புதன், 24 ஜூலை, 2013

ஒரு டன் மூங்கிலில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம்!





தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மின்வெட்டு, மின்பற்றாக்குறை, மின் தட்டுப்பாடு போன்ற வார்த்தை பயன்பாட்டை அடிக்கடி காணமுடியும்.


மின்வெட்டால் மக்கள் படும் அவதியை சொல்லி தெரிய வேண்டியதில்லை. தமிழகத்தின் அரசியலை நிர்ணயிக்கும் அளவுக்கு மின்வெட்டு பிரச்னை தலைத்தூக்கியிருக்கும் நிலையில், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முனைந்திருக்கிறார் ஓசூர் நகரில் இயங்கிவரும் குரோமோர் உயிரிநுட்ப நிறுவனத்தின் இயக்குநர் திரு என்.பாரதி.


இவர் கண்டுபிடித்திருக்கும் பீமா என்ற மூங்கில், மின் உற்பத்தியில் உயிரி எரிபொருளாகப் பயன்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.


இது குறித்து திரு பாரதி  கூறியது:
நான்கு ஆண்டுகாலம் கடுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்டு பீமா என்ற மூங்கில் வகையைக் கண்டுபிடித்துள்ளேன். வழக்கமான மூங்கிலைக் காட்டிலும் இது மாறுபட்டது. முதல் 6 மாதங்கள் வரை 6 அங்குலம் வளரும். அதன் பிறகு பீமா மூங்கில், 2 ஆண்டுகளுக்கு ஒருநாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை அடி உயரம் வளரும்.


சூரியஒளி உதவியுடன் வளரும் இவ்வகை மூங்கில், கரியமிலவாயுவை அதிகளவில் உறிஞ்சிக்கொண்டு, மனிதன் சுவாசிக்க உதவும் பிராணவாயுவை சுற்றுச்சூழலில் அதிகளவில் வெளியேற்றுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இருப்பது தவிர, நவநாகரீக வாழ்க்கைக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும் பீமா மூங்கிலின் பங்கு மகத்தானது.


ஒரு ஏக்கரில் ஆயிரம் பீமா மூங்கில் செடிகளை நடலாம். 2 ஆண்டுகள் கழித்து 40 டன் மூங்கில் கிடைக்கும். ஒருமணி நேரத்திற்கு விறகை எரியூட்டினால் மின்சாரம் தயாரிக்கலாம். அதாவது ஒருகிலோ மூங்கிலில் ஒருயூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். மின் பற்றாக் குறையால் தவிக்கும் இந்தியாவில் கிராமந்தோறும் மூங்கில் பயிரிட்டால் அடுத்த 2 ஆண்டுகளில் நமது நாடு மின் தேவையில் தன்னிறைவு பெறும்.


கிராமந்தோறும் 200 ஏக்கரில் மூங்கில் விளைவித்தால், ஒருமணி நேரத்திற்கு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். அப்படியானால், ஆண்டின் 52 வாரங்களில் 7 ஆயிரம் மெகாவாட் முதல் 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும்.வழக்கமாக ஒரு யூனிட் மின்சார உற்பத்திக்கு ரூ.5.40 ஆகிறது. ஆனால் மூங்கில் விறகில் தயாராகும் மின்சாரத்தின் அடக்கவிலை ரூ.1.50 மட்டுமே. மாற்று எரிசக்திக்காக ஏங்கும் இந்தியாவில் மாற்று சிந்தனையால் உருவானதுதான் பீமா மூங்கில். மூங்கில் விறகால் தயாரிக்கப்படும் மின் உற்பத்தியால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லை, மின் தேவையிலும் தன்னிறைவு அடையமுடியும்.


ஒரு ஏக்கரில் மூங்கில் பயிரிட்டால் ஆண்டுக்கு ஒருலட்சம் ரூபாய் வருவாய் ஈட்டமுடியும். விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதோடு, கிராம பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். இது கனவு போல தோன்றினாலும், நடைமுறை சாத்தியமானது என்பதை இந்தியா தவிர, தென் ஆப்பிரிக்கா, மொசாம்பிக், தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நிரூபித்துள்ளேன்.


கடந்த 8 ஆண்டுகளில் இந்நாடுகளில் 14 லட்சம் பீமா மூங்கில் செடிகளை நட்டுள்ளோம். இந்தியாவில் மட்டும் 1.5 லட்சம் மரக்கன்றுகளை விநியோகித்துள்ளேன். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. மூங்கில் மரச்செடி தவிர, இதனை பயிடுவதற்கான முறை மற்றும் அறுவடை தொடர்பான பயிற்சியை அளிக்கிறோம். தரிசுநிலம், வறண்டவானிலை போன்ற எந்த இயல்புள்ள சூழலிலும் பீமா மூங்கில் வளமாக வளரும். மூங்கில் பயிருக்கு உரம், ஊட்டச்சத்து, பாசனம் அவசியம்.


வழக்கமாக ஒருடன் மரவிறகு ரூ.3 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மூங்கில் விறகு ஒருடன் ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மின் உற்பத்திக்கு ஆகும் செலவு குறைகிறது. விவசாயிக்கும் உற்பத்திச்செலவு கிடைத்துவிடும். இதன்விளைவாக ஒருஏக்கர் நிலத்தில் மூங்கில் பயிரிட்டால் ஓராண்டில் விவசாயிகள் ஒருலட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.



