் வகையைக் கண்டுபிடித்துள்ளேன். வழக்கமான மூங்கிலைக் காட்டிலும் இது
மாறுபட்டது. முதல் 6 மாதங்கள் வரை 6 அங்குலம் வளரும்.
அதன் பிறகு பீமா மூங்கில்,
2 ஆண்டுகளுக்கு
ஒருநாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை அடி உயரம் வளரும்.
சூரியஒளி உதவியுடன் வளரும் இவ்வகை மூங்கில், கரியமிலவாயுவை
அதிகளவில் உறிஞ்சிக்கொண்டு,
மனிதன் சுவாசிக்க
உதவும் பிராணவாயுவை சுற்றுச்சூழலில் அதிகளவில் வெளியேற்றுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இருப்பது தவிர, நவநாகரீக
வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும் பீமா
மூங்கிலின் பங்கு மகத்தானது.
ஒரு ஏக்கரில் ஆயிரம் பீமா மூங்கில் செடிகளை நடலாம். 2 ஆண்டுகள்
கழித்து 40 டன் மூங்கில்
கிடைக்கும். ஒருமணி நேரத்திற்கு விறகை எரியூட்டினால் மின்சாரம் தயாரிக்கலாம். அதாவது
ஒருகிலோ மூங்கிலில் ஒருயூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். மின் பற்றாக் குறையால் தவிக்கும் இந்தியாவில்
கிராமந்தோறும் மூங்கில் பயிரிட்டால் அடுத்த 2 ஆண்டுகளில் நமது நாடு மின் தேவையில் தன்னிறைவு பெறும்.
கிராமந்தோறும் 200 ஏக்கரில் மூங்கில் விளைவித்தால், ஒருமணி
நேரத்திற்கு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். அப்படியானால், ஆண்டின் 52 வாரங்களில் 7 ஆயிரம் மெகாவாட்
முதல் 8 ஆயிரம் மெகாவாட்
மின்சாரம் உற்பத்தியாகும்.வழக்கமாக ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு ரூ.5.40 ஆகிறது. ஆனால்
மூங்கில் விறகில் தயாராகும் மின்சாரத்தின் அடக்கவிலை ரூ.1.50 மட்டுமே. மாற்று
எரிசக்திக்காக ஏங்கும் இந்தியாவில் மாற்று சிந்தனையால் உருவானதுதான் பீமா
மூங்கில். மூங்கில் விறகால் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழலுக்கும்
பாதிப்பில்லை, மின் தேவையிலும்
தன்னிறைவு அடையமுடியும்.
ஒரு ஏக்கரில் மூங்கில் பயிரிட்டால் ஆண்டுக்கு ஒருலட்சம்
ரூபாய் வருவாய் ஈட்டமுடியும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு, கிராம
பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். இது கனவு போல தோன்றினாலும், நடைமுறை
சாத்தியமானது என்பதை இந்தியா தவிர, தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிரூபித்துள்ளேன்.
கடந்த 8 ஆண்டுகளில் இந்நாடுகளில் 14 லட்சம் பீமா மூங்கில் செடிகளை நட்டுள்ளோம். இந்தியாவில்
மட்டும் 1.5 லட்சம்
மரக்கன்றுகளை விநியோகித்துள்ளேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மூங்கில் மரச்செடி தவிர, இதனை
பயிடுவதற்கான முறை மற்றும் அறுவடை தொடர்பான பயிற்சியை அளிக்கிறோம். தரிசுநிலம், வறண்டவானிலை
போன்ற எந்த இயல்புள்ள சூழலிலும் பீமா மூங்கில் வளமாக வளரும். மூங்கில் பயிருக்கு
உரம், ஊட்டச்சத்து, பாசனம் அவசியம்.
வழக்கமாக ஒருடன் மரவிறகு ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மூங்கில் விறகு
ஒருடன் ரூ.800க்கு விற்பனை
செய்யப்படுகிறது. இதனால் மின் உற்பத்திக்கு ஆகும் செலவு குறைகிறது. விவசாயிக்கும்
உற்பத்திச்செலவு கிடைத்துவிடும். இதன்விளைவாக ஒருஏக்கர் நிலத்தில் மூங்கில்
பயிரிட்டால் ஓராண்டில் விவசாயிகள் ஒருலட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
தமிழகத்தில் இயங்கிவரும் 12 சர்க்கரை ஆலைகளில் மூங்கில் விறகு மற்றும்
கரும்புச் சக்கை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெள்ளோட்டமாக, 15 மாவட்டங்களில்
2 ஆயிரம் ஏக்கரில்
பீமா மூங்கிலை பயிரிடுமாறு தமிழக அரசு எங்களை கேட்டுக்கொண்டுள்ளது.
இதேபோல, கர்நாடகத்திலும் பீமா மூங்கில் பயிரிடுவதற்கு
முக்கியத்துவம் அளிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.புதுப்பிக்கத்தக்க
எரிசக்திக்கு ஊக்கம் அளிக்க திட்டமிட்டுள்ள இந்திய அரசு, உயிரி எரிசக்தி
(எனர்ஜி பிளான்டேஷன்) என்ற திட்டத்தை வகுத்துள்ளது.
விறகு மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுவதை
ஊக்குவிப்பதற்காக மத்திய திட்டக்குழு உயிரி எரிசக்திக்கான துணைக்குழுவை
அமைத்துள்ளது. அதில் என்னையும் உறுப்பினராக சேர்த்துள்ளனர்.
எதிர்வரும் காலத்தில் உயிரி எரிசக்தி பிரபலமடையும் என்ற
நம்பிக்கை உள்ளது. அதில் பீமா மூங்கில் முக்கியப் பங்காற்றும். இந்தியாவின் மின்
தேவைக்கு மூங்கில் விறகின் பங்கு மகத்தானதாக அமையும்” என்றார் பாரதி.
தகவல் நன்றி: திரு அனந்தநாராயணன்