தமிழகத்தில் இயங்கிவரும் 12 சர்க்கரை ஆலைகளில் மூங்கில் விறகு மற்றும் கரும்புச் சக்கை மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெள்ளோட்டமாக, 15 மாவட்டங்களில் 
2 ஆயிரம் ஏக்கரில் பீமா மூங்கிலை பயிரிடுமாறு தமிழக அரசு எங்களை கேட்டுக்கொண்டுள்ளது.



இதேபோல, கர்நாடகத்திலும் பீமா மூங்கில் பயிரிடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஊக்கம் அளிக்க திட்டமிட்டுள்ள இந்திய அரசு, உயிரி எரிசக்தி (எனர்ஜி பிளான்டேஷன்) என்ற திட்டத்தை வகுத்துள்ளது.



விறகு மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுவதை ஊக்குவிப்பதற்காக மத்திய திட்டக்குழு உயிரி எரிசக்திக்கான துணைக்குழுவை அமைத்துள்ளது. அதில் என்னையும் உறுப்பினராக சேர்த்துள்ளனர்.



எதிர்வரும் காலத்தில் உயிரி எரிசக்தி பிரபலமடையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதில் பீமா மூங்கில் முக்கியப் பங்காற்றும். இந்தியாவின் மின் தேவைக்கு மூங்கில் விறகின் பங்கு மகத்தானதாக அமையும் என்றார் பாரதி.


தகவல் நன்றி: திரு அனந்தநாராயணன்





செவ்வாய், 16 ஜூலை, 2013

ஒரு மாற்றத்தின் கதை - அருணா ராய்


ஜூலை 'ஆழம்' இதழில் நான் எழுதி வெளிவந்த திருமதி அருணா ராய் பற்றிய கட்டுரை.

‘எனக்கு டாக்டர் மன்மோகன்சிங் மீது எந்த வருத்தமும் இல்லை; எனது வருத்தமெல்லாம் அரசாங்கத்தின் மீதும், மிகவும் முக்கியமான ஒரு சட்டத்தை நிறைவேற்றமுடியாத நாடாளுமன்றத்தின் மீதும்தான்!’ கடந்த மாதம் தேசிய ஆலோசனைக் குழுவிலிருந்து ராஜினாமா செய்திருக்கும் சமூக ஆர்வலர் அருணா ராய் தனது செயலுக்கு அளித்திருக்கும் விளக்கம் இது.
உணவுப் பாதுகாப்பு,  ஓய்வூதியம் போன்றவற்றுக்கு அரசு தேவையான முக்கியத்துவம் கொடுக்காதது வருத்தமளிக்கிறது என்கிறார் அருணா ராய். ‘இந்த நாட்டில் 60% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். பசியால் வாடும் பல லட்சம் ஏழை மக்களைப் பார்த்து அக்கறைப்படாமல் வேறெதற்கோ முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அமைப்பைப் பார்த்து வருத்தமாக இருக்கிறது.’
கடந்த ஒரு வருடமாகவே தேசிய ஆலோசனைக் குழுவின் நடவடிக்கைகளை விமரிசித்து வந்த அருணா ராயின் பதவிக்காலம் மே 31 அன்று முடிவடைவதாக இருந்தது.  அதனை நீட்டிக்கவேண்டாம் என்று சோனியா காந்தியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய ஆலோசனை குழுவிலிருந்து (என்ஏசி) அருணா ராய் விலகுவது இது முதல் முறை அல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதல் முறையாக அரசு அமைத்தபோது இந்தக் ஆலோசனைக் குழுவில் (2004 &2006) அங்கத்தினராக இருந்த அருணா, தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத சட்டம் (MGNREGA) ஆகியவற்றில் குடிமக்களின் உரிமைகளை உறுதிசெய்ய முக்கியப் பங்காற்றியிருக்கிறார். குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் கொள்கைகளைப் பற்றிய குழுவின் பரிந்துரையை அரசு ஏற்காத காரணத்தால் 2006 ஆம் ஆண்டு அதிலிருந்து விலகினார். ஆனால் ஐ.மு.கூ. இரண்டாம் முறையாக பதவி ஏற்றபோது இந்தக் குழுவின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பதவி ஏற்றார்.

மீதி கட்டுரை படிக்க: மாற்றத்தின் கதை 

சனி, 13 ஜூலை, 2013

இயற்கையின் கொடை - பழங்கள்






இயற்கை நமக்களித்த கொடைகளுள் பழங்களும் ஒன்று. பழங்களை சமைக்காத உணவு என்பர் நம் முன்னோர்கள். உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், புத்துணர்வையும் ஒருசேர தரவல்லது பழங்களே. பழங்களை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. தினமும் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வந்தால் நீண்ட ஆரோக்கியம் பெறலாம். நோயுற்றவர்கள் உடல் நலம் தேற மருத்துவர்கள் பழங்களையே பரிந்துரை செய்வார்கள்.

பழங்களை சாறு எடுத்து அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவது தான் நல்லது. அல்லது சாறு எடுத்த உடனேயே அருந்துவது நல்லது. அப்போது தான் அதிலுள்ள நார்ச்சத்துக்கள் அழியாமல் உடலுக்குக் கிடைக்கும். இந்த நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைத் தீர்க்கும். சீரண சக்தியை அதிகரிக்கும். மேலும் சில வைட்டமின் சத்துக்கள், தாதுக்கள் உடலுக்கு நிறைய கிடைக்கும்.பழங்களில் பல நிறங்கள் உள்ளன. அனைத்துப் பழங்களும் சத்துக்கள் நிறைந்தவை. இப்பழங்களின் நிறத்துக்குத் தகுந்தவாறு அதன் சத்துக்கள் இருக்கின்றன.சிவப்பு நிறப் பழங்கள்கண்ணைக் கவரும் பழங்கள்தான்

சிவப்பு நிறப் பழங்கள்

இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள்,பிளம்ஸ்,செவ்வாழை,மாதுளம்பழம்,இலந்தை,செர்ரி,போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும்.வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது.இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்புப் பொருட்களை கரைக்கும் குணமுடையது. சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து மென்மையடையச் செய்யும். நரம்புகளுக்கு ஊக்கத்தைக் கொடுத்து மூளை நரம்புகளுக்கு அதிக பலம் கொடுக்கும்.மனம் அழுத்தத்தைப் போக்கும் டென்ஷனைக் குறைக்கும். நினைவாற்றலைத் தூண்டும்.கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி, சிவப்பு நிறப் பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. எலும்பு மஜ்ஜைகளைப் பலப்படுத்துகிறது. இதயத்திற்கு சிறந்த டானிக்காக இந்த சிவப்பு நிறப் பழங்கள் விளங்குகின்றன.

மஞ்சள் நிறப் பழங்கள்

எலுமிச்சை, பப்பாளி, வாழைப்பழம், அன்னாசிப் பழம் போன்றவை மஞ்சள் நிறப் பழங்களில் அடங்கும்.மஞ்சள் நிறப்பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும் இரத்தம் சுத்தமடையும்.பொதுவாக மஞ்சள் நிறப் பழங்கள் எல்லோரும் சாப்பிடலாம். இது நரம்புத் தளர்வைப் போக்கும். மயக்கமுள்ளவர்களுக்கு உடனே உணர்வை உண்டாக்கும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடல் புண்களை ஆற்றும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். கண் பார்வையையைத் தெளிவுபடுத்தும். வாழைப்பழம் - பொதுவாக கை கால் நடுக்கம், உதறல் போன்றவற்றைத் தடுக்கும் தன்மை கொண்டது. குடற்புண், வாய்நாற்றத்தை நீக்கும். அஜீரணத்தைக் குறைக்கும். கண் பார்வையைத் தெளிவாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். முகப்பொலிவு கொடுக்கும். பெண்களுக்கு கழுத்துப்பகுதி, முகம், கை கால் முட்டிகளில் ஏற்படும் கரும்படலத்தைப் போக்கும். ரத்த ஓட்டத்தைச் சீர்படுத்தும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும், சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும். இது ஒரு கிருமி நாசினி.

பச்சை நிறப் பழங்கள்

பச்சை திராட்சை, பச்சை ஆப்பிள், சீத்தாப்பழம், கொய்யா, பலாப்பழம், பேரிக்காய் போன்றவை அடங்கும் .இப்பழங்கள் காய்கறிகளை ஒத்து இருப்பதால் அவற்றில் உள்ள சத்துக்கள் போல் இவ்வகைப் பழங்களிலும் உள்ளன. உடலின் வளர்சிதை மாற்றங்களில் இத்தகைய பச்சை நிறப் பழங்கள் மிகுந்த பங்களிக்கின்றன.மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பச்சை நிறப் பழங்களை அதிகம் உட்கொண்டால் இளைத்த உடல் எளிதில் தேறும்.














ஆரஞ்சு நிறப் பழங்கள்

மாம்பழம், ஆரஞ்சு, ஸ்டார் பழம் போன்றவை ஆரஞ்சு நிறப் பழங்களுள் அடங்கும்.உடலுக்கு சக்தியைக் கொடுத்து ஊக்கம் அளிக்கின்றன. இவற்றில் வைட்மின் பி3, சி, டி, இ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரஞ்சு நிறப் பழங்களில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளது. இது மன அழுத்தத்தைப் போக்கக்கூடியது. இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. சீரண சக்தியை அதிகரிக்கிறது. நோய் எதிர்பப் சக்தியைத் தூண்டுகிறது. கண்பார்வைக் கோளாறுகளை நீக்குகிறது. இதயத்தைப் பலப்படுத்தி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. புற்றுநோய் வருவதைத் தடுக்கும்.

நீல நிறப் பழங்கள்

நீலத் திராட்சை, நாவல்பழம், நீல பிளம்ஸ் போன்றவை அடங்கும். மனிதனுக்கு உற்சாகத்தைக் கொடுக்கக்கூடிய பழங்கள் நீல நிறப் பழங்களாகும். துவர்ப்பு சுவை மிகுந்ததாக இருக்கும். இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மூளையின செல்களை தூண்டி புத்துணர்வு பெறச் செய்கிறது.தொண்டைக்கம்மல், வறட்டு இருமலைப் போக்கும். தலைவலி, தலையில் நீர்க் கோர்வையைப் போக்கும். ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் உகந்த மருந்தாகும். நுரையீரலைப் பலப்படுத்தி சுவாசத்தை எளிதாக்கும். இரத்தம் உறைவதை துரிதப் படுத்தும்.

மண் நிற பழங்கள்

சப்போட்டா பழம், விளாம்பழம் இதில் அடங்கும்.இது உடலுக்கு ஊக்கமளிக்கும். கொழுப்புச் சத்தை அதிகரிக்கும். சீரண சக்தியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். குடற்புண்களை ஆற்றும். வாய்ப்புண், வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.


இயற்கை நமக்களித்த வரங்கள் இந்தப் பழ வகைகள். இவற்றை உண்டு ஆரோக்கியமாக இருப்போம். 

திங்கள், 24 ஜூன், 2013

குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை



இந்தியாவையே உலுக்கிய டெல்லி இளம் பெண் பாலியல் பலாத்காரச் சம்பவம் நிகழ்ந்த மறுநாள் ஒரு மூன்று வயதுச் சிறுமி பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவளது ஆடை முழுவதும் ரத்தமும் வாந்தியும் சிதறியிருந்தன. அவள் தந்தை ககன் ஷர்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2003ல் கொல்கத்தாவிலிருந்து மேற்கு தில்லியில் உள்ள ஒரு சேரிப் பகுதிக்கு சற்று மேலான வாழ்க்கைக்காக குடி பெயர்ந்தவர். என்ன ஆச்சு என்று விசாரித்தபோது அந்தச் சிறுமி தட்டுத்தடுமாறி தனக்கு நேர்ந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்.

ஆழம் பத்திரிகை ஜூன் இதழில் வெளிவந்த எனது கட்டுரை இணைப்பைத் தொடர்ந்து படிக்க 



இந்தக் கட்டுரையின் எடிட் செய்யப்படாத பகுதிகள்:





இந்தக் கட்டுரைகளைப் படித்த பின் இவையெல்லாம் எங்கோ நடப்பவை என்று அலட்சியப் படுத்த வேண்டாம், தயவு செய்து. வெளியில் மட்டுமல்ல; வீட்டிலும் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என புரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு புரியும் வகையில் பேசுங்கள். அவர்களின் பாதுகாப்பிற்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதையுங்கள்.




வெள்ளி, 7 ஜூன், 2013

இரும்புப் பெண்மணி



இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமரும், இரும்புப் பெண்மணியுமான மார்கரெட் தாட்சர் 8 ஏப்ரல் 2013 அன்று மரணமடைந்தார். சில காலமாகவே அவர் அல்ஜீமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது இறுதிக் கணங்கள் அமைதியாகக் கழிந்தன என்று அவரது மகன் மற்றும் மகள் அவரது மரணம் பற்றிய தங்களது அறிக்கையில் கூறியிருந்தனர்.  ஆனால் அவருடைய ஆட்சிக்காலம் அமைதியாக இருந்திருக்கவில்லை.
13 அக்டோபர் 1925 அன்று மார்கரெட் ஹில்டா ராபர்ட்ஸ் என்ற பெயரில் இங்கிலாந்து நாட்டில் கிராந்தம் என்ற ஊரில் பிறந்து அந்நாட்டின் பிரதமராக தொடர்ச்சியாக மூன்று முறை (1979 &1990)  இருந்தவர் மார்கரெட் தாட்சர். பத்தாண்டுகளுக்கும் மேலாக கன்செர்வேடிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்று நவீன இங்கிலாந்தின் சரித்திரத்தில் குழப்பம் மிகுந்த, கலவரம் நிறைந்த காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்த, முரண்பாடுகள் நிறைந்த தலைவர் இவர்.

ஆழம் பத்திரிகை மே மாத இதழில் வந்த எனது இந்தக் கட்டுரையை படிக்க: 

வியாழன், 6 ஜூன், 2013

1 பில்லியன் எழுச்சி



ரோஜா, கரடி பொம்மை, ஜிகினா வாழ்த்து அட்டை போன்ற எதுவும் இல்லாமல் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்குக் குரல் கொடுக்கும் தினமாக இந்த ஆண்டு காதலர் தினம் அமைந்து விட்டது. பெண்-களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகளுக்கு முடிவு கட்டவும், ஆண், பெண் பாகுபாடுகளைக் களைந்து இருவருக்கும் சமஉரிமை வேண்டும் என்று வலியுறுத்தவும் நடந்த இந்த நிகழ்வு ‘ஒன் பில்லியன் ரைஸிங்’ என்ற உலகம் தழுவிய பிரசாரத்தின் ஒரு பகுதி.
ஏன் இந்தப் பெயர்? ஒரு பில்லியன் (100 கோடி) பெண்கள் தங்களது வாழ்வில் பாலியில் வன்-முறைக்கோ அல்லது வேறு விதமான வன்முறை-களுக்கோ ஆளாகிறார்கள் என்னும் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை நினைவுபடுத்தவும், இந்தப் பெண்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கவும், பெண்களின் ஒற்றுமையையும், பலத்தையும் உலகுக்கு நிரூபிக்-கவும் இந்தப் பெயரை வைத்துள்ளதாக இந்த இயக்கத்தை ஆரம்பித்த ஈவ் என்ஸ்லர் கூறுகிறார். உலகெங்கும் உள்ள ஒரு கோடி பெண்கள் சேர்ந்து தங்கள் ஒட்டுமொத்த வலிமையைக் காட்ட நடனம் ஆடவேண்டும் என்பதற்காகவே இந்த அறைகூவல் என்கிறார் இவர். பெண்களுக்கு எதிரான வன்முறை-களுக்கு ஒரு முடிவு கட்டுவோம் என்று இந்த நிகழ்ச்சி-யில் கலந்துகொண்டவர்கள் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

செப்டெம்பர் 20, 2012 அன்று 160 நாடுகளிலிருந்து வந்திருந்த மக்கள் பிரதிநிதிகள் இந்தப் பிரசாரத்தில் பங்கு கொள்வதாக கையெழுத்திட்டனர். இந்த வருடம் பிப்ரவரி 14 அன்று 190 நாடுகளில் ஊர்வலங்-கள் நடைபெற்றன. பொதுமக்களுடன் பல்வேறு துறை-களைச் சார்ந்த பிரபலங்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், மகளிர் அமைப்புகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பிரகடனப்படுத்-தினார்கள்.
டில்லியில் இந்த நிகழ்ச்சி காதலர் தினத்தன்று பார்லிமென்ட் ரோட்டில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடந்தது. டில்லியிலுள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி, மிராண்டா ஹவுஸ் மற்றும் கமலா நேரு கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் வழங்கினர். தொடர்ந்து, டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளின் நடன நிகழ்ச்சி-களும் நடந்தன.
சென்னை மெரினா கடற்கரையில் ஒன் பில்லியன் ரைசிங் நிகழ்ச்சியையொட்டி, பெண்கள் கலந்து கொள்ளும் மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்-பட்டது. ‘இந்த எழுச்சி ஆண்களுக்கு எதிரானது அல்ல; பெண்ணியம் பேசவோ, ஆண்களை மட்டம் தட்டவோ இங்கு கூடவில்லை. இருபாலாருக்கு-மிடையே சமத்துவம் இருக்க வேண்டும் என்பதே நாங்கள் சொல்லும் செய்தி,’ என்று வந்திருந்த பிரபலங்க-ள் தெரிவித்தனர்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ஒன் பில்லியன் எழுச்சி தொடர்பான நாடகங்கள், நடனங்கள், ஃபிளாஷ் மாப் (FLASH MOB) என்ற திடீர் நடனங்-கள் ஆகியவை நடைபெற்றன. தெற்காசியாவுக்கான ஒன் பில்லியன் ரைசிங் நிகழ்ச்சிப் பொறுப்பாளர் கம்லா பாசின், இந்திய சிறுமிகள் மற்றும் பெண்கள்மீதான வன்முறைக்கு எதிரான சுதந்தரப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து சுதந்தரம் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு தலாய் லாமா, பூடான் ராணி சங்கே சோடன் வாங்சக் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

சமீபத்தில் புது தில்லியில் நடந்த வன்புணர்வு சம்பவத்-துக்குப் பிறகு ஒன் பில்லியன் ரைஸிங் நம் நாட்டில் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்பலாம். இந்த எழுச்சியின் மூலம் கீழ்த்தட்டுப் பெண்கள் மட்டுமல்ல; மேல்தட்டுப் பெண்களும் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர் என்பது தெரிய வந்திருக்கிறது.

புது தில்லி மாணவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட காணொளி ஒன்றில் பிரபல சிதார் மேதை ரவிசங்கரின் பெண் அனுஷ்கா சங்கர் தான் அனுபவித்த பாலியல் வன்முறையைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: ‘சின்ன வயதில் என் பெற்றோர்கள் மிகவும் நம்பிய ஒரு நண்பரால் நான் பல வருடங்கள் தவறான வழியில் நடத்தப்பட்டேன். என்னால் இன்னும் அந்த அதிர்ச்சி-யிலிருந்து மீள முடியவில்லை. ஒரு பெண்ணாக நான் எப்போதும் ஒருவிதமான பயத்தில் வாழ்ந்து வருகிறேன். இரவு வேளைகளில் தனியாக நடக்க பயம்; யாராவது ஒரு மனிதன் என்னிடம் நேரம் கேட்டால் பதில் சொல்ல பயம்; அதுமட்டு-மல்ல; என்னைப் பற்றிய எண்ணங்கள் நான் அணியும் உடையினாலும் என் ஒப்பனை-யினாலும் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. போதும் போதும்! நான் ஜோதிக்காகவும், என்னைப் போன்ற பெண்களுக்-காகவும், என்னுள்ளே இருக்கும் இன்னும் தனக்கு ஏற்பட்ட அவமானத்தி-லிருந்து மீளாத சிறுமிக்காகவும் குரல் எழுப்பப் போகிறேன்!’


இந்த ஒருகோடி எழுச்சியின் பின் இருப்பவர் ஈவ் என்ஸ்லர். ஒரு நாடக ஆசிரியரும், சமூக ஆர்வலரு-மான இவர்தான் ஒன் பில்லியன் இயக்கத்தை ஆரம்பித்-தவர். இவர் வி-டே என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் 15 வது வருடம் இது. இவர் தனது ‘வஜைனா மொனோலாக்’ என்ற நாடகத்தின் மூலம் பிரபலமானவர். இந்த வஜைனா என்ற சொல்லை 50 மொழிகளில் 140 நாடுகளில் சொல்லியிருப்பதாக இவர் சொல்லு-கிறார்.

பெண் என்பவள் வெறும் உடல் சுகத்துக்காகப் படைக்கப்பட்டவள்; அவளது உறுப்புகள் ஆணின் இன்பத்துக்கே; அவளது உறுப்புகள் பற்றி பேசுவதே அசிங்கம் என்ற பலதரப்பட்ட கருத்துக்களை உடைத்து அவளும் ஒரு உயிரும் உணர்வும் உள்ள ஒரு பிறவி என்று சொல்லும் ஒரு வரி வசனங்களைக் கொண்ட நாடகம் இது.

ஒன் பில்லியன் ரைஸிங் பற்றி ஈவ் என்ஸ்லர் கொடுக்கும் முக்கிய அறிமுகம் இது.
‘ஒன் பில்லியன் ரைஸிங் என்ற இயக்கம் பெண்களுக்-கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர தொடங்கப்பட்ட ஒன்று. ஒரு பில்லியன் பெண்கள், இவர்களை நேசிக்கும் ஆண்கள் எல்லோரும் இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அவரவர்களது அலுவலகங்-கள், பணியிடங்கள், பள்ளிகள், வீடுகள் ஆகியவற்றை விட்டுவிட்டு பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர வீதியில் திரண்டு வாருங்கள் என நாங்கள் அறைகூவல் விடுத்து இன்னும் சரியாக ஒரு வருடம்கூட ஆக-வில்லை. அதற்குள் எங்களுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிகள் மிகப் பெரியவை.

‘பெண்களுக்கு எதிரான சமூகக் கட்டுக்களை, பலத்த மௌனங்களை உடைத்திருக்கிறோம். பல சமூக ஆர்வலர்களை ஆதரித்து அவர்கள் மூலம் பெண்களுக்கெதிரான பல விதிகளை மாற்றியிருக்-கிறோம். ஆனாலும் எங்கள் நோக்கம் இன்னும் முழுமை அடையவில்லை. ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்-கையின்படி மூன்று பெண்களில் ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்; வேலை செய்யும் இடங்களில் முதலாளிகளால் அடிக்கப்படுகிறாள். பல்வேறு விதமான வன்முறைக்கு ஆளாகிறாள். பெண் என்ற காரணத்தால் பலவிடங்களிலும் உரிமை மறுக்கப் பட்டிருக்கிறாள். இதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவையெல்லாம் சமூக மடமைகள்.

‘பெண்களுக்கெதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர நாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் நீண்டது; எங்கள் முயற்சிகளை இன்னும் அதிகமாக்க வேண்டும். சக்தி வாய்ந்ததாகச் செய்யவேண்டும். ஆணாதிக்க அடக்குமுறை, பெண்ணுக்குரிய உரிமையை மறுத்தல் என்னும் சுவர்களை உடைத்து, பெண்களுக்கெதிரான வன்முறையை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மனப்பான்மையை மாற்ற வேண்டும். இத்தகைய கொடுமைகளுக்கு இலக்காகி, உயிர் பிழைத்து வாழ்ந்து வரும் பெண்களுக்கு அவர்களது உடல், பலம், மனஉறுதி, ஆற்றல், அதிகாரம் ஆகியவற்றை மீட்டுத் தந்து, எங்களுக்கெதிரான கொடுமைகளை இனியும் பொறுக்க மாட்டோம் என்று இந்த உலகுக்குத் தெரிவிக்க வேண்டும்.

‘ஒன் பில்லியன் ரைஸிங் இத்தனை சீக்கிரம் பரவும் என்றோ வெற்றிகரமாக நிகழும் என்றோ நாங்கள் நினைக்கவே இல்லை. எங்களது குறிக்கோள் இந்த விழிப்புணர்வை மேலும் பரவலாக்குவது. நாங்கள் எந்தவிதமான அடையாளத்துக்குள்ளும் சிறைப்பட விரும்பவில்லை.

‘பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக ஒவ்வொரு நகரமும், ஊரும், கிராமமும், மனிதனும் மன உறுதியுடன் எழ வேண்டும். நாம் எதற்காக விழிப்புணர்வு பெற்று எழ வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். பாலியல் அடிமைகளாக பெண்கள் இருப்பது நிறுத்தப்படவேண்டும். பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதை நிறுத்த வேண்டும். நமது பெண்கள், அக்கா, தங்கைகள் கற்பழிக்கப்-படுவது நிறுத்தப்படவேண்டும். இளம் ஆண்களும் பெண்களும் வன்முறை இல்லாத பாலியல் உறவு-களை பற்றிய கல்வியறிவு பெற வேண்டும்.

‘இந்த ஒன் பில்லியன் ரைஸிங் பலரையும் ஒன்று  சேர்த்திருக்கிறது. இதுவரை ஒன்றாக இணையாத குழுமங்களும், தனி நபர்களும் இந்த நற்செயலுக்காக இணைந்திருக்கிறார்கள். புதிய மனிதர்கள், புதிய குழுமங்கள், பொதுமக்கள் என்று திரள், திரளாக கை கோர்த்திருக்கிறார்கள். இதனால் பெண்களுக்-கெதிரான வன்முறைகள் உலகம் முழுவதும் பட்டி-மன்றங்களில் பேசப்படும் விஷயமாகி-விட்டது. தனி மனிதர்களிடையே ஒரு தீவிர வெளிபாட்டை உருவாக்கியிருக்கிறது. பெண்களுக்கெதிரான வன்முறை-களுக்குக் காரணம் உலகெங்கும் பரவி-யுள்ள ஆணாதிக்க அடக்குமுறை என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பெண்களுக்-கெதிரான அடக்குமுறை என்பது ஒரு தேசத்துக்கோ, இனத்துக்கோ, மதத்துக்கோ மட்டும் சொந்தமான விஷயம் இல்லை; இந்த வன்முறைகளுக்கு ஆளானது தங்கள் பிழை இல்லை; தங்களது குடும்பத்தின் தவறோ, தேசத்தின் தவறோ இல்லை என்பதை பெண்கள் உணர்ந்து தன்னம்பிக்கை பெறவும் இந்த ஒன் பில்லியன் ரைஸிங் உதவும்’.


எதிர்பாராத பல பகுதிகளில் இருந்தெல்லாம் இந்த எழுச்சிக்கு ஆதரவு கிடைத்திருப்பது ஆச்சரிய-மூட்டக்-கூடியதாக இருக்கிறது. ஆப்கனிஸ்தானிலும் பங்களாதேஷிலும் மக்கள் பேரணியாக நடந்து  சென்றிருக்கிறார்கள். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒன் பில்லியன் எழுச்சி குறித்தும் பாலியல் கல்வி மற்றும் உறவுமுறை குறித்தும் விவாதங்கள் நடை-பெற்றிருக்கின்றன. பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் சட்டப்படியாக அவற்றை எதிர்கொள்வது குறித்தும் ஜெர்மனியில் 126 நகரங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. சோமாலியாவிலும் ஆஸ்திரே-லியா-விலும் உள்ள பெண்கள் ஒன் பில்லியன் எழுச்சியில் பங்கேற்றிருக்-கிறார்கள்.

எதற்காக இந்த எழுச்சியில் பங்கேற்கிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது ஓர் ஆப்கனிஸ்தான் பெண் சொன்ன பதில் இது.‘பெண்கள் கடத்தப்படு-வதை-யும் விற்கப்படுவதையும் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதையும் எதிர்க்கவேண்டும் என்பதற்காக இதில் கலந்துகொள்கிறேன்.’

உலகம் முழுவதிலும் ஆக்ரோஷமான அலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஒன் பில்லியன் இயக்கம் பெண்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒரு முக்கிய அத்தியாயமாகத் திகழும் என்று நம்பலாம்.

ஆழம் மாத இதழில் வந்த எனது கட்டுரையை படிக்க: 1 பில்லியன் எழுச்சி சொடுக்கவும் 

சனி, 11 மே, 2013

அம்மா என்றால் அன்பு!



எல்லோருக்கும் தெரிந்தது தான் அம்மாக்களின் தினம். அன்று ஒருநாள் மட்டும் தான் அம்மாவை நினைக்க வேண்டுமா? மற்ற தினங்களில் மறந்துவிடலாமா? அம்மாக்களின் தினம் என்று வைத்ததற்கு அதுவல்ல அர்த்தம். நம் அம்மாவிடமிருந்து நாம் கற்றது என்ன? நம் குழந்தைகளுக்கு நம் அம்மாவைப் போல நாம் சிறந்த அம்மாவாக இருக்கிறோமா? இவற்றைப் பற்றிச் சிந்திக்கத்தான் இந்த நாள்.


என்ன செய்யலாம் அன்று? அம்மா அருகில் இருந்தால் வாழ்த்து அட்டை கொடுக்கலாம் நாமே தயாரித்து; பூக்கொத்து கொடுக்கலாம்; அவளுக்குப் பிடித்ததை சமைத்து அவளுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம். அவள் மடியில் தலை வைத்துப் படுத்து அவளது பழைய கதைகளைக் கேட்கலாம்.


 எல்லா அம்மாவுமே பழங்கதைகள் தான் பேசுவார்கள். அடுத்தடுத்த தலைமுறைகள் வந்தவுடன் வீட்டின் முதியவர்கள் தனித்துப் போய்விடுகிறார்கள். அவர்களது தனிமைக்கு பழைய நினைவுகள் தான் துணை.


 இவற்றையெல்லாம்விட மிக முக்கியமானது அம்மாவிடம் இருந்து நாம் என்ன கற்றோம், எதை நம் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப் போகிறோம் என்று சிந்திக்கலாம். அம்மாவிடம் நாம் ரொம்பவும் விரும்பும் குணம் நமக்கு வந்திருக்கிறதா என்று யோசனை செய்யலாம்.


மற்றவர்களுக்குச் சொல்லும் முன் நான் சற்று யோசிக்கிறேன்: நான் என்ன கற்றுக் கொண்டேன் என் அம்மாவிடமிருந்து? என் அம்மா மிக நன்றாகப் பாடுவாள். பரவாயில்லை, நாங்கள் நாலு பேருமே சுமாராகப் பாடுவோம். அம்மாவின் சங்கீத ஞானம் எங்கள் குழந்தைகளுக்கும் வந்திருக்கிறது.


 குழந்தைகளாக இருந்தபோது அம்மா தான் எங்கள் உடை வடிவமைப்பாளர்; அம்மா கையால் தைத்த உடைகள் ஏராளம். தையல் கலையை மிக ஆர்வமாகச் செய்வாள். ஊஹும்….! ஊஹும்….! நாங்கள் யாரும் இதை மட்டும் கற்கவே இல்லை.


 வீடு பளிச்சென்று இருக்கும். இந்த விஷயத்தில் என் அக்கா அப்படியே என் அம்மா! அம்மா நன்றாக சமைப்பாள். நான் என் அம்மாவிடம் சமையல் கற்றதே இல்லை. திருமணம் ஆனபின் முழுக்க முழுக்க என் மாமியாரிடம் தான் கற்றுக் கொண்டேன். அவரும் அம்மா தான் இல்லையா?


 என் அம்மாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். மிகக் கோர்வையாக எழுதுவாள். அந்தக் காலத்து இன்லேண்ட் கவரில் ஒரு துளி இடம் பாக்கி விடாமல் எழுதுவாள். அம்மாவின் முத்து முத்துக் கையெழுத்து யாருக்கும் வரவில்லை. ஆனால் எனக்கு என் அம்மாவிடமிருந்து வந்த சொத்து எழுதும் திறமை தான். எத்தனை அரிய திறமை இது! நான் எழுதுவது எல்லாவற்றையும் பிரின்ட் அவுட் எடுத்து அம்மாவுக்குக் கொடுப்பேன். என் கதைகள், கட்டுரைகள் எல்லாவற்றையும் அம்மா பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாள்.


அம்மா நிறையப் படிப்பாள். எங்கள் நால்வருக்கும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் அம்மாவிடமிருந்து வந்ததுதான். இப்போதும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பாள். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் ஈடுபாடு வந்தது அம்மாவால்தான். இப்பவும் பார்க்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு பாசுரத்தைச் சொல்லிஎன்ன தமிழ் பாரு! அருவி மாதிரி என்ன ஒரு நடை பாரு!’ என்று தானும் வியந்து எங்களையும் வியப்பில் ஆழ்த்துவாள்.


 ஒவ்வொரு முறை அம்மாவைப் பார்க்கும்போதும் அம்மா தன் டைரியை கொடுத்துப் படிக்கச் சொல்லுவாள். தான் படித்ததில் மிகவும் கவர்ந்ததை அதில் முத்து முத்துக் கையெழுத்தில் எழுதி வைத்து இருப்பாள். அம்ம்மாவின் டைரி அவளைப் பற்றிப் பேசாது; அவளது ரசனையைப் பேசும்.


 இவை எல்லாவற்றையும் விட மிக மிக அரிய சொத்து ஆரோக்கியம். என் அம்மாவுக்கு இப்போது 84 வயது. முதுமை என்பதைத் தவிர வேறு எந்தவித தொந்திரவும் அம்மாவுக்குக் கிடையாது. ( டச் வுட்!) இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தன் வேலையைத் தான் பார்த்துக் கொண்டு ஒருவருக்கு ஒரு கஷ்டம் கொடுக்காமல் இருந்து வருகிறாள். உணவு விஷயத்தில் இது கூடும் கூடாது என்பதே இல்லை அம்மாவுக்கு. மிக மிக குறைந்த அளவு தான் சாப்பிடுவாள். இரண்டு வேளை சாப்பாடு; மதியம் ரொம்ப கொஞ்சமாக சிற்றுண்டி.


 அம்மாவிடமிருந்து ஆரோக்கியம் தான் எங்கள் எல்லோருக்கும் வந்திருக்கிறது. அம்மா எங்களுக்குத் தந்த பெறற்கரிய சொத்து இது தான். வேறென்ன வேண்டும்? இதே ஆரோக்கியத்தை நாங்களும் எங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.


 நாங்கள் இப்போது இறைவனிடம் பிரார்த்திப்பது இரண்டு விஷயங்கள் தான்: இப்படியே அம்மா எந்தவித நோயும் இல்லாமல் கடைசி வரை இருக்க வேண்டும்; அம்மாவின் ஆரோக்கியம் எங்களுக்கும் வேண்டும்.



சென்ற வருட வோர்ட்ப்ரஸ் அன்னையர் தினப் பதிவு 

இதையும் படிக்கலாம்: எங்கள் பாட்டி